loader
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ் (பாகம் 2) – இர.திருச்செல்வம் (மலேசியத் தமிழ் தேசியப் பேரவை)

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ் (பாகம் 2) – இர.திருச்செல்வம் (மலேசியத் தமிழ் தேசியப் பேரவை)

 

 

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை

……………………………………………………………………………………..

……………………………………………………………………………………..

பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை

– திருமலைச்சிறப்பு: 36: பெரியபுராணம்

பாட்டுஇயல் தமிழ்உரை பயின்ற எல்லையுள்

கோட்டுஉயர் பனிவரைக் குன்றின் உச்சியில்

சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி

நாட்டு இயல்பதனை யான்நவிலல் உற்றனன்

– திருநாட்டுச் சிறப்பு : 1 : பெரியபுராணம்

என்றெல்லாம் விளங்கியும் முழங்கியும் நாவலம் (இந்திய) தேயமெங்கும் இருந்துவந்த “தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை” என்னும் தெய்வச் சேக்கிழார் திருவாய்மொழிக்கு ஒப்பத் தமிழ் – தமிழிய – தமிழகத் தலைமைத் திறமெல்லாம் இன்று தமிழனின் மரபணுவுக்குள் ஓசையடங்கிப் பொய்யாய்ப் போய்ப்படுத்துவிட்டன.

கடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் இருந்து விளங்கிய தமிழர்தம் சமயமேன்மை – அரசமேன்மை – … எனப் பலபல மேன்மையெல்லாம், அவை இருந்த இடம் தெரியாமல் முகவரி மறைந்துபோய் மறந்துபோய்விட்டன.

இன்னமும் இத்திருப்பாடல்களைப் படிப்பவர்களெல்லாம் இருக்கிறார்கள்தான் என்றாலும், முன்னோர்களைப் போலத் தனித்தலைமையாய்த் “தேசம் எல்லாம் விளக்கிடும் தென்திசை” அறிவும் ஆற்றலும் அறமும் திறமும் பிறங்கி விளங்குகின்ற நிலைமைக்கு வருவதாக எண்ண முடியவில்லை.

ஆத்திகம் (அஸ் > ஆஸ்) = ஆம், ஆம் என ஒப்புதல், நாத்திகம் (ந + ஆஸ் > நாஸ்) = இல்லை, இல்லை என மறுத்தல். இடைக்காலத்தில் ஆரிய வேதத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் சிவநெறி ‘வைதிகச் சைவம்’ எனப்பட்டது. வேதம் > வைதிகம் என மாறுவது சமற்கிருத மொழிக்குள்ள ஒலிமரபு.

இப்பெயரீட்டு நிலையிலே கவனித்துப் பாருங்கள்! கடவுளை ஏற்பது மறுப்பது என்பதை விடவும்; ஆரிய வேதத்தை ஏற்பது – மறுப்பது என்ற கருத்தே ஓங்கி நிற்பதைப் பாருங்கள். ‘சாங்கிய மதம்’ என்பதும்கூடப் பின்னாளில் இரண்டாக்கப்பட்டது. அதன்படி, ஈசுர சாங்கியம் – நிரீசுவர சாங்கியம் என்று பகுத்துக் கூறுவதில் கடவுள் (ஈசன்) ஏற்பும் மறுப்பும் காரணமாகப் பெயர்வந்த வகை தெரிகிறது.

ஆனால், வைதிகம் – அவைதிகம் என்பது அப்படி இல்லை அல்லவா? ஆரியர்கள் கடவுளைவிடத் தம் கையில் உள்ள வேதமே பெரிதெனக் கொண்ட கொள்கைக்கு இச்சொற்களே நல்ல சான்றாகும். பட்டாச்சாரியன் மதம் கடவுளை மறுத்துவிட்டு ‘வேதம் சுயம்பு’ என்று கூறும் கொள்கை என்பது ஆத்திகமா நாத்திகமா?

