loader
காரசாரமான கூட்டமா?  சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா  போட்டியிடாதா?

காரசாரமான கூட்டமா? சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா போட்டியிடாதா?

(வெற்றி விக்டர்)

சிலாங்கூர் ஜூன் -16

அண்மையில் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி கூட்டம் நடைபெற்றதாகவும்,  சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர்  டான் ஸ்ரீ நோர் ஒமார்  தலைமையில் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

அந்தக் கூட்டத்தில், இனி வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் உள்ள உறுப்புக் கட்சிகள், சிலாங்கூரில் போட்டியிட்டு தோற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளைத் திரும்பக் கேட்டால், அது சரியாக இருக்காது என அறிவுறுத்தப்பட்டதாம்.

இம்முறை  வேறு மாதிரியான வியூகத்தைக் கொண்டு அந்தத் தொகுதிகளைக்  கைப்பற்றுவதற்கு தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்  ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டதாகவும், அதன் பின் அந்தக் கூட்டம் சற்றுக் காரசாரமாக நடைப்பெற்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் ம.இ.கா சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த முறை ம.இ.காவிற்கு சிலாங்கூர் மாநிலத்தில் அதிக வாய்ப்புக் கிடைக்காமல் போகலாம். அதே சமயம் அந்தத் தொகுதிகளில் பாஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே ம.இ.கா தாரை வார்த்துக் கொடுத்த கேமரன் மலை தொகுதி ம.இ.கா வசம் வருமா எனத் தெரியாத சூழலில், சிலாங்கூரிலும் ம.இ.காவிற்கு வாய்ப்பு இல்லை என்றால், எஞ்சியுள்ள தாப்பா, சுங்கை சிப்புட், சிகாமாட், போர்ட்டிக்சன் போன்ற நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டும்தான் ம.இ.கா  வசம் இருக்குமா? அல்லது வேறு புதிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா போட்டியிடுமா? இல்லை, நாடாளுமன்றத்தைக் குறைத்துக்கொண்டு, சட்டமன்றத்தைக் கூடுதலாகப் பெற்று செனட்டர் நியமனங்களை ம.இ.கா  அதிகரித்துக்கொள்ளுமா? 

இதுதான் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ள  கேள்வியாகும்.

இதனிடையே  15-வது பொதுத்தேர்தல் தொடர்பாக, தேசிய முன்னணி தலைமைத்துவம் இன்னும் எந்த ஒரு கூட்டத்தையும் இதுவரை நடத்தவில்லை என, ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியதாக, தமிழ் பத்திரிகையில் இன்று (செவ்வாய் கிழமை)  செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த பொதுத்தேர்தலில் ம.இ.காவிற்கு எத்தனை நாடாளுமன்றங்கள்?  எத்தனை சட்டமன்றங்கள்? ஒதுக்கப்படும் என்ற விவரங்கள் தேசிய முன்னணியின்  கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். தேசிய  முன்னணியின் வெற்றியை உறுதிசெய்ய சில மாற்றங்கள் தேவை என்றால், அதற்கு ம.இ.கா ஒத்துழைக்கும். ஆனால், அப்படி ஒரு சூழல் இப்போது ஏற்படவில்லை என டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, தேசிய கூட்டணியை உருவாக்க அம்னோ ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சிகளான ம.இ.கா மற்றும் ம.சீ.ச-வின் செல்வாக்கு சரியும் நிலை ஏற்படலாம் எனவும் பேசப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News