loader
அமெரிக்காவின் 46-வது அதிபர் யார்? பரபரப்பில் தேர்தல் களம்!

அமெரிக்காவின் 46-வது அதிபர் யார்? பரபரப்பில் தேர்தல் களம்!

வாஷிங்டன்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவுதான், அங்கு முடிவுகள் வெளியாவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா அச்சத்தாலும், முன்கூட்டியே வாக்கு அளிப்பதை பல மாகாணங்களும் எளிமைப்படுத்தியதாலும், இந்த முறை முன்கூட்டி வாக்கு அளித்தவர்களும், தபால் மூலம் வாக்களித்தவர்களும் அதிகம்.

கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 4.60 கோடியாக இருந்துள்ளது. இந்த முறை அது 10 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த முறையை விட இந்தமுறை வாக்குகள் அதிகம் என்றாலும், எண்ணுவதற்கு அதே எண்ணிக்கையிலான அதிகாரிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

 

மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270-ஐ கைப்பற்றிவிட்டால் அதிபர் ஆகலாம் என்பதால், நாற்காலியைத் தக்க வைப்பதற்கு டொனால்டு டிரம்பும்,  ஜோ பைடனும் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் ஜோ பைடன் இதைத் திட்டவட்டமாக நிராகரித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நமது ஜனநாயகத்தை யாரும் நம்மிடமிருந்து பறிக்கப்போவதில்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை” என கூறினார்.

ஜோ பைடன் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். டிரம்பை விட ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அரிசோனாவை ஜோ பைடன் கைப்பற்றிவிட்டால், அவர் நெவேடாவிலும், ஜார்ஜியா அல்லது பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று விட்டால் போதுமானது. அவர் அமெரிக்க ஜனாதிபதியாகி விட முடியும்.

ஜார்ஜியாவிலும், நெவேடாவிலும், அரிசோனாவிலும் கூடுதலாக வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னணியில் உள்ளார்.

டிரம்பை பொறுத்தமட்டில் அவர் பென்சில்வேனியாவில் மட்டுமே முன்னிலை பெற்று வந்தார். ஆனால் அங்கும் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். எனவே ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதி  ஆவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன!

0 Comments

leave a reply

Recent News