ஆரியப் பிராமணியம் வகுத்து வைத்துக்கொண்டுள்ள வினைசெயல்வகைக் கட்டமைப்புக்கு வேதமே அடிமூலமாகும். வேத முனிவர்கள்தான் அவர்களின் நேரடிக் குருதிவழி மரபு முன்னோர்கள். அதனால், அவ்வேதம் அவர்களுக்குக் குடிப்பிறப்புவழி முற்றுரிமையானது. மற்றவர்களுக்கு அஃது அப்படி இல்லை.

ஆனால், ஏதோ வழிவழி – குலவழி – கோத்திரவழி உரிமை இருப்பதைப் போல ஆரியர் அல்லாத ஆரிய அறிவடிமைகள் ஆர்ப்பரித்துக்கொள்வார்கள். இவர்களாகவே ஆர்ப்பரிக்கத்தான் முடியும் அதற்கு மரபுரிமை அதிகாரம் என்பது இவர்களுக்குக் கிடையாது – கிடைக்காது.

அடுத்து, திருமூலரின் ஆசிரியர் நந்தியெம்பெருமான். முதுபழங்காலத்தில் விளங்கியிருந்த நந்தி என்பவர் வேறு; திருமூலர் காலத்தில் அவர்க்கு ஆசிரியராக இருந்த நந்தி என்பவர் வேறு. இருவரும் நந்தி என்னும் திருப்பெயர் கொண்டவர்களேயாவர்.

இருவருக்கும் காலத்தின் எல்லையால் வேறுபாடு உண்டு. மேலும், இவர்கள் அல்லாமல் நந்தி என்ற திருப்பெயரோடு விளங்கியவர்கள் பலர்; பல காலத்தவர். நந்தி என்னும் அருளாசிரியத் திருப்பெயர் பெற்று விளங்கியவர்களும் பலர் உளர். தேவாரத்தில் சமண குருமார்களாகிய நந்திப்பட்டம் பெற்றவர்களின் பெயர்கள் பட்டியல்போல் உள்ளன. இது நிற்க.

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்

வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்

செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடும்

நந்தி இதனை நவம்உரைத் தானே!

– திருமந்திரம் 1089

இப்பாட்டால், திருமூலருக்கு நந்திதான் உரைசெய்யும் வழிமுறையை அதாவது செபிக்கும் வழிமுறையைச் சொல்லித்தந்தார் என்ற செய்தி மிகத் தெளிவாக உள்ளது.

உரைசெய்தலாகிய செபிக்கும் வழிமுறை முன்பு வேறு வகையில் இருந்தது எனவும், அதில் புதியதொரு ‘மாறுதல் கண்டுகாட்டியவர் நந்தி’ என்பது ‘நந்தி இதனை நவம்(புதிதாக) உரைத்தானே’ என்ற பகுதியால் வெளிப்படுகிறது.

அந்த நந்தியாகிய ஆசான் எத்தகையவர்; அவருக்கு அவ்வாறு புதுமை செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைக் கூறும் வகையில், ‘செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி’ என்று அவர்தம் தனிச்சிறப்பைக் காட்டும் வண்ணம் நீண்டதொரு அடைமொழி கொடுத்துள்ளார்.

செந்தமிழ் ஆதி என்பது என்ன? ஏன் வடமொழி ஆதி அல்லது சமற்கிருத ஆதி தெளிந்து வழிபாடு நந்தி என்று சிறப்பு அடைமொழியைத் தரவில்லை? இவை சிந்திக்கப்பட வேண்டிய இன்றியமையாமை உள்ளவை. இந்த நந்தி ஆசான் ‘நவம் உரைத்தவர்’.

அந்த நவமான உரைத்தலும் அவர் சும்மா வாய்க்கு வந்தபடி உரைத்ததன்று. வாழையடி வாழையென வந்த தமிழ்ச்சித்தர் திருக்கூட்ட மரபுகளைத் தாங்கி அவர்களின் உள்ளமாகவும் ஓதுவமாகவும் இருக்கின்ற குற்றமில்லாததும் குறைபாடில்லாததும் ஆன நல்ல தமிழில் சொன்னார்.

