loader

All News

விஷால் நடித்த 'ஆக்சன்' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.

பொதுவாக பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் இன்று அதிகாலை காட்சிகள் எந்தத் திரையரங்கிலும் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை

அதுமட்டுமின்றி இன்றைய அனைத்து காட்சிகளுக்கும் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு இருந்தபோதும் இரண்டு படங்களுக்கும் மொத்தமாக இரண்டு வரிசை கூட முன்பதிவு ஆகவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும்

ஒரு சில திரையரங்குகளில் 5 பேர் கூட முன்பதிவு பதிவு செய்யவில்லை என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ரூபாய் 50 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் 'ஆக்சன்' திரைப்படத்தை பார்க்க 5 பேர் கூட இல்லையா? என்பதே இப்போது அங்கே கேள்வியாய் இருக்கிறது!

இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் ,அடுத்த படைப்பாக ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இத்திரைப்படத்தில்   சரத்குமார், ராதிகா சரத்குமார்,  விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா  ராஜேஸ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணிரத்னம் எழுதிய கதையை, அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம்   இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமானுக்கு  முதல் வாய்பை வழங்கி, அவர் இசையமைப்பாளராக உருவெடுக்க்க் காரணமாக இருந்த மணிரத்னம், இப்போது சித்ஸ்ரீராமுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கியுள்ளார்!

தல, தளபதி ரசிகர்கள் இரு துருவங்களாக இருந்தாலும், இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் உள்ளார்கள்.

பிகில் வெற்றிக்குப் பிறகு தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
இந்நிலையில், விஜயின் 64-வது படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அதே சமயம் அஜித்தின் வலிமை படப்பிடிப்பையும் டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
இதனையடுத்து, தல - தளபதி இருவரும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்பு, மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தது. அப்பொழுது, அஜித் மற்றும் விஜய் இருவரும் சந்தித்தார்கள்.
சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இருவரின் படப்பிடிப்பும் டெல்லியில் நடைபெற உள்ளதால், இருவரும் சந்திப்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் ரஜினி, அதற்கு அடுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழு மூச்சாக இறங்க முடிவெடுத்துள்ள நிலையில், அப்படத்தைத் தயாரிக்க சுமார் 4 முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'விஸ்வாசம்'சிவா இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதில் ரஜினியின் ஜோடியாக அசுரன் பட நாயகி மஞ்சு வாரியரும் அவரது மகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் நடமாடுகின்றன. 

'தலைவர் 168'என்று பெயரிடப்பட்டுள்ள ரஜினியின் அடுத்த படம் மிக விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, அவர் அடுத்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கப்போகிறாராம். அப்படத்துக்கான இயக்குநரோ, தயாரிப்பாளரோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும் ரஜினியின் கடைசிப்படத்தை தயாரித்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் பாலசந்தரின் கவிதாலயா, ஏ.வி.எம்.,எஸ்.தாணுவின் வி புரடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டியில் உள்ளனராம். 

இவர்களுடன் தனது வுண்டர்பார் நிறுவனத்துக்கு அப்படத்தைத் தட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற முடிவில் இயக்குநர் வெற்றிமாறனுடன் தயாராக இருக்கிறாராம் தனுஷ்!

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய். 

விஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா. 

இந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது. 

ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.

ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார். 

இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்.  இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார். 

விஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை

விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.

பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். 

நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. 

விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ.

தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம். 

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்!

 

விஜயின் பிகில் திரைப்படத்திற்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் சிறப்பு காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்த பணத்தில் பாதியை கேட்டு பிரச்சனை செய்ய, செய்வதறியாது தவித்து வருகிறது தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி குழுமம்.

என்றாலும் தங்களுக்கு நெருக்கமான, அரசியல் பிரமுகர்கள் வாயிலாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பு நிறுவனம் முயன்றாலும், விஜய் வந்து தங்களிடம் பேசும் வரை எந்த முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை என ஒற்றைக் காலில் நிற்கிறது நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சி.

இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் விஜயை அணுகினால், அவரோ என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

என்றாலும் சமாதானப் பேச்சுவார்தைக்கு விஜய் தந்தை சந்திர சேகர் அவர்கள் அழைக்கப்பட்டு, அவரும் 'எடப்பாடி எங்களுக்கு தந்தை மாதிரி' என்றெல்லாம் வெள்ளைக் கொடி காட்டி இருந்தார்.

இருந்தாலும் விட மறுக்கும் அரசியல் கட்சி, நடிகர் விஜயே நேரில் வந்து பேசினால் ஒழிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டாது என செக் வைத்து விட்டதாம்!

சென்னை: பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு என அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். சிறப்பு காட்சியை திரையிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரையரங்குகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அரசின் எச்சரிக்கையையும் மீறி பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சியை திரையிடுவதாகக் கூறி டிக்கெட் விற்பனை செய்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தைக் காண திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் 10-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கெனக் கூறி அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறப்பு காட்சி இல்லாத பட்சத்தில் 6 மணி அல்லது 7 மணிக்குத் தொடங்கும் முதல் காட்சிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கதி கலங்கி நிற்கின்றனர். அதே வேளையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிகில் திரைப்படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த சமூக ஆர்வலர் தேவராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு விதிமுறைகளை மீறி வரும் 25 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிகில் சிறப்புக் காட்சியை திரையிட பல திரையரங்குகள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பண்டிகை நாட்களில் சிறப்புக் காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை சில திரையரங்குகள் தவறாக பயன்படுத்தியதால் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலேயே பிகில் உள்ளிட்ட திரைப்படங்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிகில், திகில் என எந்தத் திரைப்படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது எனவும் தெரிவித்தார்!

நடிகை ஆண்ட்ரியா தன்னுடன் தொடர்பில் இருந்த திருமணமான அரசியல் வாரிசு யார் என்பதை தெரிவிக்க இருந்த நிலையில், அரசியல் பலத்தால் அவரது வாயை அடைத்து இருக்கிறார் சர்ச்சையில் சிக்கிய அரசியல் வாரிசு நடிகர்.

முன்னதாக தான் எழுதிய 'ப்ரோக்கன் விங்ஸ்' என்கிற புத்தக வெளியீட்டு விழாவில், தான் திருமணமான ஒருவர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் செய்த கொடுமைகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி,

சில மாதங்கள் ஆயூர்வேத சிகிச்சை எடுத்து திரும்பியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தான் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தில், தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த நபர் யார் என்பது குறித்த தகவலும் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த தகவலை அவர், நேரடியாக தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியிட இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். என்றாலும் அவர் சொன்னபடி அந்த தகவலை வெளியிட வில்லை.

இதற்கு அரசியல் வாரிசு நடிகர் இவருக்கு, தனது அரசியல் செல்வாக்கை உபயோகித்து நடிகைக்கு விடுத்த மிரட்டல்களே காரணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் யார் என்பது குறித்த செய்தி வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்றும், அவசர அவரசமாக அந்தச் செய்தியை நீக்கி இருந்ததும் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது!

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி, படப்பிடிப்பு தளத்திலேயே மாரடைப்பால் திடீரென காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் புரொடக்ஷன் மானேஜராக வேலை பார்த்தார். பின்னர் நடிகராக மாறியவர், காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தவசி படத்தில் பைத்தியகாரர் வேடத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து வடிவேலுவின் குழுவில் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களிங் நடித்தார்.
குமுளி அருகே படப்பிடிப்பில் ஒன்றில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது!

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும்  தளபதி 64 படம் தற்போது உறுதியாகியுள்ளது.

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார்.

தலைப்பு இன்னும் வைக்கப்படாத நிலையில், இப்படத்திற்கான பூஜை, சென்னையில் நேற்று நடைபெற்றது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கேங்க்ஸ்டர் கதைக்களமாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பைல் கூட்டியிருக்கிறது.இதனால்,

ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  விஜய் சேதுபதி இதில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது!

