loader

All News

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்- மே 20

‘கல்யாணம் 2 காதல்’ தொலைக்காட்சி தொடரில் நட்சத்திரனாக (பிந்தாங் தெராங்) வலம் வந்து காதல் மழையில் இளைஞர்களை கவர்ந்தவர் ரவீன் ராவ்.

இப்போது ‘மன்மத புல்லட்ஸ்’ என்னும் தொடரில் கிருஷ்ணாவாக வலம் வந்து  episode 12 -13 -ல்  மனதை உருக்கும் காட்சியில் அபார நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக பெண்கள் மனதில் மண்ணின் அடுத்த நட்சத்திரனாக குடிபுகுந்துவிட்டார் ரவீன் ராவ். 

ஒரு நல்ல கலைஞருக்கு ஊக்கம் தருவது பாராட்டுதான். அந்த வகையில் நல்ல கலைஞர்களை, நல்ல படைப்பை மலேசிய மக்கள் பாராட்டாமல் இருந்தது இல்லை.

இந்நிலையில், நேற்று முதல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரவீன் ராவ்வை மக்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி பலர் “அந்த குறிப்பிட்ட காட்சியில் என்னைக் கலங்க வைச்சிட்டீங்க ரவீன்” என்று பதிவு செய்து வருகின்றனர் – வாழ்த்துகள் ரவீன்!

 

(வெற்றி விக்டர்)

தற்போது அஸ்ட்ரோ வானவில்  தொலைக்காட்சியில் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பாகும் 'அப்பளசாமி அபார்ட்மென்ட்' தொடர், நகைச்சுவை சக்கரவர்த்தி கானா தயாரிப்பில் வலம் வருகிறது. 

இதில், தோக்கோ சத்யா, நண்டு ரமேஸ்  இன்னும் பலர் நடித்து வரும் வேளையில், கஜோல் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சாந்தினி கோர், சீக்கியப் பெண்மணி கதாப்பாத்திரத்தில், கொஞ்சம் தமிழ் தெரிந்த சீக்கியர்கள் பேசும் அதே பாணியில் பேசி நம்மைக் கவர்கிறார்.

இவர் தமிழ் பேச முயற்சிப்பது போல, கானாவும் அவரிடம் ஹிந்தி பேச முயற்சிக்கும்  காட்சிகள், நகைச்சுவையோடு கலகலப்பூட்டுகிறது. 

90 -ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 'பி மாய் பி மாய் தாங் து' நாடகத்திலும் இப்படித்தான்,  மலாய் சீன இந்திய சமூகம் தங்களால் முடிந்தவரை தமிழ் சீன மற்றும் மலாய் மொழியில் நகைச்சுவையைப் புகுத்தினார்கள்.

அந்தப் பாணியில் இருப்பதும்.... அதில் சத்யா இருப்பதும் கூடுதல் சிறப்பு. இளம் கலைஞர்களுக்கு சவால் விடும் அளவிற்கு, தற்போது உள்ள இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில்,  சத்யாவின் நகைச்சுவை  அமைக்கப்பட்டிருப்பது இந்தத் தொடரின் வெற்றி.

டத்தோ ஷாசா ஸ்ரீ, சுபா ஸ்ரீ, அசோக் மற்றும் சுரேஹா குட்டி ஆகியோரின் கதாப்பாத்திரங்களும் சிறப்பாக உள்ளது.

அனைவரும் சிறப்பான நடிப்பில் அசத்துகின்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்!

 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28- திரையீடு காண்பதற்கு முன்னரே பல்வேறு அனைத்துலக விருதுகளைப் பெற்றிருக்கும் மலேசியத் தமிழ் திரைப்படம் 'பரமபதம்'.

அண்மையில் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து  தற்போது ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாக இப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நிலையில் பரமபதம் திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காகப் பாடுபட்ட அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

ஆசிய சாதனை புத்தகக் குழுவினர் நிர்ணயித்திருக்கும் அனைத்து தொழில்நுட்ப கூறுகளையும் ஒரு திரைப்படம் பூர்த்திச் செய்திருந்தால் மட்டுமே, அது அப்போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதியைப் பெறும் என்றும் விக்னேஸ் பிரபு மேலும் கூறினார்.

அதேவேளையில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான ஃபினாஸ்-இன் (FINAS) அனுமதி சான்றிதழையும் வைத்திருப்பதோடு, ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் எந்தவொரு திரைப்படமும் இதுபோன்ற போட்டிகளில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வரும் நவம்பர் 26-ஆம் தேதி இப்படம் திரையீடு காண்கிறது! 

 

 

கோலாலம்பூர் -ஜீலை -5

 

(வெற்றி விக்ட்ர்)

 

பேய் வேட்டை என்ற நிகழ்ச்சி லிங்கேஸ்வரனுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த நிகழ்ச்சி என்றாலும், பல கதாபாத்திரத்தில் நடித்த இந்த நாயனுக்கு, அமானுஷ்யம் என்ற ஒரு விசயம் எப்போதும் கைகொடுக்கிறது.

இவரின் 'பேய் வேட்டை'  நிகழ்ச்சி இவருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தாலும், கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் தற்போது  அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி யில் வரும் 'கள்வனைக் கண்டுபிடி' தொடர் நாடகம், இவர் ஓர் அமானுஷ்ய நாயகன் என்பதை ஆழமாகப் பதிவு செய்துள்ளது. 

 

பேய் நாயகன் என்பது ஓர் அடையாளம் தான். காதல் கதை ஒரு புறம் இருக்க, மக்கள்  அதிகம் விரும்பிப் பார்ப்பது நம்பமுடியாத அமானுஷ்ய விசயங்களைத்தான். 

 

அந்த வகையில் கள்வனைக் கண்டுபிடி தொடர் மக்களை ஈர்த்துள்ளது. இது லிங்கேஸ்வரனின்  கலைப் பயணத்தில் இன்னொரு அடையாளம்!

