loader
கெடா மந்திரி பெசாரின் செயல் ஏற்புடையது அல்ல! - டத்தோ ஸ்ரீ தனேந்திரன் கருத்து

கெடா மந்திரி பெசாரின் செயல் ஏற்புடையது அல்ல! - டத்தோ ஸ்ரீ தனேந்திரன் கருத்து

கோலாலம்பூர், டிசம்பர் 3- ம.இ.கா கட்சியை ரத்து செய்யவேண்டும் என்று கெடா மந்திரி பெசார் ஹாஜி முகமட் சனூசி கூறியிருப்பது ஏற்புடைய கருத்து அல்ல என, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ  ஆர்.எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.

ம.இ.கா கட்சி இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய கட்சி என்பதை கெடா மந்திரி பெசார் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தங்கள் சமுதாயத்தில் ஒரு பிரச்னை எழுந்தால், அந்தச் சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் கட்சி அது சார்பாகக் குரல் எழுப்புவது நியாயமான செயல். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதே போல் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்துப் பல ஆண்டு காலமாக அரசாங்கத்தில் இருக்கும் ம.இ.கா-விற்கு நாட்டின் சட்டத்திட்டம் நன்றாகவே தெரியும்.

எனவே, மாநிலத்தில் இப்படி ஒரு பிரச்னை எழும்போது, அதற்காக குரல் எழுப்பிய கட்சியின் தலைமையை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வினைக் காணவேண்டுமே தவிர, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மந்திரிபெசாராக இருக்கக்கூடிய ஒருவர் இப்படிக் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது என தனேந்திரன் கூறினார்.

அதோடு நாட்டில் கட்டப்பட்ட  கோயில்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும்,  தோட்டம் இருந்த சமயத்தில்  தோட்டத்தின் உரிமையாளர்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை வசதி ஆகும்.  இருப்பினும் மேம்பாடு என்ற பெயரில் தோட்டங்கள் துண்டாடப்பட்டபோது, புதிய  குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலையில், இஸ்லாம் அல்லாத  மக்களின் வழிபாட்டுத் தலங்களையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அப்போதே சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மாநில அரசு நிலம் வழங்கியிருந்தால் இப்படி ஒரு பிரச்னை எழுந்திருக்க வாய்ப்பில்லை. 

மாநில அரசு செய்தாலே எல்லாம் முறைப்படி நடந்திருக்கும். அதைச் செய்யவில்லையே ஏன்? என டத்தோ தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இனி வரும் காலங்களில் மாநில அரசு ஏற்படுத்தும் புதிய வீடமைப்புத் திட்டத்தில்,  இஸ்லாம் அல்லாத மக்களின் வழிபாட்டுக்கு  நிலம் ஒதுக்கி, அனைத்து மக்களின் இறை வழிபாட்டிற்கும் தடங்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என டத்தோ ஸ்ரீ தனேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்!

0 Comments

leave a reply

Recent News