loader
இந்தியாவில் தடுப்பூசி பணி தொடங்கியது!

இந்தியாவில் தடுப்பூசி பணி தொடங்கியது!

புதுடெல்லி: இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியது. அதேபோல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசரப் பயன்பாட்டுக்கு இந்திய தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ஆம் தேதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இன்று முதல் நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த மாபெரும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

“இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளும் மற்ற நாடுகளை விட விலை மலிவானவை.

இந்தியாவில் நடைபெறுவது உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டமாகும். முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்த மக்கள் தொகையே 30 கோடிதான்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்கள் குடும்பத்தினரை கூட பார்க்காமல் பணியாற்றியுள்ளனர். கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளையும், பிரசாரங்களையும் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் மருத்துவ அமைப்பு அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது. முதல் தடுப்பூசிக்கு பின் அடுத்த தடுப்பூசி எப்போது என்பது குறித்து தொலைபேசிக்கு தகவல் வரும்" இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்!

0 Comments

leave a reply

Recent News