 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, நட்டி, சூரி என மெகா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. 

நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியானதையொட்டி பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.

அதிலும் குறிப்பாக பலரும் தெரிவித்திருக்கும் கருத்து, இந்தப் படம் ஒரு மெகா சீரியல் என்று சொல்லியிருப்பதுதான்.

அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் இக்கதையில் குடும்ப உறவின் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களைச் சொல்லியிருப்பது அழகு. சில இடங்களில் வசனங்களால் ஈர்க்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.  

இரண்டு படங்களின் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இது முக்கியமான படம்.    அந்த வகையில் இதில் ஓரளவு தேறியிருக்கிறார். கொஞ்சம் மெகா சீரியல் பார்ப்பது போன்று இருந்தாலும், வசனங்களும், சில காட்சிகளும் ஈர்க்கின்றன. ஆனாலும், பல இடங்களில் சலிப்புத் தட்டவே செய்கிறது.

அனு இம்மானு வேல் ஏதோ வந்து போகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரம் உருக்கம். அவரின் நடிப்பும் உருக்கம். பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, நட்டி, சமுத்திரக்கனி எல்லாருமே சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சூரியின் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு கண்களில் நிற்கிறது.

பழைய பாணி கதை  போல் இருப்பதாலும், சீரியல் அம்சக் காட்சிகள் நீள்வதாலும் கொஞ்சம் சலிப்புத் தட்டினாலும்... நம்ம வீட்டுப் பிள்ளையை ஏற்றுக்கொள்ளலாம்!

 

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' முடிந்தவுடன், ஷங்கரின் அடுத்த படம் உலகப் படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

உலகத் தரத்திலான கதையும், அதற்கான முதற்கட்டப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஜாக்கி சான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நல்ல கதையம்சம் கொண்ட இந்தியப் படங்களுக்கு சீனச் சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை இயக்குனர் ஷங்கர் நன்கு கணக்கிட்டுள்ளார்.  இதை மனதில் வைத்து, தனது சந்தையை விரிவுபடுத்த விரும்புகிறார் ஷங்கர்.  

இந்திய திரையுலகின் மேலும் நான்கு சூப்பர்ஸ்டார்கள் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

நீருக்கடியில் நிகழும் அதி பயங்கர சாகச த்ரில்லராக இப்படம்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது!

 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி நிச்சயதார்த்தம் செய்து ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக பல வதந்திகள் வந்துள்ளன. 

ஆனால், அவர்கள் தரப்பு அதற்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், செய்திகள் எப்போதும் வைரலாகவே இருக்கின்றன.

தற்போது நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

டிசம்பர் 25 அன்று திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது. 

திருமணம் வெளிநாட்டில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து அல்லது கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி திருமணம் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.  இந்தத் திருமணத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பெரிய புள்ளிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது! 

 

ஒவ்வொரு படம் முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது தளபதி விஜய்யின் வழக்கம். ஆனால், அண்மைய காலமாக அந்த வழக்கத்தை மாற்றியிருந்தார் விஜய்.

இந்நிலையில்,  'பிகில்' படம் வரும் தீபாவளிக்குத் திரைக்கு வரும் நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருப்பதாலும், தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ளார். 
இதனையடுத்து விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு வேளை நம்ம மலேசியாவிற்கு வந்திருப்பாரோ புகைமூட்டம் இருப்பது தெரியாமல்?

 

அட்லி இயக்கத்தில் விஜய் - நயன் தாரா நடித்துள்ள 'பிகில்' படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் படத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே', `உனக்காக' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸார் லேசாகத் தடியடி நடத்தினர். நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள நடிகர் சிவா, ரம்யா தொகுத்து வழங்கினர்.

