loader
கட்சித் தாவும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகள் பறிக்கப்பட வேண்டும்!

கட்சித் தாவும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகள் பறிக்கப்பட வேண்டும்!

கோலாலம்பூர், மே 13

கட்சித் தாவும் தலைவர்களின் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் உடனடியாகப் பறிக்கப்பட வேண்டும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் புதிய சட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் தோற்றுநர் யு. தாமோதரன் வலியுறுத்தினார்.

கோவிட்-19 தொற்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா கோவிட்-19 தொற்றின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. ஆங்காங்கே மக்கள் கோவிட்-19 தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுதான் வருகின்றனர்.

கோவிட்-19 தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் துறைகள் அனைத்தும் முடங்கிப்போயின. நாட்டின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இதில் இருந்து நாடு எப்போது விடுபடும்  என நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் கட்சித் தாவிக் கொண்டு நாட்டில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இப்போது கூட கெடாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் எனப் பல தலைவர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநல நடவடிக்கையால் நாட்டில் தொடர்ந்து நிலைத்தன்மையில்லா அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அரசியலில் அடுத்த என்ன நடக்குமோ? என யாருக்கும் தெரியவில்லை.

தங்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர்.

ஆனால், வெற்றிபெற்ற பின் மக்களுக்குச் சேவையாற்றுகிறார்களோ இல்லையோ சுயலாபத்திற்காக கட்சித் தாவிக்கொள்கின்றனர்.

கடந்த காலத்தில் கட்சித் தாவல் நடவடிக்கைகள் அதிகம் இல்லாமல் இருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கட்சித் தாவலால் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையை இழக்கின்றனர். ஆகையால், இந்தக் கட்சித் தாவல் நடவடிக்கைகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு கட்சியை பிரதிநிதித்து வெற்றிபெறும் வேட்பாளர்கள் அடுத்த தேர்தல் வரை வேறு எந்தக் கட்சிக்கும் தாவக்கூடாது. அப்படியே தாவ விரும்பினால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் பறிக்கப்பட்டு அங்கு இடைத்தேர்தல் வரவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் புதிய சட்டத் திட்டங்களை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று யு. தாமோதரன் கேட்டுக்கொண்டார்!

 

0 Comments

leave a reply

Recent News