loader
ஐநா-வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!  இந்தியா புறக்கணிப்பு!

ஐநா-வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது! இந்தியா புறக்கணிப்பு!

 

புதுடெல்லி: இலங்கையில் 1983-ஆம் ஆண்டு தொடங்கி 2009-ஆம் ஆண்டு வரையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் மிகச்சாதாரணமாக நடந்தன. போரில்லா பிரதேசங்களில்கூட அப்பாவித்தமிழ் மக்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இந்த மானுட சோகத்துக்கு நீதி கேட்டு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 46-வது அமர்வில் இங்கிலாந்து, ஜெர்மனி, மலாவி, மாண்டிநீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினையை நேற்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை  பேசினார். அப்போது அவர், “இலங்கையில் கடந்த காலத்திலும். தற்போதும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகிற குற்றச்செயல்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்கு அளிக்க வேண்டும். இதுபற்றி அங்குள்ள இந்திய பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம்என குறிப்பிட்டார்.

மேலும், “பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படும், தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை, ஜெனீவாவில் உள்ள இந்திய பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டும்என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ‘இலங்கையில் நல்லிணக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்என்ற இந்த தீர்மானம், ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நேற்று பிற்பகலில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக, 47 நாடுகளில் 22 நாடுகள் ஓட்டுப்போட்டன. 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்கு அளித்தன.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. தீர்மானத்துக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையிலான நாடுகள் ஓட்டு போட்டதால், தீர்மானம் நிறைவேறியது. இது இலங்கை உள்நாட்டுப்போரால் பாதிப்புக்குள்ளான உலகமெங்கும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு சற்றே ஆறுதலைத் தந்துள்ளது!

 

 

 

0 Comments

leave a reply

Recent News