loader
ஒரு நாள் முதல்வர்! முதல்வன் திரைக்கதை நிஜமான ஆச்சரியம்!

ஒரு நாள் முதல்வர்! முதல்வன் திரைக்கதை நிஜமான ஆச்சரியம்!

இந்தியா, உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, இன்று ஒரு நாளுக்கு (ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை) அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வரும் இவர் தான். இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார்.

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பெண்களின் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார்.

ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் இவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.

சிருஷ்டி உத்தரகன்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த குழந்தைகள் சட்ட சபையை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.

பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள் சிருஷ்டியை ஒரு நாள் முதல்வராக பதவியேற்கச் செய்வது குறித்து உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், அம்மாநிலத்தின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதனையடுத்து
சிருஷ்டி முதல்வராக செயல்படுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் கெர்சாய்ன் மாநில சட்டசபைக் கட்டடத்தில் செய்யப்பட்டது.

கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'முதல்வன்' திரைப்படத்தில் வரும் 'ஒருநாள் முதல்வர்' என்ற காட்சி சிருஷ்டி கோஸ்வாமி மூலம் இன்று நிஜமாக உள்ளது.

"இது உண்மைதானா என்பதை என்னால் நம்ப முடியவில்லை, நான் மிகவும் மகிழ்கிறேன். அதே நேரத்தில், இளைஞர்கள் மக்களின் நலன் சார்ந்து வேலை பார்க்கும் போது, நிர்வாகத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்படுவேன்" என்று இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் சிருஷ்டி கோஸ்வாமி!

0 Comments

leave a reply

Recent News