கோலாலம்பூர், ஜனவரி 8-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில் மலேசியாவில் நாளை தர்பார் திரையிடப்படும் என்று  லோட்டஸ் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ரெனா துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவின் டிஎம்ஒய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. இது தொடர்பாக மலேசியாவில் தர்பார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், நாளை வியாழக்கிழமை தர்பார் திரைப்படம் மலேசியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நிச்சயம் வெளியாகும் எனவும் ரெனா துரைசிங்கம் கூறினார். மேலும் பொங்கல் பண்டிகையின் வெற்றிப்படமாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் நவம்பர் - 19

தற்போது  வெளியீடு கண்டுள்ள மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு', வெளியீடு கண்ட ஜந்தே நாட்களில் மூன்று லட்சம் வெள்ளி வசூலைக் குவித்துள்ளது. இது இப்படத்திற்கு நல்லதொரு  துவக்கமாக அமைந்துள்ளது.

ஷாலினி, ஷைலா நாயர் இருவருக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இயக்குனர் சதீஸ் நடராஜன் தனது முதல் படத்திலேயே சிறந்த மலேசிய இயக்குநர் தரவரிசைக்குத் தேர்வு பெற்றுவிட்டார்.  பாடகியாக, மென்மையான நாயகியாக அனைவரும் அறிந்த டத்தின் ஷைலா நாயர், இப்போது மாஸ் ஹிரோயினாக மலேசிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஜந்தே நாட்களில் 3 லட்சம்  வசூல் செய்ததன் மூலம், இவ்வாண்டின் சிறந்த வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற  பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியத் தமிழ்த் திரை உலகின் வசூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தை  இப்படம் முறியடிக்குமா?  பொறுத்திருந்து பார்ப்போம்!

கோலாலம்பூர் நவம்பர் - 15

64 திரை அரங்கில் நேற்று  முதல் திரையிடப்பட்டுள்ள ‘புலனாய்வு’ திரைப்படம் முதல் நாளே மக்களைக் கவரத் தொடங்கிவிட்டது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கதையில் தொய்வு இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதோடு ஒவ்வொரு காட்சியும் அடுத்தக் கட்ட நகர்வின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் கருத்து அமைந்திருக்கிறது. அந்த வகையில் படத்தின் இயக்குனர்களான சதீஸ் நடராஜன், ஷாலினி பாலசுந்திரத்திற்குப் பாராட்டுகள். இனி வரும் காலங்களில் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரை ‘பைரவி’ என்று  அழைக்கப்படுவார் போல. அந்த அளவிற்கு பைரவி கதாப்பாத்திரம் இப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளது. இசை படத்திற்கு உயிரோட்டம்.அதோடு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறந்த தரம் எனவும்  பேசப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அடுத்த மூன்று நாட்கள் இப்படத்தின் வெற்றி நகர்வைத் தீர்மானிக்கும். அந்த வகையில் அடுத்த முன்று நாட்கள்  64 திரை அரங்குகளில் இந்தப் பைரவியின் ஆட்டம்  இத்திரைப்படத்தின் வசூலைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் வெற்றிப்படமாக  அமையும் என ரசிகர்கள்  கருத்துக்களைக் கூறியுள்ளனர். மலேசியத் திரைப்படம் இப்படிப்பட்ட தரத்தில் வெளிவரவேண்டும் எனவும் மக்களின் கருத்து உள்ளது.

‘வெடிகுண்டு பசங்க’ வசூலை முறியடிக்குமா? ‘புலனாய்வு’ திரைப்படத்தின் வசூல்  பொறுத்திருந்து  பார்ப்போம்!

கோலாலம்பூர் நவம்பர்- 7

சமீபத்தில் சர்ச்சையாகப் பேசப்பட்ட 'புலனாய்வு' திரைப்படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி மலேசியா முழுவதும் உள்ள 64 திரை அரங்குகளில் வெளியீடு காண்கிறது. 

அந்த வகையில் சபா சரவாக்கிலும் இப்படம் வெளியீடு காண்கிறது. சபாவில் சண்டக்காண் லோட்டஸ் திரை அரங்கிலும்,  சரவாக்கில் எம்.எம்.சி ரிவர் சைட் திரை அரங்கிலும் வெளியீடு காண்கிறது.

ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகளை படத்தின் இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் காணொளிகள் வாயிலாகவும், பல பேட்டிகள் மூலமாகவும் எற்படுத்தி உள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் பிரபல பாடகியுமான டத்தின் ஸ்ரீ ஷைலா  நாயர் இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து

சதீஸ் புதிய இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனா, ஷாலினி, ஷைலா நாயர் ஆகிய முன்று பெண்களிடம் மாட்டித் தவிக்கும் நாயகனாக கபில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

சதீஸ் இயக்கும் முதல் படம் 'புலனாய்வு'. இந்த ஆய்வை அவர் தன் மனைவியுடன் இணைந்து செய்துள்ளார். அதோடு தன் மனைவியையும் இப்படத்தில் அவர் இயக்கி உள்ளார்.

படத்தைத் திரையில் பார்த்து உள்ளூர்க் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம். நம்மை மகிழ்விக்கும் அளவிற்குப் படம் இருக்கும் என நம்புவோம்.

'புலனாய்வு' நமக்கு என்ன சொல்ல வருகிறது?

64 திரை அரங்குகளில் விடை உள்ளது!

கோலாலம்பூர் நவம்பர்-2

இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பரமபதம்' திரைப்படத்தில், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் சிம்டாங்காரன் மற்றும் புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா  ஒரு பாடல் பாடியுள்ளதாக விக்னேஷ் பிரபு அண்மையில் அறிவித்திருந்தார். 