ரஹ்மான் கச்சேரிக்குப் பிறகு இயக்குநர் அட்லி பேசுகையில், ``தெறியை விட இரண்டு மடங்கு மெர்சல். மெர்சலை விட மூன்று மடங்கு பெரியது பிகில். என்னை வேற நடிகர்கள் கூடவும் படம் பண்ணுங்கன்னு விஜய் அண்ணா சொன்னார். ஆனால், நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது அவர்தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணாதான். என் அண்ணன விட்டு நான் எப்படி வெளியே போவேன். அவர் இல்லைனா நான், என்னோட வளர்ச்சி எல்லாம் ஒண்ணுமே இல்லை. கமர்சியல் படமா, விளையாட்டு படமா என்பதைத் தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும்.

ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஓகே ஆயிடுச்சு. அந்த சட்டைதான் ராசின்னு தெறி கதை சொன்னேன். அதுவும் ஓகே அயிடுச்சு. அந்த ராசியான சட்டை மெர்சல் பட கதை சொல்லப்போறப்போ பழசாகிடுச்சு. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சலுக்கு ஓகே சொன்னார். அப்போதான் புரிஞ்சது, எனக்கு ராசி சட்டை கிடையாது. விஜய் அண்ணன் தான்னு" என்று பேசியவரிடம், அவரது நிறம் குறித்து வெளியாகும் ட்ரோல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ப்பதிலளித்த அவர், ``இங்கிலீஷும் ஹிந்தியும் வெறும் மொழிகள் மட்டும்தான்; அதுவே தகுதி இல்ல. அதுமாதிரி கறுப்பும் ஒரு கலர் அவ்ளோதான்" என்றவர் டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறினார்.

இதையடுத்து மேடையேறிய விஜய், ``லைஃப் ஃபுட்பால் கேம் மாதிரி. நம்மலாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டம்வரும். நம்மகூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான். வெறித்தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ரஹ்மான் சாருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு போயிட்டார்.

ஒருவேளை நான் பாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனால், அட்லி போன் பண்ணி ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதா சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சது. அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டுவந்திருந்த நல்லா இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்.." என்று பேசினார்!

 

'தர்பார்' பட வேலைகளில் தற்போது ரஜினி பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையுல் ரஜினி எப்போது முழு நேர அரசியலில் இறங்குவார் என பல்வேறு தரப்பினர்ய்ம் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அவரின் ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். ஆனால், ரஜினி இதுநாள் வரைக்கும் வழக்கம்போலவே குழப்ப நிலையில்தான் இருந்து வருகிறார்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கியதோடு, தேர்தலில் போட்டியிட்டு, தமது பலத்தைக் காட்டிவிட்டார்.
ஆனால் பல ஆண்டுகளாய் கோடி காட்டி வந்தாலும், இன்னும் மௌன சாமியாராகவே தொடர்கிறார் ரஜினி.
இந்நிலையில் தமிழக பிஜேபி தலைமை பதவி ரஜினிக்குத் தேடி வந்ததாகவும், அதையும் அவர் கிடப்பில் போட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.
இன்னொரு புறம் தர்பார் படத்திற்குப் பிறகு நிச்சயம் அரசியலில் குதிப்பார் எனவும் தகவல்கள் சொல்கின்றன!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில்.  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. 95% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. படம் குறித்த அப்டேட்டுகளை அறிவிக்காததற்கு மன்னியுங்கள். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்ய முயற்சி செய்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்

மேலும் பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தளபதி விஜய். அவருடைய மனது தங்கம் போன்றது. தளபதி தான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளார்!

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய 'தி ஜங்கிள் புக்' படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது 'தி லயன் கிங்' படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. 

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன், ஃபேஸ்புக்கில் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் லயன் கிங் அரசியல் குறித்து கூறியுள்ளார்.

