loader
'டாம் & ஜெர்ரி' ஜீன் டீச் காலமானார்!

'டாம் & ஜெர்ரி' ஜீன் டீச் காலமானார்!

இன்றைய ஸ்மார்ட்போன் தலைமுறை குழந்தைகளுக்குப் பல்வேறு கார்ட்டூன் சேனல்கள் தொங்கி மொபைல் கேம்கள், யூடியூப் கிட்ஸ் எனப் பல வகையில்  பொழுதுபோக்கு அம்சங்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால், அன்று  90'ஸ் கிட்ஸ்க்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சேனல் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும்தான். அன்று நாம் பிரமித்துப் பார்த்து அனுபவித்த  ஃபேவரைட் கார்ட்டூன் தொடர்கள் பலவற்றை, இன்றும் நம்மில் பலர் யூடியூப்பில் பார்த்து ரசித்து வருகிறோம்.

அப்படி நம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த எவர்கிரீன் தொடர் டாம் & ஜெர்ரி. தன்னைப் பிடிக்கவரும் டாமைக் கதறவிடும் ஜெர்ரியின் சேட்டைகளையும், அதற்கு டாம் கொடுக்கும் ரியாக்க்ஷன்களையும் நம்மில் ரசித்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இவ்வருடத்தோடு டாம் & ஜெர்ரி தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கி 80 வருடங்கள் நிறைவாகின்றன.

இந்நிலையில் அத்தொடரின் இயக்குநர்களில் ஒருவரான ஜீன் டீச் (Gene Deitch) நேற்று காலமானார். தற்போது அவரின் வயது 95 ஆகும். இது குறித்த செய்தியை அவரின் பதிப்பகத்தார்களில் ஒருவரான செக் குடியரசின் Petr Himmel வெளியிட்டுள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர், அனிமேட்டர், இல்லுஸ்டிரேடர் எனப் பன்முகங்களைக் கொண்ட ஜீன் 1960 ஆண்டில் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றவர்.

நாம் இன்றுவரை ரசித்துக்கொண்டிருக்கும் 'டாம் மற்றும் ஜெர்ரி' கதாபாத்திரங்களை வைத்து சுமார் 13 எபிஸோட்களை இயக்கியுள்ளார் ஜீன். 2004 ஆம் ஆண்டில் சிறந்த கார்ட்டூன் கலைஞருக்கான 'வின்சர் மெக்கே' விருதினை வென்ற இவரின் மூன்று மகன்களும் கார்ட்டூன் கலைஞர்களே.

மேலும், கார்ட்டூன் ஹீரோவான 'பாப்பாய் த செய்லர்'  தொடரின் சில எபிஸோடுகளையும் ஜீன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News