இளைஞர்களின் முயற்சியில் மலேசியத் திரையுலகில் அனுபவமிக்க மூத்தக் கலைஞர்களின் வழிகாட்டல் மற்றும் ஆசியுடன் 'பரமபதம்' தயாராகி உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் நாட்டில் உள்ள திரை அரங்குகளில் தீபாவளி திரைப்படங்களான  பிகில் மற்றும் கைதி திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. டீசரைப் பார்த்துவிட்டு # பரமபதம் சரவெடி என்று டைப் செய்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்களில், சிறந்த கருத்தினை வழங்கும் ரசிகர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இந்தப் படம் விக்னேஷ் பிரபு மற்றும் அவரது இளைஞர் குழுவிற்கு ஒரு முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. திரைப்படத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடத் தயாராய் இருக்கிறது பரம்பதம்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் அக்டோபர் - 30

மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு' திரைப்படம் எதிர்வரும் நவம்பர் - 14-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. தற்போது இத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார் ஒரு நண்பர். புலனாய்வு திரைப்படத்தின் திரையரங்கு போஸ்டரில் தமிழ் இல்லை என்பது அவருடைய ஆதங்கம். நியாயமான ஆதங்கம்தான். ஆனால், அவர் விமர்சித்த விதம்,  உபயோகித்த வார்த்தை தவறாக இருக்கிறது.

 'புலனாய்வு' திரைப்படத்தையும் அதன் படக்குழுவினரையும் ஆய்வு  செய்த பின் அவர் அப்பதிவை செய்திருக்கலாம் நாகரிகமாக. அவருடைய அந்தப் பதிவில் யார் என்று தெரியாத  முகங்கள் இப்படத்தில் நடிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாடே இந்திய சினிமா பாடலை இங்குப் பாடிக்கொண்டிருந்த காலத்தில், ஒரு மென்மையான பெண் குரல் சொந்தத் தமிழ் பாடலுடன்  மலேசியா ரசிகர்களைக் கவர்ந்தது. அவர்தான் ஷைலா நாயர். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். முக்கிய போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

முட்டி மோதி தத்தளிக்கும்  மலேசியத் திரை உலகில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . லிம் கோக் வீங் பல்கலைக்கழகத்தில் திரை சார்ந்த  படிப்பை முடித்து, இடை இடையே போட்டோ கிராப்பியும் செய்து, படிப்பிற்காக ஒரு குறும்படம் எடுத்து, அதுவும் 'இணை' என்று தமிழ்ப் பெயரில்  எடுத்தவர் இப்படத்தின் இயக்குனர் ஷாலினி பாலசுந்திரம். 

அதன் பின் கீதையின் ராதை, திருடாதே பாப்பா திருடாதே, ரயில் பயணங்கள் , இப்போது புலனாய்வு என்று மலாய் ஆங்கில கலவை இல்லாமல் சுத்த தமிழில் தலைப்பு வைக்கும் ஓர் இயக்குனர்.

அஸ்ட்ரோ விழுதுகளில் தினம்தோறும் தமிழில் உரையாடி, தமிழ் நிகழ்ச்சியின் வழி  பல பிரமுகர்களை நேர்காணல் செய்யும் கபிலனின் தமிழை, காலை 9.30 மணிக்கு விழுதுகள் நிகழ்ச்சியில் பார்க்கலாம் அவர்தான் இப்படத்தின் நாயகன்.

1000  தமிழ்க் கவிதைகள், திரைபாடல்களை எழுதியுள்ள கவி நாயகன் யுவாஜியும, தமிழ் திரைக் கதை வசனகர்த்தாவான தாசனும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள் 

புது புது மெட்டுகளுடன் பல இனிமையான தமிழ்ப் பாடல்களை வழங்கி, மலேசியப் பாடல்களைத் தமிழ் திரை உலக இசை தரத்தில் வழங்கும் சில இசை அமைப்பாளர்களில், ராகவேந்திராவும் ஒருவர். அவர்தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.

இப்படித் தமிழ்ப் பற்று உள்ளவர்கள்தான் புலனாய்வு படக்குழுவினர் . 

பல தமிழ்த் திரைப்படங்கள்  ஆங்கில தலைப்புடன் தமிழில் எழுத பட்டிருக்கும். உதாரணதிற்கு 'சிக்சர்', 'மான்ஸ்டர்'  ஏன் தலைவர் நடித்த 'ரோபோ' இவை எல்லாம் தமிழ் தலைப்பு கிடையாது. எழுத்து மட்டும்தான் தமிழ். புலனாய்வு தமிழ் தலைப்பு அதற்குப் பாராட்டுவோம்.

அந்தப் படக்குழுவினர் ஆரம்பத்தில் இருந்து தமிழில் தான் பல விளமபரங்கள் செய்துள்ளனர். அது அந்த நண்பருக்குத் தெரிவியவில்லை அவரும் ஆய்வு செய்யவில்லை. அதனால் கோபப்பட்டுவிட்டார். கோபம் மனித இயல்பு.

ஆனால் அந்தக் கோபம் பலரது உழைப்பைச் சிதறடிக்கக் கூடாது. இங்கு நடப்பது எல்லாம் நன்மைக்கே. இங்கு ஒரு விஷயத்தை  நல்லவிதமாகச் சொன்னால், அது மக்களுக்குச் சேருவதற்குச் சற்று நேரம் எடுக்கும். ஆனால், நெகடிவ் விஷயம் உடேன வைரல் ஆகும் நண்பரின் பதிவு போல். அந்த நண்பர் புலனாய்வு திரைப்படத்திற்கு நன்மையே  செய்துள்ளார் படத்தின் தலைப்பை விமர்சித்து விளம்பரப்படுத்தி உள்ளார்.

புலனாய்வு திரைப்படத்தின் குழு தமிழ் பற்றுள்ள குழு. அவர்களுடைய போஸ்டர், இசை வெளியீடு டீசர்- டிரைலரில் தமிழ் இருக்கிறது.

இப்போது திரை அரங்கிலும் தமிழ் தவழும்.

அன்போடு சொல்லுங்கள், உரிமையோடு சொல்லுங்கள், சற்று பணிவு நாகரிகத்தோடு  சொல்லுங்கள் எல்லாம் சாத்தியமே!

