loader
அரசியல் முதிர்ச்சியுடன்  அரசியல் தலைவர்கள் செயல்படவேண்டும்!  - மாமன்னர் அறிவுறுத்தல்

அரசியல் முதிர்ச்சியுடன் அரசியல் தலைவர்கள் செயல்படவேண்டும்! - மாமன்னர் அறிவுறுத்தல்

கோலாலம்பூர் மே-18

மலேசிய நாடாளுமன்ற அவையைத் தலைமை தாங்கி ஆதிகாரப்பூர்வமாக இன்று  தொடங்கி வைத்த  மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா, அரசியல் தலைவர்கள்  அரசியல் முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 காலகட்டத்தில்  மக்கள் நலன் கருதி சரியான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.  அதோடு, முதல் நிலை சேவையாளர்களின் கடமையும் அற்பணிப்பும் பாராட்டத்தக்கது என கூறிய மாமன்னர், அவர்களைப் பாராட்டும் வகையில் அவையில் இருந்த அனைவரையும் எழுந்து நின்று கைத்தாட்டமாறு கூறினார். பின்னர் மாமன்னர் உட்பட அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி சேவையாளர்களைப் பாராட்டினர்.

மலேசிய அரசியல் நெருக்கடியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவரைப் பதவி விலக வேண்டாம் எனத் தாம் பணித்ததாகவும், இருப்பினும் அந்த லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர்  அதே நிலைப்பாட்டில் இருந்ததால், அடுத்த  பிரதமரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோடு தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகப் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் இருக்கவேண்டும் எனத் தாம் அறிவுறுத்தியதாகவும் மாமன்னர் நாடாளுமன்ற அவையில் தெரிவித்தார்.

அதோடு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித் தனியாக நேர்காணல் செய்து, அதன் பின் அனைத்து அரசியல் கட்சி தலைமையுடனும் ஆலோசித்து, பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் பெயரை முன்மொழியும் படி தெரிவித்தேன். அதன் அடிப்படையில் மலேசிய நாட்டின் ஜனநாயக முறைப்படி  அதிகப் பெரும்பான்மை ஆதரவை நிரூபித்து டான் ஸ்ரீ முகைதீன் யாசின் பிரதமராகப் பதவி ஏற்றார் என மாமன்னர் தெரிவித்தார்.

இந்த கோவிட்-19 காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள் அரசியல் முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும். மலேசிய மண்ணின் பிள்ளையாக ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். அதே நேரத்தில் அரசியல்  கருத்து வேறுபாடுகள் இதற்கு முன் நடந்ததுபோல் நாட்டை  நிலைகுலைய வைத்துவிடக்கூடாது.  அதைத் தாம் விரும்பவில்லை என மாமன்னர் தெரிவித்தார்.

மலாய் அரச அவைகளையும் அரசியல் தலைவர்கள் மதிக்கவேண்டும். மலேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் கருத்துகளைக் கூறுவதை  அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என மாமன்னர் நினைவுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும், மக்கள் வேலைகளை இழக்காமல் வறுமையின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதிலும், அவர்களது சுகாதாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தும் வகையில், அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என  மாமன்னர் அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

இந்த நாடாளுமன்ற அமர்வில்  பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன், முன்னாள் பிரதமர்  துன் டாக்டர் மகாதீர் முகமட், டத்தோ ஸ்ரீ அன்வார், டத்தோஸ்ரீ நஜிப் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பலர் கலந்துகொண்டனர்!

0 Comments

leave a reply

Recent News