loader
பயங்கர வெடி விபத்து... சிதைந்த பெய்ரூட் துறைமுகம்! 78 பேர் பலி -  4,000 பேர் படுகாயம்!

பயங்கர வெடி விபத்து... சிதைந்த பெய்ரூட் துறைமுகம்! 78 பேர் பலி - 4,000 பேர் படுகாயம்!

பெய்ரூட்: அமைதியாக இருந்த லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் திடீரென கேட்ட வெடிச்சத்தம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடந்ததை உணரும் முன்பே கட்டிடங்கள் சிதறின. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பூமியே நழுவுவது போல இருந்தது என்றும், அணுகுண்டு வெடித்தது போல இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒருவித அச்சத்துடனேயே பேசுகிறார்கள். உள் நாட்டு போர், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் லெபனானில் நேற்று நடந்த வெடி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 4000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

வெடி விபத்திற்கு அருகிலிருந்த கட்டிடங்கள், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் என எதுவுமே தப்பவில்லை எல்லாமே வெடித்துச் சிதறின. நகரின் பல இடங்களில் பூமி குலுங்கியது. கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

இந்த வெடிவிபத்து பெய்ரூட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுகளில் உணரப்பட்டுள்ளது. போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்து எதனால் நிகழ்ந்தது யார் செய்த சதி? தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பேசிய லெபனான் பிரதமர் ஹசன் டிஅப், நட்பு நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் லெபனானுக்கு உதவ முன்வந்துள்ளது.

வெடி விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்ததாகவும், நான்காயிரத்துக்கும் அதிகமானோர் படு காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது!

 

0 Comments

leave a reply

Recent News