loader
ராஜராஜ சோழனுக்கு என்ன ஆச்சு?

ராஜராஜ சோழனுக்கு என்ன ஆச்சு?

இது ஒரு கதை. கதை மட்டுமே.வரலாற்றில் நிஜமாகவே நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து காலம் காலமாகப் புனையப்பட்டு வரும் கதை.

கி.பி. 993-ஆம் ஆண்டு சோழப்படை ஈழத்தில் படையெடுப்பு நடத்தியது. அங்கு கொடுங்கோல் ஆட்சி புரிந்துவந்த ஐந்தாம் மகிந்தனிடமிருந்து மக்களுக்கு மாமன்னன் ராஜராஜசோழன் விடுதலை அளித்ததாக திருவாலங்காட்டு பட்டயங்கள் குறிப்பிடுகின்றன.

சோழப் படையெடுப்பின் விளைவாக பல நூற்றாண்டுகளாக அவர்களுக்குத் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டது. பொலனறுவை புதிய தலைநகராக உருவெடுத்தது. போரில் தோற்ற ஐந்தாம் மகிந்தன், சோழப்படையினரிடம் சிக்குவதற்கு அஞ்சி இலங்கையின் தென்பகுதிக்கு ஓடி ஒளிந்தான்.

அவ்வாறு போரில் தோற்று ஓடிய மகிந்தன், ராஜராஜ சோழனைப் பழிவாங்குவதற்குத் துடித்தான். அதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரனை களத்தில் வெல்வது சாத்தியமில்லாதது என்பதை உணர்ந்தான்.

எனவே தந்திரமாகக் கொல்ல முடிவெடுத்தான். ஒரு சிங்கள பவுத்த தொழில்முறை பெண் கொலையாளியை நியமித்தான். அந்தப் பெண் தஞ்சாவூருக்கு வந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனையில் நுழைந்தாள். ராஜராஜ சோழனின் நம்பிக்கைக்குரிய வட்டத்துக்குள் இடம்பெற்றாள்.

தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டிக் கொண்டிருந்தபோது எட்டாம் நிலையில் நின்று ராஜராஜ சோழன் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பெண், அவரைக் கீழே தள்ளிவிட்டு, அதன் காரணமாக ராஜராஜ சோழன் உயிரிழந்தார்.
என்னது?
தமிழ் மண்ணின் பெருமையான பேரரசர் ராஜராஜ சோழனும், அவரது அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போலவே மர்மமான முறையில் கொல்லப்பட்டாரா என்று ஆயிரம் ஆண்டுகள் கழித்து கொஞ்சம் லேட்டாக ‘ஷாக் ரியாக்‌ஷன்’ கொடுக்க வேண்டாம்.
முதல் வரியிலேயே சொல்லிவிட்டோம், இது ‘கதை’யென்று.

ஆனால் இன்றும் இந்தக் கதையை நம்பக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.காரணம்?
ராஜராஜ சோழனின் சமாதி.கலிங்கத்தில் தொடங்கி ஈழம் வரை பெரும் நிலப்பரப்பைக் கட்டியாண்ட மகத்தான தமிழ்ப் பேரரசனின் சமாதி, இன்றும் நாதியற்றுக் கிடக்கிறது. அது ராஜராஜனின் சமாதிதானா என்று தொல்லியல் துறையினர் இப்போதுதான் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அரசர்களுக்கு எல்லாம் அரசனான ராஜராஜ சோழனின் பள்ளிப்படை, காலம் காலமாகப் பல கோடி மக்களால் வணங்கப்பட்டு பெரும் சிறப்புக்கு உள்ளாகி இருக்க வேண்டியதே இயல்பு. அது ஒரு பெரும் சுற்றுலாத்தலமாகவும் உருவெடுத்திருக்க வேண்டும்.

அதெல்லாம் ஏனோ நடக்கவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கதைகள் புனையப்படுகின்றன. அதே நேரம் தனது ஆட்சிக்காலத்தின் ஒவ்வொரு முக்கிய சம்பவத்தையும் கல்வெட்டாகவோ, பட்டயமாகவோ ஆவணப்படுத்தும் வழக்கத்தை ராஜராஜ சோழன் கொண்டிருந்தார். அவரது வழித்தோன்றல்களும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர்.

அப்படியிருக்க ராஜராஜ சோழனின் மரணம், அவருக்குப் பள்ளிப்படை கோயில் எழுப்பப்பட்ட இடம் போன்றவற்றை மட்டும் ஏன் அவரது வழித்தோன்றல்கள் சந்தேகத்துக்கு இடமின்றி பதிவு செய்யவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

ராஜராஜ சோழன், கொல்லப்பட்டதால்தான் சபிக்கப்பட்ட தஞ்சாவூர் வேண்டாமென்று புதிய தலைநகரத்தை அவரது மகன் ராஜேந்திரசோழன் கட்டியதாகவும் ‘கதை’க்கு வலு சேர்க்கிறார்கள் சிலர்.
இதனால்தான் தன் தந்தையின் மரணத்துக்கு பழிக்குப் பழி வாங்க மீண்டும் ஈழத்துக்குப் போய், ஐந்தாம் மகிந்தனைக் கண்டுபிடித்து சிறையெடுத்து, தான் புதியதாகக் கட்டிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் ஓர் சித்திரவதை சிறைச்சாலையில் நீண்டகாலம் வைத்து மகிந்தனை துடிக்கத் துடிக்கக் கொன்றார் ராஜேந்திர சோழன் என்றும் கதை விடுகிறார்கள்.