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர்  அக்டோபர்- 21

சாய்பா விஷன் தயாரிப்பில்  இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'புலனாய்வு' திரைப்படத்தில், படத்தின் இயக்குநர் ஷாலினி நாயகியான ஷைலா நாயருக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளாதாகத் தெரியவந்துள்ளது. 

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரிடம், ஷாலினி பாலசுந்தரம் கதையைச் சொன்னபோது, சுமார் நான்கு மணி நேரம் கதையைச் சொன்னதாகவும், கதையைக் கேட்ட ஷைலா நாயர்  கதை நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, கதையில் வரும் முக்கிய போலீஸ் வேடத்தை ஏற்று நடிப்பது யார் எனவும் ஷாலினியிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த ஷாலினி, புதுமுகம்தான் நடிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். 

அப்படியானால், அந்த முக்கிய வேடத்திற்குச் சரியான ஒரு பெண்ணைத் தேர்வு செய்யுங்கள் என ஷைலா கூற, அந்தப் பெண் நீங்கள்தான் என ஷாலினி கூற, உடனே, ஒரு கம்பீரமான பெண்ணைத் தெரிந்தெடுங்கள் என  ஷைலா சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

இதுவரை உங்களை இந்தத் திரை உலகம் ஒரு மென்மையான நாயகியாகவும், இனிமையான பாடகியாகவும் மட்டுமே பார்த்துள்ளது என ஷைலாவிடம் கூறிய ஷாலினி, இந்த மாதிரி  பார்த்தது இல்லை. இது உங்களின் புதுமுகமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். 

முயற்சிப்பதாகக் கூறிய ஷைலா, நான் பொதுவாகவே மென்மையாகப் பேசக் கூடிய நபர், காரசாரமாகவும், விரைப்பாகவும் இருப்பது இயல்பாகவே வாராது. இருந்தாலும், முயற்சிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அந்தக் கதாப்பாத்திரம் சரியாக வரவில்லை என்றால்,  வேறு ஒருவரைத் தேடிடுங்கள் என ஷைலா கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அந்தக் கதாப்பாத்திரத்திற்காக நடிப்புப் பயிற்சியில் இருந்த ஷைலாவிற்குத் தடுமாற்றம்  ஏற்பட்டபோது, தயவுசெய்து இந்தக் கதாப்பத்திரத்திற்கு வேறோருவரைத் தேடுங்கள் என ஷைலா நாயர் சொல்லியும் அதைக் கேட்காமல் ஷைலா நாயர்தான் இப்படத்தில் நடிக்கவேண்டும் எனத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளார் ஷாலினி.

இது தனக்கு ஒரு சவால் என  போலீஸ் துறையின் விசாரணை முறை எப்படி இருக்கும், அவர்களது நடை பாவனைகள், பேச்சு உடை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார் ஷைலா. இதற்குப் படத்தின் இயக்குனர் குழுவும் ஷைலா நாயருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அதோடு அவருடன் இத்திரைப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த  துணை நடிகர்களும், ஷைலா நாயரை ஒரு மாஸ் போலீஸ் போல் காட்டுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை அமைத்த ராகவேந்திராவும் தீவிரமாக உழைத்திருக்கிறார்.  

கதையின் முக்கிய நாயகி ஷைலா நாயரை வேறொரு தோற்றத்தில் காட்ட வேண்டும் என்ற  நோக்கத்தில், அவருக்கு ஊக்கமும் அழுத்தமும் கொடுத்திருக்கிறார் ஷாலினி பாலசுந்தரம். அந்த வகையில் அண்மையில் நடந்த 'புலனாய்வு' பாடல் வெளியீட்டில், படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. அதில் படக் குழுவினர்களான இயக்குனர் ஷாலினி, இசை அமைப்பாளர் ராகவேந்திரா, நாயகன் கபில்  ஆகியோர், இப்படத்தில் ஒரு மாறுபட்ட ஷைலா நாயரைப் பார்க்கலாம் என நம்பிக்கையோடு தெரிவித்தனர். விழாவிற்கு வந்தவர்களும் ஷைலாவா? இது என ஆச்சரியத்தோடு பாராட்டு தெரிவித்துள்ளனர்!

கோலாலம்பூர் அக்டோபர்-21

மலேசியத் திரை உலகில் அதிக வசூலை குவித்த திரைப்படமான 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் சாதனையை, இன்னும் எந்த ஒரு மலேசிய திரைப்படமும் முறியடிக்கவில்லை.

வீடு புரடக்சன்ஸ் தயாரிப்பில்  'வசூல் நாயகன்' டெனிஸ் குமார் -  சங்கீதா நடிப்பில், விமலா பெருமாள் இயக்கிய இப்படம், இவ்வாண்டு தீபாவளி வெடியாக அஸ்ட்ரோ வானவில்லில்  ஒளிபரப்பாக இருக்கிறது. 

எப்போதும் தீபாவளி என்றால், திரைக்கு வந்த புத்தம் புதிய திரைப்படம் என்ற விளம்பரத்துடன்,  தமிழ்நாட்டு சினிமா தொடர்பான விளம்பரம்தான் அஸ்ட்ரோவில் வரும். ஆனால் இந்தத் தீபாவளிக்கு 'வெடிகுண்டு பசங்க' தொடர்பான விளம்பரம் வெடிக்கிறது. மலேசியக் கலை உலகம் வளர்ச்சி அடைகிறது. அதற்கு ஏற்ப முக்கியத்துவமும் தற்போது கிடைக்கிறது.

27.10.2019  மாலை மணி 4 அளவில் 'வெடிகுண்டு பசங்க'  திரைப்படம் அஸ்ட்ரோ வானவில்லில் ஒளிபரப்பப்படும்.

அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு சில சிறப்பு  உள்ளுர் நிகழ்ச்சிகளையும் அஸ்ட்ரோ தயாரித்துள்ளதாகத்  தகவல் கசிந்துள்ளது!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் செப்டம்பர் - 17

வீடு புரடக்‌ஷன் தயாரிப்பில், 'வசூல் நாயகன்' டெனிஸ் குமார் நாயகனாக நடிக்கும் 'தமிழ் ஸ்கூல்' திரைப்படத்தில்,  வித்யா, நடியா ஜாஸ்மின், கேத்ரீன் டிச்சர் என

3 நாயகிகள்  நடித்து வருகின்றனர். 

இதில் கேத்ரீன் டீச்சர் யார்? என்பதுதான் இப்போதைய கேள்வியாய் இருக்கிறது.

யார் இந்த கேத்ரீன் டிச்சர்?  

10 வருடமாக  மலேசிய டி.வி உலகில் வாய்ப்புக்காகப் பலமுறை முயற்சி செய்தும், சரியான வாய்ப்புகள் இன்றித் தவித்த, லீனா ஏண்டி என்கிற நளினா தேவிதான், இந்த கேத்ரீன் டிச்சர். 

இவரது திறமைக்கு வாசல் திறந்தது வீடு புரடக்‌ஷன்ஸ். இதன் மூலம் இவ்வளவு காலம் வெளியில் தெரியாத லீனாவின் முகம் 'தமிழ் ஸ்கூல்' திரைப்படத்தின் மூலம் மிளிரத் தொடங்கிவிட்டது. 

தற்போது 'தமிழ் ஸ்கூல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இவரது புகைப்படம்  வைரல் ஆகி வருகிறது. 

யார் இந்த  இந்த கேத்ரீன் டீச்சர், என இப்போதே பலர் தேடத் தொடங்கிவிட்டனர். 

இத்திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரமும்  ரசிகர்களை கவருமா? ஒரு சிங்கிள் புகைப்படமே யார் இந்த டீச்சர்? எனத் தேடவைத்துள்ள நிலையில், தற்போது இவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

இது குறித்து டீச்சர் என்ன சொல்றாங்க?

கே: நீங்கள் புதுமுகமா?

பதில் :நான் புதுமுகம் இல்லை! 10 வருடமாக திரை உலகில் இருக்கிறேன். என் முதல் டிராமா 'அடுத்த வீடு'.

கே: இவ்வளவு காலம் உங்கள் முகம் பதியவில்லையே?

பதில்: ரசிகர்களுக்கு இப்போது என்னைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் கேத்ரீன் டீச்சரை... இது போதும் எனக்கு.

கே: உங்கள் மனநிலை எப்படி இருக்கு?

பதில் : 10 வருட முயற்சிக்கும் ஏக்கத்திற்கும் இப்போதுதான் மக்கள் தரிசனம் கிடைத்துள்ளது. இதைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

புன்னகை மலராய் நம்மிடம் பேசிய லீனா, தொழில் நிர்வாகத்துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றவர். திரை உலகில் சாதிக்கவேண்டும் எனப் பல காலமாகப்  போராடி வருகிறார்.

புதுமுகங்களுக்கு  வாய்ப்புகள் அவசியமானது  அப்போதுதான் பல தரப்பட்ட திறமைகள் வெளியில் வரும். அந்த வகையில் லீனா-விற்கு கேத்ரீன் டீச்சர் கதாப்பாத்திரம் முக்கிய கதாப்பாத்திரமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் சிறு வேடம்தான் செய்துள்ளதாகக் கூறும் இவர், இப்படி ஒரு ஆதரவு தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கின்றார். சிறு வேடமாக இருந்தாலும், நிச்சயம் மக்களுக்குத் தனது கதாப்பாத்திரத்தைப் பிடிக்கவைப்பேன் எனக் கூறுகிறார் லீனா.

'இவ்வளவு நாள் என்னை அடையாளப் படுத்த ஒரு தளத்தைத் தேடினேன். 'தமிழ் ஸ்கூல்' அந்த அடையாளத்தை உருவாக்கி உள்ளது' என மகிழ்ச்சியில் திளைக்கும் லீனா, தனக்கென ரசிகர் பட்டாளத்தைச்  சம்பாதித்து வருவதோடு, டிக் டோக்கில் இன்னும் வைரலாகிக்கொண்டிருக்கிறார். 

இந்த கேத்ரீன் டீச்சரை மலேசியத் திரை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? லீனாவின் 10 வருட தவத்திற்கு உரிய வாய்ப்புக் கிடைக்குமா?  

பரிட்சை எழுதி காத்திருக்கிறார் டீச்சர்...

முடிவுகள் ரசிகர்கள் கையில்!

இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள 'பரமபதம்' திரைப்படம், இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு  சமீபத்தில்தான் தேசம் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் வஜ்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் பிரபு, தனது மூன்று வருட உழைப்பு, பலன் தரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

பழங்கால விளையாட்டாகக் கருதப்படும் 'பரமபதம்' இந்த நவீன உலகத்திற்குச் சொல்லும் கதை என்ன? என்கிற சஸ்பென்ஸ் கடல் தாண்டி இந்தியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இயக்குனர் பாக்யராஜ், 'பரமபதம்' திரைப்படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக அண்மையில் பேட்டி அளித்துள்ளார். நிச்சயம் படக்குழுவினர், அவரிடம் சில காட்சிகளை போட்டுக் காட்டியிருக்கவேண்டும். அதைப் பார்த்துவிட்டு, தனது கருத்தினை பாக்யராஜ் பதிவு செய்துள்ளார்.

எப்போது இந்தப் படம் திரைக்கும் வரும்? என்பதை, விரைந்து அறிவிப்பாரா விக்னேஷ் பிரபு?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் செப்டம்பர் - 2

'காளி முனி தரிசனம்' திரைப்படம் பல சவால்களைத் தாண்டி திரைக்கு வெளிவந்த படம். இத்திரைப்படம் திரையிடப்பட்ட  முதல் வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் வெள்ளி வரை வசூலைக் குவித்தது என படக்குழுவினர் அறிவித்தனர்.  

