loader
மலேசிய முன்னேற்றக் கட்சி ஏற்பாட்டில் இரத்த தானம்!

மலேசிய முன்னேற்றக் கட்சி ஏற்பாட்டில் இரத்த தானம்!

ரவாங், ஏப்.26:

கோவிட்-19 தாக்கத்தின் விளைவாக சுகாதாரம் தொடர்பான பல்வேறு சிக்கலை மக்களும் அரசும் எதிர்கொண்டிருக்கின்ற இந்த வேளையில், மருத்துவத் துறை இரத்தப் பற்றாக்குறை சிக்கலை அண்மைக்காலமாக எதிர்கொண்டு வருவதை அறிந்து, எம்ஏபி சார்பில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏப்ரல் 24 சனிக்கிழமை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை, தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தானே இரத்தம் கொடுத்து தொடங்கி வைத்தார் என்று  எம்ஏபி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் அ.குமரன் தெரிவித்தார்.

கட்சி உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் அதிகமான எண்ணிக்கையில் இரத்தம் கொடுக்க முன்வந்தாலும் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு 55 பேர் மட்டும் இரத்தம் வழங்க அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டின் மையப் பகுதியில் மட்டுமல்ல; நாடு முழுவதும் இரத்தத்தின் தேவை அதிகரித்துவரும் இந்த நிலையில், இரத்த சேமிப்பு வங்கியில் கையிருப்பும் குறைந்து வந்தது. இந்த நெருக்கடியான தருணத்தில் மலேசிய முன்னேற்றக் கட்சி புதிய தெம்பையும் நம்பிக்கையையும் அளித்திருப்பதாக தேசிய இரத்த வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரத்த தான முகாமிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்த குமரன், ரவாங் அருள்மிகு மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஆதரவுடன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற எம்ஏபி சிலாங்கூர் மாநில பொறுப்பாளர்கள் இரவு பகல் பாராது பணியாற்றினர் என்றார்.

கொரோனா ஆட்கொல்லி கிருமி தாக்கத்தின் விளைவாகப் பலவித பொருளாதா, சமூக சிக்கலுக்கெல்லாம் ஆளாகி இருக்கும் இந்த நேரத்திலும் சமூக அக்கறையுடன் இரத்தம் அளிக்க முன்வந்த கட்சியினருக்கும் ஆர்வலர்களுக்கு எம்ஏபி  சார்பில் நன்றி தெரிவிப்பதாக சான்றிதழை வழங்கும் முன் பேசிய கட்சித் தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார். நிறைவாக, குருதிக் கொடை அளித்த 55 பேருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது.

தேசிய இரத்த சேமிப்பு வங்கியில் இருந்து டாக்டர் அஸ்மின் பின் முகமட் கலந்து கொண்டு இரத்த சேமிப்பு நடைமுறையை ஒழுங்கு படுத்திய வேளையில் இதன் தொடர்பில் உரிய பாதுகாப்பு அளித்த காவல் துறையினருக்கு எம்ஏபி நன்றி தெரிவிக்கிறது. 

குறிப்பாக, கோவிட்-19 கிருமி தாக்கத்தினால் நடமாடவும் சக மனிதர்களை சந்திக்கவுமே தயக்கம் காட்டுகின்ற இந்தத் தருணத்தில் தேசிய உணர்வோடும் சமூக அக்கறையோடும் துணிந்து இரத்த தானம் செய்ய முன்வந்த மனிதநேய அன்பர்களை எம்ஏபி சார்பில் பாராட்டுவதாக டாக்டர் குமரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News