loader
அன்வார் - மகாதீர் நிழல் யுத்தத்தைத் தொடக்கிவைத்த சித்தி!

அன்வார் - மகாதீர் நிழல் யுத்தத்தைத் தொடக்கிவைத்த சித்தி!

(நக்கீரன்)

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கும் துன் டாக்டர் மகாதீருக்கும் இடையே ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக நீடிக்கும் நிழல் யுத்தத்தை தொடக்கி வைத்தவர் டான்ஸ்ரீ டாக்டர் சித்தி சகாரா.

பெண்கள் அரசியலுக்கு வந்தால் சமூகத்தில் நன்மை விளையும் என்பதற்குச் சான்றாகவும், அதேவேளை அகலக்கால் வைக்காமலும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமலும் குறிப்பாக அதிகார அத்துமீறல்-லஞ்சம் ஆகியவற்றில் ஈடுபடாமலும், அதேவேளை அரசியலில் துணிந்து களமாடும் வல்லமையையும் பெற்ற அரசியல் தலைவர்களில் சித்தி சஹாராவும் ஒருவர்.

உலக அரசியலில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் முதல் பெண் எம்பிபிஎஸ் மருத்துவரும் முதல் பெண் அரசியல்வாதியுமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, இங்கிலாந்தின் மேநாள் பிரதமர் மார்கரெட் தாட்சர், ஜெர்மனி தேசத்தின் இந்நாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோரின் வரிசையில் குறிப்பிடத்தக்க மலேசிய அரசியல்வாதிகளில் சித்தி சஹாராவும் ஒருவர்.

துன் மூசா ஹீத்தாம், துன் கபார் பாபா ஆகியோரைப் போல இன்னொரு துணைப்பிரதமர் வந்து என்னை இடமாற்றம் செய்யும்வரை நான் காத்திருக்க மாட்டேன். அடுத்து துணைப் பிரதமரை நிர்ணயிப்பது நானாகத்தான் இருக்கும். அதற்குள், பிரதமர் பதவியில் நான் அமர வேண்டும். அதற்கு ஏதுவாக, இன்றைய பிரதமர் மகாதீர் பதவி விலகி, பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று  ராஜாங்க முறையில் காய்களை நகர்த்திப் பார்த்தார் அன்வார்.

1993 டிசம்பர் மாதத்தில் துணைப்பிரதமர் ஆன அன்வாரின் அரசியல், 1995-ஆம் ஆண்டுகளில் இப்படித்தான் இருந்தது. மலேசியாவின் அடுத்தப் பிரதமர் அன்வார்தான் என்று மலேசிய தேசிய அரசியல், மெல்லத் தலையெடுத்த ஊடக இணையம் உள்ளிட்ட பத்திரிகை உலகம், மலையகத்தைக் கடந்து வளைகுடா நாடுகள் அடங்கிய அரபு மண்டலத்துடன் மேலை நாடுகளிலும் பேச்சு எழுந்தது; கருத்தும் உலவியது.

மலேசியாவைக் கடந்து இஸ்லாமிய நாடுகளிலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும் தன் புகழ் பாடப்படுவதை அறிந்த அன்வார் ஏகாந்தத்தின் எல்லைக்குச் சென்றதுடன் மகாதீருக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்.
மகாதீரோ மசிவதாகத் தெரியவில்லை. மாறாக, அன்வாரைப் பற்றி உள்ளும் புறமும் என தொடர்ந்து வரும் இத்தகையத் தகவல்களை பெரும் இழுக்காகக் கருதினார்.

தன்னுடையை தலைமையின்கீழ், மூசா ஹீத்தாமும் கபார் பாபாவும் அடக்கமாக இருந்துவிட்டு, இருந்த இடம் தெரியாமல் விலகிச் சென்றதைப் போல இல்லாமல், இந்த அன்வார் இப்படி கொக்கரிக்கலாமா என்று மகாதீர் பொங்கி எழுந்த தருணங்கள் ஏராளம்.