 3 வாரங்கள் கடந்து இத்திரைப்படத்தின் வசூல்  114,222.50 வெள்ளி என ஃபினாஸின் மலேசியத் திரைப்பட வசூல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் எது உண்மை? இந்தத் திரைப்பட விவகாரத்தில், சில முதலைகள் உள்ளே நுழைந்து  விழுங்கியதாகவும் சொல்கின்றனர். யார் அந்த முதலைகள்? படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.தி.எஸ் இந்திரனுக்கே வசூல் எவ்வளவு  என்பதை அறிவிக்காமல், டிமிக்கிக் கொடுக்கும் அந்த முதலை யார்?

முதல் வாரம் 2 லட்சம் வெள்ளி வசூல் என்று படக்குழுவினருக்குத்  தெரிவிக்கப்பட்டது. இப்போது, அந்த வசூல் எப்படி 114,222.50 ஆகக் குறைந்தது? இதில் எது உண்மை? 

அதோடு தனியார் வானொலி நிறுவனங்களுக்கும், ஊடக விளம்பரத்திற்கும் வேறு பாக்கி உள்ளதாம்.

இன்னும் சில படக் குழுவினர்களுக்கும் வழங்க வேண்டிய பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

'காளிமுனி தரிசனம்' திரைப்படத்தைச் சூழ்ந்துள்ள மர்ம முடிச்சு என்ன? ஏன் இவ்வளவு சிக்கல்? உண்மை நிலவரத்தை விளக்குவாரா டி.தி.எஸ் இந்திரன்?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஆகஸ்ட் 7-

கடந்த 2018-ஆம் ஆண்டு 8  மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அதில் 7 திரைப்படங்கள் வசூலில் லட்சத்தை எட்டிப்பிடித்தன. ஆனால், இவ்வாண்டு 3 மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, 30 ஆயிரம் வரைக்கும் கூட வசூலை ஈட்டவில்லை என ஃபினாஸ் வெளியிட்டிருக்கும் மலேசியத் திரைப்பட வசூல் பட்டியல் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

'சட்ட' திரைப்படம் 27,637.50 வெள்ளி வசூலையும், 'அழகிய தீ'  26,851.00 வெள்ளி வசூலையும், 'குற்றம் செய்யேல்' 14,615.00 வெள்ளி வசூலையும் பெற்றுள்ளதாக அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'காளி முனி தரிசனம்' திரைப்படம்  2 லட்சத்தைத் தாண்டி வெற்றி நடை போடுவதாகத் திரைப்படக் குழுவினர் கூறிவருகின்றனர். 

ஃபினாஸ் வெளியிடும் வசூல் பட்டியலுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் முழு வசூல் என்ன என்பது தெரியவரும். 

ஆனால், தற்போது பட்டியலில் உள்ள இந்த மூன்று திரைப்படங்களும் வசூலில் மிகப்பெரிய சரிவைக் கொடுத்துள்ளது. 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வசூல் மலேசியக் கலை உலகத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். அந்த வகையில் வசூல் ரீதியில் இந்த முன்று திரைப்படங்களும் தோல்விப்  படங்களே.

கடந்த ஆண்டு '33km from Kl' திரைப்படம்  18,779.00 வெள்ளி வசூலை எட்டிய நிலையில்,  மாபெரும் வெற்றிப் படமாக 'வெடிகுண்டு பசங்க' திரைப்படம் அமைந்தது. 1,330,302.40 வெள்ளி வசூலை அப்படம் குவித்தது. அதைத் தொடர்ந்து 'திருடாதே பாப்பா திருடதே' திரைப்படம் 314,524.00 வெள்ளி வசூலையும்,  'நீயும் நானும்' திரைப்படம் 307,956.96 வெள்ளி வசூலையும், 'வில்லவன்' திரைப்படம் 194,484.50 வெள்ளி வசூலையும், 'சுகமாய் சுப்புலட்சுமி' 138,970.00 வெள்ளி வசூலையும், 'கோரா' திரைப்படம் 129,815.75 வெள்ளி வசூலையும், 'அச்சம் தவிர்' திரைப்படம் 120,396.70 வெள்ளி வசூலையும்  பெற்றுள்ளன.

அந்த வகையில், கடந்த ஆண்டு மலேசியத் திரைப்படங்கள் வசூலில் லட்சத்தை எட்டத் தொடங்கிய நிலையில், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து  30 ஆயிரத்தைக் கூட எட்டாததற்கு என்ன காரணம் என்பதை, மலேசியத் திரை உலகத்தினர் சற்று ஆராய வேண்டும். தங்களுக்குப் பிடித்த படைப்புகளுக்கு மக்கள் வெகுவாக ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்பதற்கு வசூலே சாட்சி.  

கூடுதல் கவனத்துடன் மலேசியத் திரை உலகம் செயல்படவேண்டிய காலகட்டம் இது. மக்களுக்குப் பிடிக்கும் படைப்புகள் கொண்டாடப்படுகிறது.  ஆகையால், தவறு எங்கே எனபதைச் சற்று ஆய்வு செய்யுங்கள்.

இவ்வாண்டு, இதுவரை மலேசியக் கலை உலகத்தின் அடைவு நிலை வசூல் ரீதியிலும், மக்கள் மனம் கவர்ந்ததிலும் மிகப்பெரிய சரிவு  என்பதனை 'தமிழ் லென்ஸ்' வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது!

கோலாலம்பூர் ஜூலை 26-

மலேசிய பக்தி திரைப்படமான 'காளிமுனி தரிசனம்' திரைப்படம், தற்போது மலேசியாவில் மட்டும் அல்லாது சிங்கப்பூரிலும் திரையிடப்பட்டு, வெளியீடு கண்ட முதல் வாரத்திலேயே 2 லட்சம் வெள்ளி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

டி.தி.எஸ். இந்திரன் இயக்கத்தில், அவருடைய  நிறுவனத்தின் தயாரிப்பில், மலேசிய முன்னணி கலைஞர்கள் பலர் நடித்து வெளிவந்துள்ள இத்திரைப்படம், தற்போது 37 திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றுள்ள  'ஆகால லோகத்திலே' என்ற பாடல், மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்த ரத்னா கௌரி அப்பாடலுக்கு  உயிரோட்டம் கொடுத்துள்ளார்.

