loader
ஜீரோ 'தமிழ்'  தமிழ் 'ஜீரோ'

ஜீரோ 'தமிழ்' தமிழ் 'ஜீரோ'

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்  மே 2-

தமிழ் மொழி, தமிழர்களின் வாழ்வியல், இனத்தின் அடையாளம்,  செம்மொழி, பழைமையான மொழி, இனத்தின் பெருமையும் அதன் நகர்வும் தாய்மொழியை வைத்துதான் உள்ளது. இப்படி எல்லாம்  சொன்னால் உங்களுக்குப் பைத்தியக்காரன்  என்று பட்டம் தருவார்கள். 'எனக்கும்தான் தமிழ் மொழி தெரியவில்லை. நான் தமிழனாக வாழவில்லையா?' என்று அவர்களை உதாரணப்படுத்தி, நியாயப்படுத்தி தமிழை ஜீரோ ஆக்கிவிடுவார்கள், சில தமிழ் தெரியாத ஜீரோக்கள்.

இங்கு மொழியால் பிரச்னை இல்லை. சிலரது பந்தா, நவீனம், நுனி நாக்கில் ஆங்கிலம், பகட்டு வாழ்க்கை... இதுதான் தமிழைக் கற்றுக்கொள்ளவோ அல்லது மதிக்கவோ தடையாக உள்ளது.

தமிழ் எனக்குச் சோறு போடுமா? பிரியாணி போடுமா? என்று கேட்கும் சில தீனிப்பண்டாரங்களும் உண்டு.

தமிழ் படித்தால் வேலைக்கு, சோத்துக்கு என்ன செய்வது? ஆங்கிலம் சோறு போடும். எங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவது, நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது  இந்தச் சமுதாயத்தில் எங்களை அறிவார்ந்த சமுதாயமாகக் காட்டும் என்று மனக்கோட்டை கட்டி  இந்த 21-ஆம் நூற்றாண்டில் தமிழை ஜீரோவாக்க அனைத்து வேலைகளையும்  செய்யும் அறிவார்ந்த ஜீரோக்களே...

உங்களுக்கு அழுத்தமாகச் சில விஷயங்களைக் கூற கடமைப்பட்டுள்ளேன், உங்கள் தமிழ்ச் சகோதரனாய் ...

இந்த நாட்டில் தமிழை வாசிக்கத்  தெரியாமல் நேசிக்கத் தெரியாமல் அதிகமான தமிழர்கள் உள்ளனர். அதே சமையத்தில் தமிழை வாசித்து, நேசித்து வாழ வைக்கும் தெலுங்கு, மலையாள சகோதரர்களும்  உள்ளனர். நிஜத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் மலேசியாவில்  50 விழுக்காட்டு இந்தியர்கள்,  தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல்  வாழ்கின்றனர். அதில் 45 விழுக்காட்டினர் தமிழர்கள்.

தமிழ் தெரிந்தும், தமிழால் உயர்ந்தும், ஆங்கிலேய உலகத்தில் வாழும் இந்தியர்கள்  15 விழுக்காட்டினர். அதில் தமிழர்கள் 8 விழுக்காட்டினர் .

இந்தியர்களின்  தொடர்பு மொழியாகத் தமிழைக் கருதி,  இந்த நாட்டில் தமிழைக் கற்று நேசித்து வாழவைக்கும் தமிழ்த்தாயின் பிள்ளைகளான மலையாள, தெலுங்கு நண்பர்கள் 10 விழுக்காட்டினர்.

தமிழனாகப் பிறந்ததை எண்ணிப் பெருமை கொண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றுபவர்கள் 25 விழுக்காட்டினர்.

இங்குத் தமிழ் தெரியாத ஜீரோக்கள் அதிகம் என்பதை இந்தத்  தமிழ்ச் சமூகம் உணரவேண்டும்.  இந்த அடைவு நம் மொழிக்கு எவ்வளவு பெரிய பேராபத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தப் போகிறது என்பதை  இன்னமும் விளங்கிக்கொள்ளாமல் பலர் உள்ளனர்.

இங்கு நான் எழுதும் இந்தக் கட்டுரையை, தமிழை நேசிக்கும் 35 விழுக்காட்டு இந்தியர்களும் படித்து, நாம் எதிர்கொள்ளப் போகும் ஆபத்தை அந்த 50 சதவிகித மக்களுக்குச் சொல்லுங்கள். தமிழ்க்கல்வியில் அவர்கள்  ஜீரோவாக இருந்தால், தமிழும் ஜீரோ ஆகிவிடும் என்பதை எடுத்துக்கூறுங்கள்.

கடந்த 20 வருடங்களாக இந்த நாட்டில் ஒளித்துக்கொண்டிருக்கும்  ஒரே பழிச்சொல் , 'நான் தமிழ்ப்பள்ளியில் படிக்கவில்லை; எனக்குத் தமிழ் தெரியாது. என் பெற்றோர் எங்களைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கவில்லை' என்பதுதான்.

