loader
மீண்டெழுந்த சிங்கமாக எம்.எ.சி.சி!

மீண்டெழுந்த சிங்கமாக எம்.எ.சி.சி!

(ராகவன் கருப்பையா)

கடந்த மாதம் ஓராண்டு நிறைவைக் கொண்டாடியது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்.

நிறைய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தை மக்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிற போதிலும், 'சுப்பர் சீனியர்' துன் மகாதீரின் அயராத உழைப்பை நாம் எவ்வகையிலும் ஓரங்கட்டிவிட முடியாது.

80% -க்கும் மேற்பட்ட புதியவர்களை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு நாட்டை ஆளுவது சுலபமான காரியமில்லை.

ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலையாக, 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது அவர் மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கைகளுள் ஒன்று.

ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை, அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிக்காலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக மாற்றினார்.

ஆனால் நடந்தது என்ன?

நாட்டில் மலிந்து கிடக்கும் ஊழலுக்கெல்லாம் ஒரு முடிவு வரப்போகிறது என்று எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கோ பெருத்த ஏமாற்றம்.

ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் தொடர் தலையீட்டினால் ஒரு 'பல் இல்லா புலி' யாக இயங்கி வந்த அந்த ஆணையத்தின் செயல்பாடுகள், நஜிப் காலத்தில் மேலும் மோசமானது. போலீஸ் படைத் தலைவர் மற்றும் நீதித்துறைத் தலைவர்  மட்டுமின்றி இந்த ஆணையத்தையும் தனது தலையாட்டிப் பொம்மையாக நஜிப் அமைத்துக்கொண்டார்.

துன் மகாதீரின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து மீண்டெழுந்த சிங்கமாக நடவடிக்கையில் இறங்கிய அந்த ஆணையம், நஜிப் மற்றும் அவருடைய மனைவி ரோஸ்மாவோடு, முன்னாள் துணப்பிரதமர் அஹ்மட் ஸாஹிட், முன்னாள் ‘ஃபெல்டா’ தலைவர் இசா அப்துல் சமாட், முன்னாள் தாபோங் ஹஜி தலைவர் அப்துல் அஜிஸ் முதலியோரையும் வளைத்துப்பிடித்து நீதிமன்றத்தில் ஏற்றியது.

இதனையெல்லாம் காணப் பல ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த நாட்டு மக்களுக்கு அளப்பரியா ஆனந்தம்.

தேசிய முன்னணி ஆட்சியில் கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி வரையில் ம.இ.க.வின் அரவணைப்பில் குளிர்காய்ந்து வந்த மாரியம்மன் கோயில் தலைவர் நடராஜா மற்றும் அவருடைய மகனும் கூட இந்த ஆணையத்தின் வலையில் சிக்கிக் கொண்டது கோயில் பக்தர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.

அதேபோல, 19 மில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பாக அண்மையில் பிடிபட்ட தொழிலதிபர் ஞானராஜாவும்கூட இதுநாள் வரையில் பெரிய இடத்து செல்வாக்கில் நழுவித் திரிந்தார். அவரும் அவருடைய மனைவியும் ரோஸ்மாவுடன் அணுக்கமான நட்பைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

'சட்டம் எல்லாருக்கும் சமம்' என பிரதமர் மகாதீர் அடிக்கடி வலியுறுத்தி வருவதற்கு ஏற்ப, ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்களையும் கூட இந்த ஆணையம் அணுக்கமாகக் கண்காணித்து வருவது பாராட்டுக்குரியது.

விவசாய அமைச்சர் சலாஹுடின் அயுப்பின் அரசியல் செயலாளர் 28 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கைக்கடிகாரத்தை லஞ்சமாகப் பெற்றார் என கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டார்.

பாரபட்சமின்றி, தயவு தாட்சண்யமின்றி இந்த ஆணையம் செயல்படுகிறது என்பதற்கு இது நல்ல உதாரனம்.

இருப்பினும், எல்லாரையும் ஆரஞ்சு நிறத்திலான உடைகளுடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த ஆணையம், சிலரை மட்டும் அவ்வாறு செய்வதில்லை. குறிப்பாக நஜிப், ரோஸ்மா மற்றும் அஹ்மட் ஸாஹிட் போன்றோரை ஆரஞ்சு நிற ஆடைகளில் காண ஆவலாக இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தப்பி ஓட மாட்டார்கள் என்று நாங்கள்  நினைப்பவர்களுக்கு ஆரஞ்சு நிற ஆடைகளை வழங்கமாட்டோம் என ஆணையம் கூறிய காரணம் ஏற்புடையதாக இல்லை.

எது எப்படியாயினும் புதிய அரசாங்கத்தின் கீழ்  அரசியல்வாதிகளின் அனாவசிய தலையீடு இன்றி சுதந்திரமாக தற்போது செயல்பட்டு வரும் இந்த ஆணையதின் குறியில், அடுத்து யார்? என்று மக்கள் ஆவலுடன் தினமும் காத்திருக்கின்றனர்.

'மலேசியா பாரு'வுக்கு இந்த ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு நல்ல அடிக்கல்!

0 Comments

leave a reply