loader
முற்றுப்புள்ளி வையுங்கள் காமாட்சி அவர்களே...  இல்லையேல்!!!

முற்றுப்புள்ளி வையுங்கள் காமாட்சி அவர்களே... இல்லையேல்!!!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் செ-23

சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சியைக் களங்கப்படுத்தும் அளவிற்குப் பேசிய நபரின் செயல் கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணாக காமாட்சிக்கு ம.இ.கா மகளிர் அணி எப்போதும் துணை நிற்கும். ஆனால், அந்த நபர் செய்த அதே தவறை காமாட்சியும் ஒரு குரல் பதிவின் மூலம் செய்து ஒட்டுமொத்தமாக ம.இ.கா மகளிரைக் களங்கப்படுத்துவது ஏற்புடையது அல்ல என ம.இ.காவின் தேசிய மகளிர் தலைவி உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.

இந்தக் காணொளி இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட காணொளி  என எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அது இப்போது சர்ச்சை ஆனதற்கு அரசியல் ஒரு காரணமா? அப்படி அரசியல் என்றால், இப்படிப்பட்ட அரசியல் வேண்டாம். அது இந்தியப் பெண்களுக்குத்தான் தலைகுனிவு என உஷா நந்தினி தெரிவித்தார்.

ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், அண்மையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ளார். சம்பந்தபட்ட நபர் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் எனவும், ம.இ.காவும் அதைத்தான் வலியுறுத்துகிறது என உஷா நந்தினி இன்று ம.இ.கா தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்த நபர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? அந்த நபரின் கருத்துக்கு ம.இ.கா  மகளிர் அணியின் நிலைப்பாடு என்ன?  என 'தமிழ் லென்ஸ்' எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த உஷா நந்தினி, நிச்சயமாக ம.இ.கா மகளிர் அணி  மத்திய செயலவையில் இது தொடர்பாகக் கேள்வி எழுப்புவோம் என்றார். மேலும், இந்த சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக விசாரணை நடத்த ம.இ.காவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் பரிந்துரைப்போம். ஆனால் இந்த காணொலி இரு ஆண்டுகளுக்கு முன்  உள்ள நிலையில், அப்போது அந்த நபர் ம.இ.கா உறுப்பினர் இல்லை. ஆனாலும், ம.இ.கா விசாரணை மேற்கொள்ளும். மகளிர் அணியான நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காமாட்சியை வலியுறுத்துகிறோம். அப்போதுதான் இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

ஆனால், ஒட்டுமொத்த ம.இ.கா மகளிரை இழிவுபடுத்தும் விதமாக  காமாட்சி பேசுவதையும், அவருடைய ஆதரவாளர்கள் பேசுவதையும் இதோடு நிறுத்திவிட்டு அதற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும். இல்லையேல் தேசிய நிலையில் ம.இ.கா மகளிர் அணி பொங்கி எழும். போலீஸ் புகார் அளித்து சட்டநடவடிக்கை எடுப்போம். எங்களைப் பொறுத்தவரை இது ஆரோக்கியமான அரசியல்  இல்லை. கீழ்த்தரமான அரசியல். அதற்கு இதோடு முற்றுப்புள்ளி வையுங்கள் என உஷா நந்தினி கேட்டுக்கொண்டார்!

1 Comments

  • Devi
    2020-09-23 14:15:35

    உங்களுக்கு பட்ட பிறகுதான் வலிக்கிறதா? இப்போதுதான் ஒட்டு மொத்த பெண்களுக்கும் அவமானம் என பேசுகிறீர்கள். அப்போது எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்கள் அணி தலைவர் கமட்சியை இழிவாக பேசியதற்கு என்ன செய்தீர்கள்? உங்களை பற்றி பேசிய பிறகு தானே இப்போது முன் வந்து பேசுகிறீர்கள்.

leave a reply

Recent News