loader
15 -வது பொதுத்தேர்தலுக்குத் தயார் நிலையில் உள்ளோம்! - தக்கியுடீன் ஹசான்

15 -வது பொதுத்தேர்தலுக்குத் தயார் நிலையில் உள்ளோம்! - தக்கியுடீன் ஹசான்

கோலாலம்பூர்  ஜூலை 16-

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில்  பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ஸ்ரீ மாட்சீர்  காலிட்  15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள மலேசியத் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளதா?  கோவிட்-19 காலகட்டத்தில் இயந்திர முறையில்  வாக்களிப்பு  முறை அறிமுகப்படுத்த   முயற்சி எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப்  பதில் அளித்த  பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடீன் ஹசான், எந்த நேரத்திலும் 15 வது பொதுத்தேர்தலை நடத்த  தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. அதிலும் இந்த கோவிட்-19 காலகட்டத்தில்  புதிய விதிமுறையில் எப்படி வாக்களிப்பது என்பதை சீனி சட்டமன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியும் காட்டியுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதோடு   15 வது பொதுத்தேர்தல் சமயத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த  அதிகமான வாக்களிப்பு மையங்களை உருவாக்க  தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.

இதற்காக  கூடுதல் நிதியும்  ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய வாக்காளர்கள்  பதிவு மற்றும் வாக்களிப்பு இட மறுசீரமைப்பு தொடர்பான முயற்சிகளும் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இயந்திரம் வழி வாக்களிக்கும் முறையை  மலேசியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன் அவசியம், பாதுகாப்பு இவை  எல்லாம் ஆராயப்படுகிறது.  இக்காலகட்டதில் அதனைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது என தேர்தல் ஆணையம் கருதினால், அரசு அதனைப் பரிசீலனை செய்யும். ஆனால், இந்த முறையில் சில பலவீனங்கள் இருப்பதாலும், வாக்களிப்பு ரகசிய பாதுகாப்பு போன்ற அம்சங்களில் இன்னும் திருப்தி இல்லாததாலும் தேர்தல் ஆணையம் இன்னமும் இயந்திர முறை வாக்களிப்பை ஆய்வு செய்து வருகிறது.

இந்த முறையை  இந்தியா, பிரேசில், சுவிட்சர்லாந்து இன்னும் பல நாடுகள் பயன்படுத்தினாலும், இந்த முறையில் பலவீனம் இருப்பதால், இதைப் பயன்படுத்திய சில நாடுகள்   மீண்டும்  பழைய முறைக்கு திரும்பிய வரலாறும் உண்டு.

ஆகையால், தற்போது கோவிட் 19 காலகட்டத்தில் விதிமுறைக்கு உட்பட்டு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயார் என  டத்தோ தக்கியுடீன் ஹசான் இன்று  நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்!

0 Comments

leave a reply

Recent News