அந்தச் செந்தமிழும் உலகத்தில் புதிதாக வந்ததல்ல. இந்த அருள் மரபுகளுக்கு வகைதொகைபட்ட நெறியாக நின்று செந்தமிழ் ஆகி விளங்குகின்ற மிக மூத்ததான – முதன்மை படைத்ததான ஆதிச் செந்தமிழ்.

இடையறவுபடாத அந்த மிகப் பழைமையான மரபுநெறியை ஏந்தியுள்ளது தெய்வத் தமிழ்மொழிதான் என்ற வரலாற்றுச் செய்தியையும் இதில் வெளிப்படுத்தியுள்ளார் திருமூலர். தம் குருபிரான் ஆகிய நந்தியெம்பெருமான் செந்தமிழை வழிபட்டார் என்று அவர் சொல்ல வரவில்லை. மாறாக, அவர் செந்தமிழால் அறியப்படுவதாகிய ஆதி நெறியைத் தெளிந்து இறைவனை வழிபட்டவர் என்று தெளிவாகச் சொல்கின்றார். செந்தமிழால் அரியப்படுவதாக இருந்து வந்ததுதான் அந்த ஆதிச் சிவநெறி என்பதே இங்கே அடிக்கோடிட்டுப் பார்த்து நெஞ்சிற் பதித்துக்கொள்ள வேண்டிய மூலத்தமிழ்ப் பெருஞ்செய்தி. அந்த ஆதியில் அது தனித்தமிழ் என்ற நிலையில்தான் இருந்தது.

என்றென்றும் ஆதி என்பது மூலப் பெருந்தமிழே

இதனால், நாம் அறியவேண்டுவது என்ன? ஊனுடம்பாகிய ஆலயத்தில் இருக்கின்ற உள்ளம் என்ற பெருங்கோயிலில் சீவனைச் சிவ இலங்கமாகக் கொண்டு; வள்ளல் பிரானாகிய இறைவனை உணர்ந்துகொள்ள வழிபடும் ஆதிநெறியினைக் கூறுவது செந்தமிழ் மொழியே என்பதாகும்.

ஆதியான அந்தச் செந்தமிழ் நெறியினைத் தம் காலத்தில் நேர்ந்திருந்த குறைபாடுகளை நீக்கி, பழையபடியே உலகோர்க்கு எல்லாம் “நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பரந்த அருள்நோக்கோடு மீண்டும் நன்றாகத் தமிழ்செய்யுமாறு தம்மை ‘நன்றாக இறைவன் படைத்தான்’ என்று திருமூலர் கூறுவதும் சரிதானே!

உண்மை இப்படி வெட்டவெளிச்சமாக வெளிப்படையாக இருக்கும் போது, அதை அப்படியே மூடிமறைத்துவிட்டு; ஆதிநெறியினைச் சொல்லும் தெய்வமொழி – தேவமொழி எங்கள் சமற்கிருதமாம் வடமொழியே என்று மனந்துணிந்து தகிடுதத்தம் செய்கின்றவர்களை இதற்கு மேலும் நம்பிக்கொண்டு தலையை ஆட்டுகின்றவர்கள் உண்மையிலேயே தமது மூலமரபு அறிவறிந்த தமிழர் தாமா?

வடவர்க்கும் வடமொழிவாணர் ஆகிய ஆரியப் பார்ப்பனர்க்கும் பயன்பட்டுள்ள – பயன்பட்டு வருகின்ற அவர்களின் அடிசார்ந்து கிடக்கும் தமிழர்களும் பிறர்பிறரும் தமிழ்ப் பகைவர்களே – தமிழ்ச்சமயப் பகைவர்களே என்றறிக.