இங்குப் பலர் விளையாடும் பப்-ஜி விளையாட்டை எந்தப் பள்ளியில் பயின்றீர்கள்? நினைவு தெரிந்த நாள் முதல் காரோட்ட , மோட்டார் சைக்கள் ஓட்ட , ஃபேஸ்புக், டிக் டாக், இணையதளத்தில் பொருள் வாங்குவது இவற்றையெல்லா. எங்குக் கற்றீர்கள்? ஆர்வத்தின் அடிப்படையில், பிறருக்குத் தெரியும் விஷயம் நமக்கும் தெரியவேண்டும் என்கிற நோக்கில்,  நாமும் அப்டேட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே .
அந்த ஆர்வம் ஏன் தமிழைக் கற்றுக்கொள்ள வரவில்லை? காரணம் அலட்சியம். வாழும் வரை நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உருவாகும். ஆனால் அடிப்படையைக் கற்கவில்லை எனில் பின்னர் மொழி தெரியா அநாதையாகத்தான் திரியும் நம் சந்ததி. இதில் என்ன தடை?

பிற மொழியில் புலியாக இருந்து, தாய் மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாததற்கு ஒரே காரணம், தாய்மொழியால் உங்களுக்குப் பயன் இல்லை என்ற எண்ணம்தான். சீன மொழி காற்றால் வங்கியில் , தனியார் நிறுவனல்த்தில் வேலை எளிதில் கிடைக்கும். ஆங்கிலப் புலமை இருந்தால்,  உலகத்தை வலம் வந்து சாதனை புரியலாம்  என்ற எண்ணம்.  தமிழ்? வழக்கு மொழியா? வணிக மொழியா? இல்லை ஆட்சி மொழியா? என்ற கேள்வி?
உண்மை உங்கள் ஆதங்கம். சீன மொழியை வணிக மொழியாகக் கொண்டுவந்தது அந்தச் சமூகம். தமிழைக் கீழே இறக்கி வைத்து அழகு பார்த்தது இந்தச் சமூகம்.

நம்முடைய முன்னோர் வாழ்ந்த காலத்தில் மற்ற மொழிக்கு வழிகாட்டியாக இருந்தது தமிழ் மொழி.  மற்ற மொழிக்கு ஆய்வியல் மொழியாக இருந்தது. அறிவியல் மொழியாக இருந்தது. இந்த மொழி வணிக மொழியாகவும் இருந்தது. அது என் பாட்டன் காலத்தில். அது உலகத்திற்கே தெரியும். நிலாவிற்கு மனிதன் செல்வதற்கு முன்பே கிரகத்தை, காலத்தைந்  கணித்த மொழி.  இன்னும் பல விஞ்ஞான மேதைகள், பழங்காலத்து அறிவியலைத் தேடி அலையும் அறிவியல் மொழி. பல இயற்கை மருத்துவ குறிப்புகளை  வைத்துள்ள மருத்துவ மொழி. தமிழில் இருந்து கடன் வாங்கி பிறந்த மொழிகள் வாழ வழி உண்டு. முன்னோர்கள் கட்டிக்காத்த உயர்ந்த மொழி இன்று சோறு போடுமா? என்ற நக்கல் சொல்லுக்கு ஆளாகி நிக்கிறது.
இத்தனை சிறப்பு மிக்க மொழியை ஏன் வணிக மொழியாக, விஞ்ஞான மொழியாக, கணித மொழியாக  நாம் தற்காக்கவில்லை?  காரணம் நமது பெரியவர்கள் சொன்னது போல், 'இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை' தான் நம் கதையும்.

உங்களுக்குத் தமிழ்க் கல்வி வேண்டுமா? வழியும் உண்டு.
நாட்டில் பல அரசு சாரா இயக்கங்கள் இயங்கி வருகிறது.
நமது பிரதமர் துறையின் கீழ் செயல்படும் 'மித்ரா' அமைப்பின் வழி  மானியம் பெற்று , ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு,  இலவச அடிப்படை  தமிழ்க்  கல்வி பயிற்சியை இந்த விடுபட்ட மக்களுக்கு இலவசமாக வழங்குங்கள். அடிப்படை தமிழைக் கற்றால், அடுத்த நிலை தமிழின் படைப்பைத் தேடிச் சமூகம் நகரும்.
மொழியின் மேம்பாட்டிற்கு அரசு உதவுமா? அதனைச் சாத்தியமாக்க அரசு சாரா இயக்கம் தோள் கொடுக்குமா? இவை அனைத்தையும் செய்தும் ஆர்வம் இல்லாமல் மக்கள் முன் வரவில்லை என்றால், தமிழும் ஜீரோ,  தமிழன்டா என்று வாய்ச் சவடால் விடும் நீங்களும் ஜீரோ!

1 Comments

  • ஜான்சன் விக்டர்
    2019-05-02 06:44:49

    அருமையான பதிவு

leave a reply

Recent News