 

ஜெயில் திரைப்படத்தின் இறுதி ஒலிக்கலவை வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், இன்றுதான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு லயன் கிங் திரைப்படத்திற்கு செல்ல இயன்றது. திரையரங்கு முழுக்க கிராமத்தையும், வனத்தையும் பார்க்க அழைத்துச் செல்லாத பெற்றோர்கள், ஒருவிதக் குற்ற உணர்ச்சியுடன் லயன் கிங் திரைப்படத்திற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். ஒருநாளும் தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் அடர் வனத்தைக் காட்டப்போவதில்லை. ஆகவே இது ஒரு சமரச ஏற்பாடு. இதைக் குழந்தைகளும் அறிந்திருந்தார்கள். திரையரங்கில் குழந்தைகளின் ஆரவார ஒலி இடையறாது கேட்ட வண்ணம் இருந்தது. 

முக்கியமாக மனோபாலா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் இவர்களுடைய காமெடியான குரல் திரையரங்கில் இடைவிடாத சிரிப்பலையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது . ஆனால் எனக்குப் படம் பார்க்கும்போது ஒன்றுதான் தெரிந்தது. வயது வந்தவர்களுக்கு ஒரு 'பாகுபலி' என்றால் , குழந்தைகளுக்கு ஒரு 'லயன் கிங்' என்று தோன்றியது. இடைவிடாது இங்குக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சொல்லப்படுகிற கதைகளின் அரசியல், ராஜாவுடைய மகன் மீண்டும் அந்த ராஜ பதவிக்கு வர வேண்டும். அதற்காகப் போராட்டம், மற்றும் யுத்தம், குருதியாறு. இறுதியில் ராஜாவிடம் மகன் வில்லனைக் கொன்று அந்தச் சிம்மாசனத்தை அடைகிறான். மக்கள் சந்தோஷமடைகிறார்கள். இந்த அரசியலை, இது போன்ற கதைகளைத் தொடர்ந்து படங்களில் பார்ப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. மகாராஜாவின் மகனைத் தவிர, இந்த உலகத்தில் வேறு யாருக்கும் அறிவு என்பதே இல்லை என்கிற ஒருவித மூளைச் சலவையைத் தொடர்ந்து மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது வாரிசு அரசியலை மக்களாட்சியில் உருவாக்குகிற ஆயுதமாக நான் பார்க்கிறேன் என்று எழுதியுள்ளார்!

விளம்பரம்:

 

வசூலில் சாதனைகள் படைத்து, மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் ஷங்கரின் முதல்வன். இப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்தார்.
தற்போது 'முதல்வன் 2-ஆம் பாகத்தில் விஜய் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
அப்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பரப்ரப்பாக பேசப்பட்ட இப்படம் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல அரசியல் காரணங்களுக்காக ரஜினி அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் படம் ஹிட் ஆனது.

ஷங்கர் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாக இருந்த 'இந்தியன் 2' பிரச்சனைகளால் துவக்கப்படாமல் உள்ளது. '24 ம் புலிகேசி' படமும் பிரச்சனையில் இருப்பதால், ஷங்கர் மீது லைகா தயாரிப்பு நிறுவனம் கோபத்தில் உள்ளது. இதனால் ஷங்கர் தன் அடுத்த படத்தை துவக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தற்போது ஷங்கர், 'முதல்வன் 2' படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென தெரிகிறது. இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி!

தற்போது விஜயின் 63-வது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்தின் பெயரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜயின் கூட்டணியில் வெளி வர உள்ள மூன்றவது படத்தின் பெயர் 'பிகில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் தோற்றம் அளிக்கிறார்.

இரு வேறு தோற்றத்தில் அசத்திய விஜய்,
வேஷ்டி அணிந்து வயதான தோற்றம்  கொண்டு லோக்கல் டானகவும், இளமை  கால்பந்து வீரர் தோற்றத்திலும் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

படத்தின் பார்வையில் இருந்து விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் என்று தெரிகிறது.

