loader
எனக்கு தைப்பிங் சுத்தமா இருக்கணும்! - மண்ணை நேசிக்கும் மாமனிதனின் கதை...

எனக்கு தைப்பிங் சுத்தமா இருக்கணும்! - மண்ணை நேசிக்கும் மாமனிதனின் கதை...

உலகின் சிறந்த தோற்றத்தை உடைய நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும் நகரம் நமது நாட்டின் தைப்பிங் மாநகரம்.
வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தனி மனிதனும் இம்மண்ணை நேசிக்கும் மாண்புக்குரியவராக இருந்தால், தைப்பிங் மட்டும் அல்ல, இந்த உலகமே அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அப்படி ஒரு மண்ணை நேசிக்கும் மாமனிதரைப் பற்றியதுதான் இந்தச் செய்தி.

நீங்கள் தைப்பிங் செல்பவராக இருந்தால் தைப்பிங் போலீஸ் நிலையத்திற்கு அருகே இருக்கும் நடைபாதை தொடங்கி, ஜாலான் ஒங் சாய்க் கெலரி பெர்பண்டாரான் தைப்பிங் வரை ஏதாவது ஓர் இடத்தில், பொறுமையாக , மிக மிக நேர்ததியாக, துப்புரவு செய்யும் ஒரு தனி மனிதரை நீங்கள் அடிக்கடி பார்க்க நேரிடலாம்.
அவர் நகராண்மைக் கழக ஊழியரோ அல்லது குத்தகை நிறுவன ஊழியரோ கிடையாது.
ஒரு தனி மனிதன். அன்றாடம் அந்தப் பகுதிகளில் சைக்கிளில் சென்று காய்கறி வியாபாரம் செய்யும் சாதாரணன்.
ஆனால் அந்தத் தனி மனிதனின் மாண்புதான் இன்று நம்மையும் நெகிழச் செய்கிறது.
இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும்  அவர் வைத்திருக்கும் தூய்மையான அன்புதான் அவரை மாண்புக்குரிய மனிதனாய் நம்மிடம் அடையாளம் காட்டியிருக்கிறது.
யார்  இவர்?
ஏன் இப்படித் தினமும் வெயில் மழை என்று பாராமல் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்?
ஒரு வேளை பைத்தியமாய் இருப்பாரோ?
என்கிற மக்களின் சந்தேகம் தீர்க்க, அவரையே அணுகி விசாரிக்கச் சென்றால்கூட தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் அவர்.
அவர் பெயர் உசேன் காசிம். ஜொகூரைச் சேர்ந்த இவர், தற்போது தனது வயது முதிர்ந்த தாயாருடன் தைப்பிங்கில் வசிக்கிறார்.
நிரந்தர வேலை இல்லை என்றாலும் சைக்கிளில் சென்று காய்கறி விற்பனை செய்வதைத் தொழிலாய் வைத்திருகிறார். அவர் செல்லும் இடங்களில் எங்கேயாவது குப்பைகள் தென்பட்டால், உடனே அவற்றை அகற்றி, சுத்தம் செய்துவிட்டுதான் நகர்கிறார்.
ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? இதனால் உங்களுக்கு என்ன லாபம்? பணம் ஏதும் வருகிறதா? என்றால், புன்னகையோடு எனக்கு தைப்பிங் சுத்தமா இருக்கணும் அவ்வளவுதான் என்கிறார்.
தைப்பிங் அழகான ஊரு, இதைச் சுத்தமா வச்சிருக்கணும். இந்த ஊரை நான் ரொம்பவும் நேசிக்கிறேன் என்கிறார்.
பணத்திற்காக இதைச் செய்யவில்லை, அதில் எனக்கு ஒரு திருப்தி. யாரிடமும் இதுவரை பணம் கேட்டதில்லை. ஒரு சிலர் தந்திருக்கிறார்கள் அதை அலட்சியப் படுத்தியதில்லை.
இங்குச் சாலைகளில் உதிர்ந்து கிடக்கும் மர இலைகள், சில நேரங்களில் சாக்கடைகளை அடைத்துவிடும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் நீர் போவதற்கு இடம் இல்லாமல் போய்விடும். இதனால், நாமதான் சிரமப் படுவோம். அந்தக் கஷ்டம் இருக்கக்கூடாது, ஊரும் அழகா இருக்கணும் என்பதற்காகத்தான் இதைச் செய்கிறேன். எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்  என் எண்ணம். என்னால் சும்மா ஓர் இடத்தில் இருக்க முடியாது என, உழைப்பின் மீதான பிரியத்தையும் வியர்வையுடன் சொல்கிறார்.

பெரிய லட்சியம் எல்லாம் இல்லை என்றாலும், ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதே இவரின் எண்ணமாய் இருக்கிறது. நிச்சயம் மோட்டார் சைக்கிள் வாங்குவேன்.
மோட்டார் சைக்கிள் வாங்கிவிட்டால் இன்னும் நிறைய இடங்களைத் தன்னால் சுத்தம் செய்ய இயலும் என்கிறார்.
எந்தவித பிரதிபலனும் பாராது மண்ணின் மீது கொண்ட அதீத நேசத்தால், பார்த்துப் பார்த்து தனது ஊரை சுத்தம் செய்யும் இவரின் நேசத்திற்கு முன்னால், நாமெல்லாம் எம்மாத்திரம்?

தூரத்தில் ஒரு சருகு பறந்து வருகிறது, இவருக்கு வேலை கொடுக்கவா? இல்லை வியர்வை துடைக்கவா என்று தெரியவில்லை!


0 Comments

leave a reply