loader
மே 18  காலம் வைத்த ஆப்பு!  நஜீப் - மகாதீர், அன்வார் - மகாதீர், முஹைதீன் - மகாதீர்  அதிர வைக்கும் அரசியல் அமர்வு!

மே 18 காலம் வைத்த ஆப்பு! நஜீப் - மகாதீர், அன்வார் - மகாதீர், முஹைதீன் - மகாதீர் அதிர வைக்கும் அரசியல் அமர்வு!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே- 12

எதிர்வரும் மே 18-ஆம் தேதி தொடங்கும்   நாடாளுமன்றக் கூட்டம். மலேசிய அரசியல் வரலாற்றின் ஓர் ஆச்சரியப் பக்கமாய் அமையப்போகிறது. 

76 வருட அரசியல் ஆளுமை கொண்ட துன் டாக்டர் மகாதீர், எதிர்கட்சி நாற்காலியில் முதல்முறையாக அமரவிருக்கிறார், டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையில். 

டான் ஸ்ரீ  முஹைதீன் தலைமையில்,  மீண்டும் ஆளும்கட்சி வரிசையில் அமரவிருக்கிறார் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்.  

இந்த இடமாற்றக் காட்சி, துன் டாக்டர் மகாதீர் கனவு கண்ட 'வாவாசான் 2020'-ல் அரங்கேற  விருக்கிறது என்பதுதான் காலம் வைத்த ஆப்பு. 

ஈராண்டுகளுக்கு முன்பு இதே மாதம்  9 -ஆம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர்  பிரதமராகவும், பிரதமர் நாற்காலியைத்  தற்காக்க  முடியாத முன்னாள் பிரதமராக  நஜீப்பும் இடம்மாறினார்கள். 

அதே சமயம்  முதல் முறையாக எதிர்கட்சி நாற்காலியில்  அமர்ந்த  முன்னாள் பிரதமராக நஜீப்தான் இருந்தார் .இப்போது அந்தப் பட்டியலில் இரண்டவதாக இடம்பிடிக்கிறார் மகாதீர்.

மே 18 அன்று, இருவரும் இடம் மாறி அமரும் அந்தத் தருணம்  எதற்கு என்றால், பிரதமர்  நாற்காலி யாருக்கு? என்பதைத் தீர்மானிப்பதற்காகத்தான். 

முதல் முறையாக பிரதமர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மலேசிய நாடாளுமன்றத்தில்  அரங்கேறவிருக்கிறது. இது வெற்றியடையுமா?  டான் ஸ்ரீ முஹைதீன் பதவி  இழப்பாரா?   இல்லை தற்காப்பாரா?  அன்வாரின் பிரதமர் கனவு பலிக்குமா? இல்லை 76  ஆண்டுகள் அரசியல் ஆளுமை  கொண்ட மகாதீர் மீண்டும் பிரதமர் ஆவாரா? அல்லது இரு தரப்பின் கனவையும் கலைக்கும் விதத்தில், தேசிய முன்னணி  பொதுத்  தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்குமா? - கேள்விகளுக்கான விடை விரைவில் தெரியும்.

ஒரு கட்சி இரண்டாக உடைந்து, ஆளும் கட்சி நாற்காலியிலும்,  எதிர்கட்சி நாற்காலியிலும் அமரவுள்ளது. அதோடு, நீண்டகாலமாக எதிர்கட்சியாக இருந்த ஜ.செ.க, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடம்மாறி மீண்டும்  எதிர்கட்சியாகவும், நீண்டகாலமாக ஆளும்கட்சியாக இருந்த தேசிய முன்னணி அதே போல் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆளும்கட்சி தரப்பாக அமரும் அவை தான் மே 18.

நஜீப் பிரதமராக இருந்த காலத்தில் துணைப் பிரதமராக இருந்த  டான் ஸ்ரீ முஹைதீன்  பிரதமராக அமர, அவர் அருகில் நஜீப்பும்....

அதே போல் மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில், துணைப் பிரதமாரக இருந்த  டத்தோ ஸ்ரீ அன்வார் எதிர்கட்சித் தலைவராக அமர, அவர் அருகில் மகாதீரும் அமரப்போகும் நாடாளுமன்ற அவைதான்  மே 18.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்மனிதவள அமைச்சராக முதல் முறையாக குலசேகரன் நாடாளுமன்றத்தில் அமர, அவரைக்  கேள்விகேட்ட ம.இ.காவின் பிரதிநிதியாக இருந்த  ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்தான். அவரே இப்போது முதல் முறையாக  முழு அமைச்சராக, அதுவும்  குலசேகரன் பதவி வகித்த மனிதவள அமைச்சின் அமைச்சாரக நாடாளுமன்றத்தில்  அமரும் அவை மே18.

இது பல சரித்திர சுவாரசியத்துடன்  கூடப் போகும்  நாடாளுமன்ற அவை. 

இந்த மோதலை அன்வார் - முஹைதீன்  அரசியல் களம் என்றும் பார்க்கலாம்....

மகாதீர் - நஜீப் அரசியல் களமாகவும் பார்க்கலாம். 

ஆனால் இதில் ஒளிந்திருக்கும் இன்னொரு அரசியல்  மகாதீர் - அன்வாரின் தீராத அரசியல்!

0 Comments

leave a reply

Recent News