'கேப்டன் மைக்கேல்', 'வெறித்தனம்', 'அசால்ட்', 'பிகில்' என பல பெயர்கள் வதந்திகளாக வந்த வண்ணம் இருந்தாலும், இப்போது 'பிகில்' என்ற பெயர் சூட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் கால்பந்து வீரர் தனது உள்ளூர் கால்பந்து அணியை எவ்வாறு தேசியப் போட்டியில் வெற்றி பெறச் செய்கிறார் என்பது ஒரு வரிக் கதையாக உள்ளது. மைக்கேல், பிகில் என்ற கதாபாத்திரத்தில் தளபதி நடித்துள்ளார். ஏஜெல் என்ற பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைப் புயல் ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர். 'மெர்சல்' படத்தில் பணியாற்றிய குழு இப்படத்திலும் பணியாற்றி உள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது!

கோலாலம்பூர் ஜூன் 21-

'மாலீக் ஸ்ட்ரீம்' வெளியீடான 'சிந்துபாத் திரைப்படம், இன்று (ஜூன் 21) மலேசியா முழுவதும் திரையிடப்படும் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வந்த நிலையில், தற்போது  இப்படம் வெளியீடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சற்றுத் தாமதம் ஏற்படும் என, மாலீக் ஸ்ட்ரீம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில்  அறிவித்துள்ளது.

தாமதத்திற்கான காரணம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி,  தவிர்க்க முடியாத சில காரணங்களால், படம் வெளியிடுவது தாமதமாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்பிரச்னையை விரைந்து சரி செய்து, அடுத்த அறிவிப்பை வழங்குவோம் என, மாலீக் ஸ்ட்ரீம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.  இதில், நடிகர் நாசர் தலைமயிலான பாண்டவர் அணியும்,  நடிகர் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.  இருதரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்த கேள்வியை எழுப்பி, யாருக்கு ஆதரவு என்று  செய்தியாளர்கள் கேட்டபோது, ’’இது நடிகர் சங்கத் தேர்தல்தானே.  நாடாளுமன்றத் தேர்தல் இல்லையே.  இவ்வளவு பரபரப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை.  கடந்த  காலங்களில் அவர்களுக்கு (விஷால் அணி) வாய்ப்புக் கொடுத்தார்கள். 

முறையாக இயங்கவில்லை என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புகள் வருகிறது.   என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில் ஐயா பாக்யராஜை நான் அறிவேன்.  அவர் எந்த வேலையைச்செய்தாலும் அதில் நேர்மையாக இருப்பார்.   எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவராக இருக்கும்போது 'சர்க்கார்' பிரச்சனையில் அவருக்கு எவ்வளவோ நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் நேர்மையின் பக்கம் நின்றார்.   அதனால் அவர் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்.   அவர் வெல்லுவதற்கு நான் வாழ்த்துகிறேன்.’’என்று பதிலளித்தார்!

'பொன்னியின் செல்வன்' படத்தை ரூ. 800 கோடி செலவில் எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து படம் எடுக்க உள்ளார் இயக்குநர் மணிரத்னம். 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.  அந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேற உள்ளது. இரண்டு பாகங்களுக்கான பட்ஜெட் ரூ. 800 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. படத்தை பாகுபலியை விடப் பிரமாண்டமாக எடுக்கப் போகிறாராம். கிராபிக்ஸ் பணிகள் ஆச்சரியப்படும் வகையில் இருக்குமாம். மணிரத்னம் தனது இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தது இல்லை. இதுதான் முதன் முறை ஆகும்.

'பொன்னியின் செல்வன்' கதைக்கு ரூ. 800 கோடி தாராளமாக செலவு செய்யலாம். அதில் தவறே இல்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மணிரத்னம் தேர்வு செய்துள்ள நடிகர்கள், நடிகையர்களில் சிலர் அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள். தயவு செய்து அவர்களை நடிக்க வைக்க வேண்டாம் சார் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் போன்ற அற்புத படைப்பைப் படமாக எடுக்காமல் இருப்பதே நல்லது.

கற்பனையில் உள்ள கதாபாத்திரங்களைத் திரையில் காட்ட வேண்டாம். மணிரத்னம் இந்த முயற்சியை கைவிடுவது நல்லது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்!