தற்போது டிக் டோக் செயலியில் பலரும் அவரது பாணியில் பல வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

பல போராட்டங்கள், தடங்கல்களைக் கடந்து வெளி வந்துள்ள 'காளிமுனி தரிசனம்' தொடர்ந்து பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது!

விளம்பரம்:

 

கோலாலம்பூர் ஜுலை-25 

நேற்று  முதல் சமூக ஊடகங்களில், மலேசியக் கலைஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட  ஓரினப் புணர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த ஆபாச வீடியோவில் உள்ள ஒருவர், பிரபல நடிகர் பாலகணபதி வில்லியம் என்று சிலர் வதந்திகளைப் பரப்பிவந்தனர்.

அந்த வீடியோவில் இடது கையால் முகத்தை மறைத்திருக்கும் அந்த ஆடவர், பாலகணபதிதான் என்றும்,  அந்த வீடியோவில் உள்ள ஆடவரின் தலைமுடி வெட்டும், பாலகணபதியின் தலைமுடி வெட்டும் ஒரே மாதிரியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி  ஒரு போஸ்டரும் பகிரப்பட்டது.

இந்நிலையில், இன்று தனது சமூக வலைத்தளத்தில் அது தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்த பாலகணபதி, தன்னைப் பற்றி பரவும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

சில விஷமிகள்  செய்த விஷமத்தனம் என பாலகணபதி குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆபாச வீடியோவில் இருப்பது பாலகணபதி இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது தகவல் கிடைத்துள்ளது. 

அந்த ஆபாச வீடியோவில் உள்ள நபருக்கு இடது கையில் 5 விரல்களும் முழுமையாக இருப்பது தெளிவாகத் தெரியும் வேளையில்,

நடிகர் பாலகணபதிக்கு இடது கையில் உள்ள மோதிர விரல் முழுமையாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், பாலகணபதியின் இடது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது.

பாலகணபதியின மோதிர விரல் அவர் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தைப் போக்கியுள்ளது.

பாலகணபதியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை அவமானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட வதந்திகளை நம்ப வேண்டாம். மலேசியக் கலை உலகில் ஒரு கலைஞரை, ஆபாச விடியோவைக் கொண்டு கீழறுப்பு வேலை செய்யும் முயற்சி ஒரு வியாதியாகிவிட்டது இப்போது.

இது முற்றிலும் தவறான செயல் என, கலைத்துறையினர் பரவலாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!

விளம்பரம்:

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை -16

டி சினிமா, DTS இந்திரன் தயாரிப்பில், DTS இந்திரன் இயக்கிய 'காளிமுனி தரிசனம்' திரைப்படம், பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு,  பல தடைகளைத் தாண்டி வெளியீடு காணவிருக்கிறது. 
எதிர்வரும் ஜூலை 18-ஆம் தேதி நாடு தளுவிய அளவில்  சுமார் 27 திரை அரங்குகளிலும், சிங்கப்பூரில் 3 திரை அரங்கிலும் வெளியீடு காணவுள்ளது இத்திரைப்படம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக  இந்தப் படம் எப்போது வெளிவரும்  என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. காரணம், இத்திரைப்படத்தில் வந்த 'காளிமுனி' பாடல் பல எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் விதைத்தது. 
கடந்த ஆண்டு தைப்பூசத்திற்கு வெளிவர இருந்த இப்படம், சில  காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின் இவ்வாண்டு, இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய டி.தி.எஸ் இந்திரன் மற்றும் படக்குழுவினர் பல வகையில் போராடினர்.   
இதனையடுத்து  சில வாரங்களுக்கு முன்  இப்படத்தின் டிரைலர் வெளிவந்தது. மீண்டும் அதே 'காளிமுனி' பாடல் பல காட்சி அமைப்போடு வெளியிடப்பட்டது. ரசிகர்கள் இதற்குப் பெரும் ஆதரவு  வழங்கியதோடு, படத்தை விரைவில் வெளியிடுமாறும் படக் குழுவினருக்கு உற்சாகமூட்டினர். இதனையடுத்து வரும் வியாழக்கிழமை  தரிசனம் தரவிருக்கிறது காளிமுனி.

https://www.youtube.com/watch?v=-qIJXG-Xi7I

இப்படத்தில் காந்தி பென், ரத்னா கௌரி, நித்யா ஸ்ரீ,  ஜெகன், டேவிட் கண்ணன் ராஜமாணிக்கம், லோக்காப் நாதன் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

படத்தைப் பார்ப்போம்... பிறகு குறை நிறைகளைச் சொல்வோம்.

'காளிமுனி தரிசனம்'.
அம்மை - அப்பன் வேட்டை ஆரம்பம்!

மலேசிய சிம்ரன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராஜி (37 வயது) காலமானார். மலாக்காவில் உள்ள தனது கணவரின் சகோதரர் இல்லத்திற்குச்  சென்றிருந்த வேளையில், கடந்த  15-ஆம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

தமிழ் மொழி மட்டுமல்லாது, மலாய் மொழியிலும் தனது அபார நடிப்பாற்றலால் எண்ணற்ற உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ராஜி. தொலைக்காட்சி நாடகங்கள், படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கானாவுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை கலாட்டாக்கள், நம் அசல் மலேசியாவின் அக்மார்க் காமெடிகள்.
உடல் பருமனால் அவதியுற்றாலும், அதையே ஒரு மூலதனமாக வைத்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
நடிக்காமல் சிறிது காலம் ஓய்வில் இருந்த அவர், அண்மையில்தான் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரின் மரணம் மலேசியக் கலை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை - 5

வீடு புரடக்சன்ஸ் டெனிஸ் குமார் - டாக்டர் விமலா பெருமாள் தயாரிப்பில், புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, வீடு புரடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை, பண்டார் பூச்சோங் ஸ்ரீ சீனிவாசா பெருமாள் ஆலயத்தில் இன்று நடைபெற்றது.