எல்லாவற்றிலும் மேலாக, நானாகப் பார்த்து அம்னோவிற்கு அழைத்து வந்தேன் இந்த அன்வாரை; அப்படிப்பட்ட அன்வார், என்னுடைய பிரதமர் பதவிக்கே நெருக்குதல் கொடுப்பதா என்று தன் ஆதரவாளர்களிடம் வெகுண்டெழுந்தார்.

இவ்வாறு, அன்வாரும் மகாதீரும் அரசல்புரசலாக முட்டிக் கொண்டிருந்த வேளையில்தான், இதெல்லாம் இனி கதைக்கு ஆகாது; துணிந்து களத்தில் இறங்குவதுதான் வழியென்ற முடிவுக்கு வந்த அன்வார், 1996 அம்னோ பொதுப் பேரவையை வகையாகப் பயன்படுத்த காய் நகர்த்தினார்.

அந்த ஆண்டு நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவை, பொதுவாக மகாதீரை ஆதரித்தாலும் மகளிர் அணி தலைமையையும் இளைஞர் தலைவர் பொறுப்பையும் அன்வார் சொல்லி அடித்ததைப் போல வென்றதன்வழி, மகாதீருக்கு ஒரு தெளிவான தகவலை மேசையை அடித்துச் சொல்வதைப் போல சொன்னார்.

அம்னோவிற்கு மட்டுமல்ல; நாட்டிற்கும் தலைமை ஏற்க நான் தயாராகி விட்டேன். அதற்கேற்றாற்போல கட்சியினரும் மக்களும் அணியமாகி விட்டதால், அடக்கமாக பிரதமர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதத்தில் தகவலுக்கு மேல் தகவலை அனுப்பிக் கொண்டே இருந்தார் அன்வார்.

அந்த ஆண்டு அம்னோ இளைஞர் பிரிவுத் தேர்தலில் அன்வாரால் கொம்பு சீவி விடப்பட்ட இளந்தலைவர், அம்னோவின் இன்றைய தலைவர் டத்தோஸ்ரீ ஸாகிட் ஹமிடிதான். அவர், மகாதீரால் களம் இறக்கப்பட்ட டான்ஸ்ரீ ரஹிம் தம்பி சிக்கை எளிதாக வென்று அம்னோவின் இளைஞர் தலைவராக கொடி நாட்டினார் ஹமிடி.

உண்மையில் அந்த நேரத்தில் ஊழல் மற்றும் பாலியல் சிக்கலை எதிர்கொண்டிருந்தார் ரஹிம் தம்பி சிக். தன் அலுவலகத்தில் பணியாற்றிய 16 வயது பெண்ணுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டை அன்றைய போலீஸ் தரப்பு மீட்டுக் கொண்டாலும், அம்னோ பேராளர்களும் பொதுமக்களும் நம்பத் தயாராக இல்லை. இப்படி இருந்தும், அந்த வேளையில் மகாதீர் துணிந்து ரஹிம் தம்பியை களம் இறக்கினார். அதற்கான அரசியல் கணக்கு வேறாக இருந்தாலும், அன்வார் முழு மூச்சாக களம் இறங்கி ஸாகிட் ஹமிடியை வெற்றிபெறச் செய்தார்.

இதைப் பெரும் சங்கடமாகக் கருதினாலும், மகளிர் தலைவியாக தன்னால் நிறுத்தப்பட்ட டான்ஸ்ரீ ரஃபிடா அசிஸ், அன்வாரால் முன்மொழியப்பட்ட சித்தி சகாராவிடம் 27 வாக்குகள் பெரும்பான்மையில் மண்டியிட்டதைத்தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அந்த நாள் இரவை உறக்கம் தொலைந்த இரவாகக் கழித்த மகாதீர், ரஃபிடாவின் தோல்வியை தன்னுடைய தோல்வியாகவே எண்ணி மனம் புழுங்கினார்.

ஓர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அந்த நேரத்தில் ரஃபிடா மீது, அம்னோ மகளிர் பேராளர்களுக்கு அந்த அளவிற்கு பிடிமானமோ நல்ல அபிப்பிராயமோ இல்லாமல்தான் இருந்தது. எளிதில் அணுகமுடியாதவர் ரபிடா; மகளிர் விவகாரங்களில் அக்கறைக் காட்டாதவர்; மொத்தத்தில் மகளிர் பிரிவிற்கு பொருத்தமில்லாதவர் என்ற எண்ண ஓட்டம் அன்றைய அம்னோ மகளிர் பேராளர்களிடம் எதிரொலித்தன.