சர்ச்சைக்குரிய ராஜராஜ சோழனின் சமாதி, இப்போது பழைய சோழத் தலைநகரான பழையாறைக்கு அருகில் உடையாளூர் என்கிற இடத்தில் இருக்கிறது. இங்கே ராஜராஜ சோழனின் பள்ளிப்படை வீடு இருந்ததாகவும், பிற்காலப் பாண்டியர் படையெடுப்பில் அது சிதைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

அந்தப் பள்ளிப்படை வீட்டில் இருந்த தூண்கள், தற்போது அருகிலிருக்கும் பால்குளத்தம்மன் கோயில் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருக்கும் கல்வெட்டு, குலோத்துங்கச் சோழன் காலத்தில் எழுதப்பட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அதை ஆராய்ந்து, அதில் இடம்பெற்றிருக்கும் ‘எழுந்தருளி நின்ற  ராஜராஜ தேவரான  சிவபாத சேகர தேவர்  திருமாளிகை’ என்கிற தகவலின் அடிப்படையில் சில விவரங்களை ‘குடவாயில் சிறப்புக் கட்டுரைகள்’ நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

உடையாளூரில் ராஜராஜ சோழன் கடைசிக்காலத்தில் தங்கியிருந்த மாளிகையாக இருக்கலாம்  அல்லது ராஜராஜ சோழனின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்ட மாளிகையாகவும் இருக்கலாம் என்கிறார். கி.பி. 1012-ல் தன்னுடைய மகன் ராஜேந்திர சோழனுக்கு இளவரசு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தன்னுடைய இறுதிக்காலத்தை அமைதியாகக் கழிக்க உடையாளூரை ராஜராஜ சோழன் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பதே வரலாற்று அறிஞர்களின் கணிப்பு.
சில கல்வெட்டுகளின் வாயிலாக ‘துலாபாரதானம்’, ‘ஹேமகர்ப்பதானம்’ உள்ளிட்ட சடங்குகளைச் செய்துவிட்டு, திருவலஞ்சுழி சேத்ரபாலத்தேவரை தங்கத்  தாமரை மலர்கள் கொண்டு வழிபட்டு அமைதியான சிவபேறு அடைய அவர் தயாராக இருந்ததாகத் தெரிகிறது.

அந்திமக்காலத்து ஆன்மீக வாழ்க்கை முறையை வானப்பிரஸ்தம் என்பார்கள். அத்தகைய வாழ்க்கை முறையை உடையாளூர் மாளிகையில் ராஜராஜ சோழன் கடைப்பிடித்து, கி.பி. 1014-ல் இயற்கையான முறையில் காலமானார் என்பதே நம்பக்கூடிய வரலாறாக இருக்கிறது. அங்கேயே அவருக்குப் பள்ளிப்படை வீடு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

இருப்பினும் ராஜராஜ சோழனின் சமாதி என்று நாம் குறிப்பிடுவதற்கு அங்கே ஆதாரமாக இப்போது இருப்பது இரண்டு அடி உயர சிவலிங்கம் மட்டுமே. பள்ளிப்படை வீடுகளின் உச்சியில் அப்போது பெரியளவில் லிங்கம் அமைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்கும் பத்து அடிக்கும் கீழே அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினால் பள்ளிப்படை வீட்டைக் கண்டுபிடித்துவிடமுடியுமென்று அப்பகுதியினர் சொல்கிறார்கள்.

உடையாளூரில் மிகப்பெரிய மணிமண்டபம் தமிழகத்தின் தலைசிறந்த மன்னனுக்கு அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கோடிக்கணக்கானோர் ராஜராஜ சோழனுக்கு வீரவணக்கம் செலுத்த முடியுமென்று மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கு விசாரணையில், உடையாளூரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கு முழுமையான ஆதாரம் தங்களிடம் இல்லையென அரசு தெரிவித்திருக்கிறது. 

அகழ்வாராய்ச்சி செய்யாமல் மேலோட்டமாக அரசு இதுபோல சொல்லக்கூடாது என்று அதிருப்தி தெரிவித்திருக்கும் நீதிமன்றம், நவீன தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு அங்கே அகழாய்வு செய்யுமாறு அறிவுறுத்தியும் இருக்கிறது.இந்த ஆய்வு முடிவுகளை வரலாற்று ஆர்வலர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், அங்கே புதைந்திருப்பது வெறும் சமாதி அல்ல. தமிழ் மண்ணின் பெருமை, தமிழ் மன்னனின்பெருமை!

நன்றி: குங்குமம் (கட்டுரையாளர்: யுவகிருஷ்ணா)

 

0 Comments

leave a reply