 

தங்களின் அடுத்த படத்தின்  தலைப்பில் 'பசங்க' என்ற வார்த்தை இடம்பெறாது என, அண்மையில் தயாரிப்பாளர் டாக்டர் விமலா பெருமாள் அறிவித்திருந்தார். எனவே தற்போது தயாராகும் புதிய படத்திற்கு 'தமிழ் ஸ்கூல்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  தமிழ்ப் பள்ளிக்கும் இத்திரைப்படத்திற்கும் நிச்சயம் கதையில் தொடர்பு இருக்கும். ஒரு நல்ல கருத்தை திரைப்படத்தின் வயிலாகக் கூற விரும்புகிறார்கள் என்பது தலைப்பை வைத்தே தெரிகிறது.

'வசூல் நாயகன்' டெனிஸ் குமார்  இத்திரைப்படத்தின் நாயகன். இவரைச் சுட்டி நாயகனாக, காதல் இளைஞனாக நாம் பார்த்து ரசித்தோம். இனி ஒரு மாஸ் ஹீரோவாக, இவர் வலம் வருவாரா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இம்முறை பல புதிய கூட்டணி டெனிஸ் குமாருடன் இணைகிறார்கள். இது அவரின் ரசிகர்களுக்குப் புதிய எதிர்பார்ப்பை நிச்சயம் தரும்.

முதல் முறையாக டெனிஸ் குமாரை வைத்து இயக்கவுள்ளார் இயக்குனர் ஷான். எனவே எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. திரைக்கதையும் அசத்தலாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

டெனிஸ் குமார் திரைப்படத்தைப் பொருத்தவரை, இசை எப்போதும் தூக்கலாகவே இருக்கும். எப்போதும் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இம்முறை  இசை அமைப்பாளர் ஷாமேசனின் மெட்டுக்கள் இத்திரைப்படத்திற்கு மெருகேற்றுமா என்பதைக் காத்திருந்து ரசிப்போம்.

டெனிஸ் குமாரின் ஜோடி யார் என்பதே அண்மைய பரபரப்பாக இருந்தது. பட பூஜைக்கு முன்னரே தன்னோட ஜோடி இம்முறை புதிய நாயகிதான் என அறிவித்திருந்தார் டெனிஸ். அதே போல், இப்படத்தின் நாயகியாக வித்யா லீயானா டெனிஸ் குமாருடன் இணைகிறார்.

டெனிஸ் குமாரின் இந்தப் புதிய கூட்டணி, ஒரு வித்தியாசமான மேஜிக்கை வழங்குமா? ரசிகர்களின்  இதயத்தில் இடம்பிடிப்பாரா வித்யா?

டெனிஸ் - சங்கீதா இருவரின் கூட்டணியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதை மறக்கடிப்பாரா வித்யா?  - காத்திருப்போம்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எப்படி சூரியோ, அப்படித்தான் டெனிஸ் குமாருக்கு டேவிட் அந்தோணி. இவர்கள் இருவரின் கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது இப்படத்தில்.

பென் -ஜி, யாஸ்மின் நடியா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

யாஸ்மின் நடியா என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தை ஏற்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் சற்றுச் சுவாரஸ்யம்தான்.

'தமிழ் ஸ்கூல்' திரைப்படம்  சமுதாயத்திற்கு என்ன சொல்லப் போகிறது? டெனிஸ் குமார்  தனது ரசிகர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்? 'வெடிகுண்டு பசங்க' வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்த படமான 'தமிழ் ஸ்கூல்' எப்படி இருக்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்!

 

விளம்பரம்:

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை-2

'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, புதிய கூட்டணியில் அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார் வசூல் நாயகன் டெனிஸ் குமார்.

இதற்கு முன் மைக்கல் ஜாஸ்மின், சங்கீதாவுடன் டூயட் பாடிய டெனிஸ், தற்போது புதிய கதாநாயகியுடன்  இணையவிருக்கிறார். படத்தின் தலைப்பு 'தமிழ்' என்ற வார்த்தையில் தொடங்கும் என்றும், அதைக் கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் என்றும் சஸ்பென்ஸ் வைக்கும் டெனிஸ் குமார், எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி நடக்கவிருக்கும் படபூஜையில்  படத்தின் தலைப்பு முழுமையாக வெளியிடப்படும் என்கிறார். மலேசிய சினிமா உலகத்திற்கு படத்தின் தலைப்பு ஓரளவு தெரியும். ஆனால் நாயகிதான் யார்? என்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.  மேலும், டெனிஸ் கூட்டணியில் இணையும் இயக்குனரும் புதியவர் என்று கூறுகின்றனர்.

யார் அந்தப் புதிய நாயகி? உங்களுக்குத் தெரியுமா? கண்டுபிடியுங்கள் எனக் கூறுகிறார்  டெனிஸ் குமார்!

கோலாலம்பூர் ஜூலை 2-

'பரமபதம்' ஒரு கலைஞனின் மாறுபட்ட படைப்பு.

விக்னேஷ் பிரபு இயக்கத்தில், முனைவர் லட்ச பிரபு, முனைவர் சக்கரவர்த்தி இணைந்து, சாய் நந்தினி  நிறுவனத்தின்  தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் 'பரமபதம்'.

சரித்திரப் புகழ் மிக்க கெடா மாநில மண்ணின் மைந்தன் எடுக்கும் இத்திரைப்படத்தில், சரித்திர விளையாட்டுதான் படத்தின் உயிரோட்டம்.

‘பரமபத’த்தின் 2-வது டீசர் அண்மையில் தலைநகரில்  வெளியிடு கண்டது. படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு சொன்னது போல், சில காட்சிகள்  ஒரு வித்தியாசமான தளத்தில், சரிதிரப்பூர்வமான இடங்களில் காட்சியமைக்கப் பட்டுள்ளன.