loader
ரவாங் தமிழ்ப்பள்ளி மண்டபத்திற்கு ஜி.வி.நாயர் வெ.150,000 உதவி!

ரவாங் தமிழ்ப்பள்ளி மண்டபத்திற்கு ஜி.வி.நாயர் வெ.150,000 உதவி!

பூச்சோங், செப். 23-

ரவாங் தமிழ்ப்பள்ளி வாரியத்தின் முயற்சியில் கட்டப்பட்டிருக்கும் புதிய மண்டபத்திற்கு குளிர்சாதன இயந்திரம் பொருத்தும் நடவடிக்கைக்காக, பூச்சோங் வட்டார தொழிலதிபரும், கொடை நெஞ்சருமான டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் 150,000 வெள்ளி வழங்கினார்.

ரவாங் தமிழ்ப்பள்ளியில் சுமார் 15 லட்சம் வெள்ளி செலவில் 1,000 பேர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், இதில் குளிர்சாதன வசதி பொருத்தப்படாமலேயே இருந்தது. 

அந்த மண்டபத்தில் குளிர்சாதன வசதிகளைப் பொருத்துவதற்கு அப்பள்ளி வாரியத் தலைவர் டத்தோ கிருஷ்ணமூர்த்தி, வாரியத் துணைத் தலைவர் டத்தோ சுரேஷ்ராவ் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் நலனுக்காக அந்த குளிர்சாதனம் பொருத்தும் நடவடிக்கைக்குத் தேவைப்படும் தொகை 150,000 வெள்ளியை, முழுமையாகக் கொடுத்து உதவ முன்வந்திருக்கிறார் டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர்.

ரவாங் தமிழ்ப்பள்ளியில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைத்து நிகழ்ச்சி நடத்தக் கூடிய அளவிற்கு மிகச் சிறப்பான மண்டபமாக இப்புதிய மண்டபம் அமைந்திருக்கிறது.

மண்டபம் முழுமைபெற்று ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போது குளிர்சாதன வசதி பொருத்த முழு உதவி வழங்க முன்வந்திருக்கும் டத்தோஸ்ரீ ஜி.வி.நாயருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ கிருஷ்ணமூர்த்தி, டத்தோ சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

குளிர்சாதன வசதி பொருத்தும் நடவடிக்கைகள் வெகு விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.

இதற்கு கிட்டதட்ட 177,000 வெள்ளி தேவைப்படுகிறது. பள்ளி வாரியத்திடம் கிட்டதட்ட 27,000 வெள்ளி நிதி இருக்கும் பட்சத்தில் எஞ்சிய தொகை 150,000 வெள்ளியை முழுமையாக வழங்க முன்வந்திருக்கிறார் டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் என்றும் அவர்கள் புகழ்ந்தனர்.

இதனிடையே வருங்கால சமுதாயத்திற்காகச் செய்யப்படும் முதலீடு, மாணவர்களிடத்தில் செய்யப்பட்டால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். அந்த வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக இது போன்ற நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளி வாரியத்தினருக்குத் தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர், இந்த நடவடிக்கையில் தம்மையும் இணைத்துக் கொண்டதன் வாயிலாக, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தம்மால் இயன்றதைச் செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News