எல்லாவற்றையும்விட, ரஃபிடாவின் மருமகனின் நிறுவனத்திற்கு ஒன்றரை மில்லியன் சம்பந்தப்பட்ட குத்தகை விடப்பட்டதும் அந்த நேரத்தில் சர்ச்சையில் இருந்தது. பூமிபுத்ரா மேம்பாடு தொடர்புடைய ஒரு குத்தகை, பொது நிறுவனமாக பட்டியல் இடப்பட்ட அந்த நிறுவனத்திற்கு விதிமுறைக்கு மாறாக ஒதுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது.

ஜசெக-வை விட அம்னோவிற்குள் இந்தப் பிரச்சினை அதிகமாக எதிரொலித்தது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் மகளிர் தலைவி தேர்தலில் ரஃபிடாவை துணிந்து களமிறக்கினார் மகாதீர். ரஃபிடாவும் வென்றுதான் இருப்பார்.

ஆனால், அன்வார் என்னும் சூரைக் காற்று எல்லாவற்றையும் சாய்த்து விட்ட நிலை எழுந்ததால், இரும்பு பெண்மணி என்று வருணிக்கப்பட்ட ரஃபிடா அந்தத் தேர்தலில் மண்ணைக் கௌவினார்.

நான் அன்வார் அணியைச் சேர்ந்தவள் என்று சொல்லி பேராளர்களை அணுகிய சித்தி சஹாரா எளிதாக வென்று, தேசிய அளவில் கவனத்தைப் பெற்றதுடன், அன்வாரின் மகளிர் படையை வழிநடத்தவும் தயாரானர். ஆனால், 1998 செப்டம்பர் 2-ஆம் நாள் துணைப் பிரதமர் பதவியில் இருந்து அன்வார் நீக்கப்பட்ட நாளில் எல்லாமும் தலைகீழ் மாற்றத்தையும் எதிரும்புதிருமான திசைமாற்றத்தையும் எதிர்கொண்டன.

ரபிடா தோற்றதை பெரும் அவமானமாக கருதிய மகாதீர், உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார். அந்த நாளில் எடுத்த முடிவுதான், அன்வாரை பிரதமர் பதவியில் அமர வைக்கவே கூடாது என்ற கங்கணம். அதை சிந்தாமல் சிதறாமல் இன்றளவும் உறுதியாக கடைப்பிடித்து வருகிறார் மகாதீர்.

மகாதீர் மாறி இருப்பார் என்று எண்ணி, கடைசியில் ஏமாந்த அன்வாரும் லிம் கிட் சியாங்கும் இன்று கைகளை பிசைந்து கொண்டு செய்வதறியாது திகைக்கின்றனர்.

மொகலாய சாம்ராஜியத்தில் அலாவுதீன் கில்ஜி, ஔரங்க சீப் போன்றவர்கள் செய்த செயலுக்கு ஈடாக ஜனநாயக அரசியலில் மகாதீர் செயல்படுகிறார். காலம் என்னும் நல்லாள், எல்லாவற்றையும் அவதானித்து வருகிறாள்.

1998 செப்டம்பரில் அன்வாரின் நிலை மாறியதும், சித்தி சகாராவும் தன்னை மாற்றிக் கொண்டு அம்னோ என்னும் பெருங்கப்பலிலேயே பயணம் செய்தார். அதை அங்கீகரிக்கும் வகையில் அடுத்த அமைச்சரவையில், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறையை வழங்கி முழு அமைச்சராக்கி சித்தி சஹாராவை தன்வயப் படுத்திக் கொண்டார் மகாதீர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், 1999 மற்றும் 2004 பொதுத் தேர்தல்களில்  பகாங் மாநிலத்தின் பாயா பெசார் நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் உருவாக்கிய கெ அடிலான் கட்சி வேட்பாளர்களை இதே சித்தி சஹாரா அம்னோ சார்பில் வெற்றி கொண்டார் என்பதுதான்!

0 Comments

leave a reply

Recent News