loader
எங்கள் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாதீர்கள்! - மிம்தா கோரிக்கை

எங்கள் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாதீர்கள்! - மிம்தா கோரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 4- மலேசியாவின் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பேருதவியாய் விளங்கும் உலோக மறுசுழற்சித் துறையை காணடித்துவிடாதீர்கள் என மிம்தா  எனப்படும் மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி வர்த்தகச் சங்கத்தின் தலைவ,ர் டத்தோ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

இந்தத் தொழிலில் அதிகமான இந்தியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் இதை நம்பி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே எங்கள் துறையில் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பது முடக்கப்பட்ட நிலையில்,  இப்போது இத்துறையில் தொடர்ந்து வேலையில் இருக்கின்ற அந்நியத் தொழிலாளர்களையும் மூன்று வருடத்திற்கு  மட்டுமே பணியில் அம்ரத்திக்கொள்ளும் நடவடிக்கை, வேதனையான விஷயமாகும்.

அந்நியத் தொழிலாளர்களை நீக்குவதற்கான முயற்சியில் இறங்குவதோடு, உள்நாட்டவர்களுக்குப் பயிற்சி வழங்கும்படி  மனிதவள அமைச்சும், உள்துறை அமைச்சும் ஒரு சேரக் கூறியிருப்பது எங்களுக்குப் பேரிடியாக இருக்கிறது.

எங்கள் துறை சார்ந்த சிக்கல்களைப் பல முறை விளக்கிவிட்டோம். உள்நாட்டவர்களுக்கு இத்தகைய கடினமான தொழிலில் விருப்பம் இருப்பதில்லை. இருந்த போதிலும் இது அரசாங்கத்தின் நிர்பந்தமாக இருப்பது, இந்தத் துறைக்கு ஒரு முற்றுப்புள்ளியாகவே இருக்கும் என டத்தோ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி கிடைக்கிறது. ஆனால், தங்கள் துறைக்கு மட்டும் ஏன் முட்டுக்கட்டைப் போடப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறையால் தவிக்கிறோம்.  இப்போது இருப்பவர்களுக்கும் காலக்கெடு கொடுப்பது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை என  கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிறுவனங்கள் மூடப்பட்டு, வேலை இழந்து தவிக்கும் அந்நியத் தொழிலாளர்களை எங்கள் துறைக்குத் தருவிக்குமாறு மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். ஆனால், அது கைக்கூடி வரும் நிலையில், இப்படி ஓர் உத்தரவு எங்களுக்கு வலியாக உள்ளது என்று டத்தோ கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

எங்கள் நிலைமை டத்தோ ஸ்ரீ சரவணனுக்கு நன்கு தெரியும். அவர் நிச்சயம்  வேலை இழந்த அந்நியத் தொழிலாளர்களை எங்கள் துறைக்கு தருவிப்பார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு  உள்ளது.

எனவே, இந்த மூன்று வருட கால அவகாசத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, டத்தோ கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News