 

எழுத்தாளரும், நாடக மற்றும் திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட மொழி எழுத்தாளர் கிரிஷ் கர்னாட். 1938- ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது.

கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார். உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 -ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

தமிழில் 'காதலன்', 'ரட்சகன்', 'ஹேராம்', '24' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார்.

கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகளும் பெற்றவர்.

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என நாடக,  திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த அவர், உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த அவர்  இன்று அதிகாலை  காலமானார். அவரது மறைவுக்குத் திரைப்பட பிரபலங்கள், கலைஞர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்!

நடிகை கீர்த்தி சுரேஷின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாற்றில் சாவித்ரியாக  நடித்ததில் இருந்து கீர்த்தி சுரேஷுக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  உடற்பயிற்சி முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். அதில், மிகவும் உடல் இளைத்துக் காணப்பட்டார். இதனால், பலரும் இப்புகைப்படத்தை இணையத்தில் பகிரத் தொடங்கினர். விளையாட்டை மையப்படுத்திய படங்களில் நடிக்கவுள்ளதால், உடலை அவர் மிகவும் குறைத்துள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

வட சென்னை படத்திற்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் அசுரன். இது ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம். இதில் தனுஷ் விவசாயியாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
மஞ்சு வாரியார் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தனுசுக்கு உதவும் ஒரு அதிகாரியின் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி!

இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குறளரசன், நபிலா அஹமத் எனும் இஸ்லாமியப் பெண்ணை கடந்த 26-ஆம் தேதி எளிய முறையில் திருமணம் செய்தார்.

இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உற்சாகம் பொங்க அனைவரையும் வரவேற்றார் டி.ஆர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாக்யராஜ், லதா ரஜினிகாந்த், சித்தார்த், வெங்கட் பிரபு, கௌதம் கார்த்திக் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். முதன் முறையாக சிம்பு தனது ஸ்லிம் லுக்கில் அசத்தியது, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது!

தனது காதலன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகை நயன்தாரா விரைவில் குட்பை சொல்லக்கூடும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவைக் காதலித்து வந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிம்புவிடம் இருந்து பிரபுதேவாவுக்கு மாறினார். பின்னர் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விக்னேஷ் சிவன் கைக்கு மாறினார் நயன்தாரா. இப்பொழுது இங்கும் சிக்கல் விழுந்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது
விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் கடந்த சில வருடங்களாக நன்றாக சென்றுகொண்டிருந்தது. இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது திருமணம் எனும் வார்த்தையால் திரும்ப விரிசல் விழுந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஊர் சுற்றிவருவது விக்னேஷ் சிவன் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் நயன்தாரா பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவன் வீட்டிற்கு சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கிறது!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63-வது படத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்பிறகு சென்னையில் கிரிக்கெட் விளையாட்டை ஷாருக்கான் பார்க்க வந்தபோது அவரை அதே மைதானத்திற்குச் சென்று சந்தித்தார் அட்லீ. பின்னர் இருவரும் தனியாகவும் சந்தித்து பேசினார். விஜய் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தவே அட்லீ சென்றதாகவும், 'மெர்சல்' படத்தின் இந்தி ரீ-மேக் தொடர்பாகப் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் விஜய் - ஷாருக்கான் நடிப்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் 63-வது படத்தில் 15 நிமிடம் மட்டுமே வரக்கூடிய ஒரு எதிர்மறையான கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
விஜய் 63-வது படத்தில் ஷாருக்கான் குறைவான நேரமே வந்தாலும், அவரது கேரக்டரை எதிர்பார்க்க வைக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெறுகிறதாம்!

'பிக்பாஸ் 2' புகழ் மஹத், அவருடைய காதலி பிராச்சி இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று லக்னோவில் அவர்களின் நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. `மங்காத்தா', `ஜில்லா', `காளை', `வல்லவன்', `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' ஆகிய படங்களிலும் நடித்தவர் மஹத்.

