loader
தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு...  என்ன செய்யப் போகிறார்கள் தலைவர்கள்?

தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு... என்ன செய்யப் போகிறார்கள் தலைவர்கள்?

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் நவம்பர்-27

பல்லின மக்கள் ஒன்றாய் வாழும் தேசம என்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் வாய்ஜால வார்த்தைகள் என்பது இப்போது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

ஒரு தேசத்தின் குடிமக்களுக்கு மிக முக்கியமானவை கல்வியும் மருத்துவமும்தான்.   கல்வித்துறையைக் கண்டுகொள்ளாத நாடு பின் தங்கிவிடும் என்பதே நிதர்சன உண்மை.

அத்தகைய கல்வித்துறையில் இனப்பாகுபாடு காட்டுவது என்பது நல்லாட்சிக்கு அழகல்ல.

அதிலும் தாய்மொழிக் கல்வியை நசுக்க நினைப்பது அறிவற்றவர்களின் செயல்.

உலகின் மூத்த மொழிகளில் ஒரு மொழியான தமிழ் மொழியை, நமது நாட்டிலும் போதிப்பதற்கு பள்ளிகள் இருக்கிறதே என பெருமை பாராட்டாமல், இன பாகுபாடு காட்டி, போனால் போகட்டும் என்று விடுவது எந்தவிதத்தில் நியாயம்? 

இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் தலைவர்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்  கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்,    தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 29.98 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் சமுதாயத் தலைவர்கள் மெளனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியை தமிழ் லென்ஸ் முன்வைக்க விரும்புகிறது.

கடந்த காலங்களில், குறிப்பாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் தலைமைத்துவத்திலிருந்து இந்த ஆண்டு பட்ஜெட் வரை, 50 மில்லியன் நிதி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான  பட்ஜெட்டில் 20 மில்லியன் நிதி ஒரே அடியாகக் குறைக்கப்பட்டிருப்பது ஏன்? இது  தொடர்பாக சமுதாயத் தலைவர்கள் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யாமல் மெத்தனப்போக்கைக் காட்டுவது  ஏன்? 

இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? இதை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

இது  ஒரு சமுதாயத்தின் பிரச்னை. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ம.இ.காவும்  மெளனமாக இருப்பது, இந்திய சமுதாயத்திற்குப்  பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

கட்சி ரீதியாக இல்லாமல், சமுதாய ரீதியாக தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலாக, நம் சமுதாயத்தின் உரிமைக்காக குரல் எழுப்பவேண்டும் என்பதே நமது கோரிக்கை.

மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதானிருக்கின்றனர்.  தமிழ்ப் பள்ளிக்கான நிதி ஒதுக்கீட்டை மக்கள் இன்னும் சில தினங்களில் மறந்துவிடுவார்கள் என்று மட்டும்  தலைவர்கள் நினைத்துவிடவேண்டாம். 

வஞ்சிக்கப்பட்ட 20 மில்லியன் நிதி என்பது சிறிய தொகை அல்ல. அது எந்த அளவிற்கு  தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவும் என்பதை உணர்ந்து, தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் குரலாய் தமிழ்  லென்ஸ் முன் வைக்கும் கோரிக்கை.

என்ன செய்யப் போகிறீர்கள்? 

உங்கள் நடவடிக்கையை சமுதாயம் உன்னிப்பாகக் கவனிக்கிறது!

 

0 Comments

leave a reply

Recent News