இந்த உண்மையை எடுத்துச்சொல்பவர்களையும் தமிழில் – தூய செந்தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துபவர்களையும் இறைமறுப்பாளர் என்று நாத்திகப் பட்டங்கட்டி ஒடுக்கப்பார்க்கும் மனம் எத்துணைக் கொடுமையான நச்சு மனம்? யார் யாரைப் பார்த்து ‘நாத்திகன்’ என்பது? எது ‘நாத்திகம்’?

சமற்கிருத மறுப்பு என்பது சமய மறுப்பு போலவும், சமற்கிருத வேத மறுப்பு என்பது கடவுள் மறுப்பு போலவும் சிந்தனையைத் திரிக்கின்ற திறப்பாடு அவர்களின் தனிப்பெருந் திறப்பாடு. இந்தத் திறமை அவர்களின் அடிசார்ந்து தப்பாமல் நடக்கின்ற ஆசாரமிக்க அடிமைகளுக்கு அவர்களைவிட அதிகம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்து சங்கத் தலைவரைப் போன்ற சொந்த மரபுவழிக் கருத்தியல் இல்லாத இனவழியில் வந்தவர்களின் சூதும்வாதும் விளையாடுகின்ற – தமிழ்மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அவர்களைத் துண்டாடுகின்ற இந்த அறிக்கை.

இந்த வெளிப்படையான உண்மையை உணர்ந்து; இதற்கு ஆவன செய்யாமல் தமிழராய்ப் பிறந்திருந்தும் தமது பிறப்பைப் பகைவர்க்குப் பயனாக்கித் தொலைப்பவர்கள் யாரானாலுஞ் சரியே அவர்கள் நேர்மையானவர்கள் அல்லர். அவர்கள் அனைவருமே தமிழுக்கு வாய்த்த அவப்பேறுகளே என்றறிக.

இதற்கு உள்ளபடியே உடல், பொருள், ஆவி என்னும் மூன்றாலும் உழைப்பவர்களே தமிழுக்கும் அதன் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் தவப்பேறுகளாவர். இதுதான் முக்காலும் முடிந்த முடிவான உண்மை! அவமும் அன்றி; தவமும் அன்றி; நடமாடும் சவங்களாகவும் வெளிப்புறத்தில் எழில்நலம் மிக்க மண்மாண் புனைபாவைகளாகவும் இருப்போரே பலர்.

உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பல்கலைக்கழகப் பட்டப்படிப்பும் பெரும்பணம் ஈட்டும் திறனும் நன்கு அமையப்பெற்ற மிகப்பலரின் வாழ்வும் வளமும் முடத்தெங்குகளாகத் தமிழ்ப்பகைவர்க்கே பயன்பட்டுள்ளது. இன்னமும் தொடர்ந்து பயன்பட்டு வரும் வரலாறுகளும் நடப்புகளுமே அதிகத்திலும் அதிகம். தில்லையில் சிதலரிக்கவிடப்பட்ட தேவாரப் பதிகங்களின் தொகையை விடவும் சால அதிகம்.

‘நந்தமிழை வளர்ப்பவன்தான் நமைவளர்ப்பான்’ எனத்தக்கவன் ஆவான் என்பார் பாவேந்தர். நந்தமிழை நசிப்பார்க்குத் துணைபோகும் கோடரிக் காம்புகளாகி இருப்பவர்கள் யாரையும் இவ்வகையில் நம்பி அவர்களிடமிருந்து தமிழ்ச்சமய வழிகாட்டலை எதிர்பார்ப்பதெல்லாம் இலவு காத்த கிளியின் கதையாகிவிடும். அன்னியரை நமக்குள் வரும் சிக்கல்களுக்கு அறம்கூற நம்புவதும் அழைப்பதும் என்பதெல்லாம், ஒரே அப்பத்தை இரண்டு பூனைகளுக்குப் பங்குப்போட்டுத்தர நடுவராக வந்த குரங்கு அந்த அப்பத்தைத் தின்றுவிட்ட கதையாகத்தான் போகும்!

0 Comments

leave a reply

Recent News