ஆனாலும், மஹத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகுதான்... 
மஹத்தும் அவர் காதலி பிராச்சி மிஸ்ராவும் துபாயில் நடந்த விழாவொன்றில்தான் முதன்முதலில் சந்தித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு காதலைச் சொல்லியிருக்கிறார்கள். பல வருடங்களாகக் காதலில் இருந்தவர்களுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
பிராச்சி, 2012-ல் 'மிஸ் இண்டியா எர்த்' அழகியாகத் தேர்வானவர். இபதுபாயில் ஃபேஷன் அண்ட் ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வைத்திருக்கிறார்!


அண்மையில் ஒரு சினிமா மேடையில் தயாரிப்பாளர் ராஜன் "ஆன்லைன்ல பெண்களும் ஒரு தப்பு பண்ணுறாங்க. பெரிய ஆளுங்களைத் தாங்கள் டச் பண்ண முடியலைன்னாலும், அவுங்கள பத்தி தப்பா சொல்லி டேமேஜ் பண்ணுறாங்க" என்று 'மீடூ' குறித்து விமர்சித்தார்.
பிறகு, " இதெல்லாம் ஸ்ரீரெட்டி என்று ஒரு பொண்ணு ஆரம்பிச்சது. அவங்க ஒழுக்கம் தவறாத ஆந்திர கண்ணகி" என்று கிண்டலாகக் கூறி "அவுங்கதான் இந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார். அந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார்னு சொன்னாங்க. நான் கேக்குறேன், நீ எத்தனை பேரை கூப்பிட்ட?" என்று பரபரப்பைப் பற்ற வைத்தார்.
தொடர்ந்து  "சமீபத்தில் குஷ்பூ ஒருத்தனை அடிச்சிருக்காங்க. அது கரெக்ட். அடிக்கணும், நம்ம பெண்களை தவறா பயன்படுத்த நினைச்சா அடிக்கணும். ஆனா, அந்த அடிப்படையில ஒரு பொண்ணு முந்தாநேத்து வைரமுத்துவை தரக்குறைவா பேசியிருக்கு. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் வரிசையில் தமிழைக் காப்பாற்றுபவர் வைரமுத்து. அவரை இப்படியெல்லாம் சீண்டுவது தவறு. எவ்வளவு கஷ்டப்பட்டு உயர்ந்திருக்காங்க அவங்க. அவர்களைப் போய் ஒரு சின்ன ஆசைக்காக சிதைக்கிறீங்க? அப்படிப் பார்த்தால், என்கிட்டே சில ஆளுங்க இருக்காங்க, பார்த்துக்கங்க" என்று தொடர்ந்து மீடூ குறித்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த பெண்கள் குறித்தும் கடும் விமர்சனத்தை வைத்தார்.

இவருக்குப் பின் நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குனர் பா.ரஞ்சித், கே.ராஜன் பேசியது குறித்த தனது கருத்தை தெரிவித்தார். "அய்யா ராஜன் அவர்கள் பேசுனாங்க. அதுல பெண்கள் குற்றச்சாட்டு வைப்பதை பற்றி மட்டும் பேசுவது தவறு. அவர்களது குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும், விசாரிக்க வேண்டும். சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் போக்கு நிறைந்திருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி இருக்கும்போது ஸ்ரீரெட்டி போன்றோர் குற்றச்சாட்டுகளை வைப்பதாலேயே அவர்களை குற்றம் செய்தவர்களாக பார்ப்பதும் அவர்களை குறை சொல்வதும் மிக மிக தவறு. இதை நான் எதிர்க்கிறேன். மகிழ்ச்சி" என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

பல மேடைகளில் ரஞ்சித், ஏற்கனவே பேசியவர்களின் கருத்தை மறுத்து பேசியிருக்கிறார், தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் நடந்த பல சினிமா விழாக்களில் மேடையிலேயே கருத்து பரிமாற்றங்களும் மோதல்களும் நடந்திருக்கின்றன!