loader

All News

நமது  ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் எடுக்கப் பயன்படும் செயலிகளில் மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும், பயனாளர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இதில், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 எக்ஸ்.எல் மற்றும் பிக்சல் 3  ஸ்மார்ட்போன் செயலிகளும் விதிவிலக்கல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகைப்படச் செயலிகளின் இந்தக் குளறுபடி குறித்து எரிஸ் யாலன் என்கிற கூகுள் பாதுகாப்பு ஆய்வாளர் பாதுகாப்பு குறைபாடு குறித்து கூகுள் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 4-ஆம் தேதி யாலன் அளித்த புகாரை ஆகஸ்ட் 11-ஆம் தேதி கூகுள் நிறுவனம் ஏற்றுக்கொண்டதோடு பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்துள்ளது.

இதில் அதிகமாக சாம்சங் மொபைல்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிலும் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தங்கள் குழுவின் சந்தேகத்தை உறுதி செய்துள்ளதாகவும். இந்தப் பிரச்னை கூகுள் பிக்சல் போன்களில் மட்டுமல்லாமல், மற்ற  ஆண்ட்ராய்டு செயலிகளிலும் உள்ளதையும் கூகுள் உறுதி செய்துள்ளதாக யாலன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூகுள்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸை சரி செய்வதற்குத் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது, கூடிய விரைவில் இது சரி செய்யப்படும். ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவோர் கூகுளால் பரிசோதனை செய்யப்பட்ட செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் படி கூகுள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

 

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் இலங்கை மக்கள் முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும்  ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத்  துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்து. இதனையடுத்து 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  

இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், அதிகளவில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர்.  இதனால் வெற்றி வேட்பாளரை அறிவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

52.25 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார்.  சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கை அதிபராகக் கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

டெங்கியைப் பரப்பும் கொசுவான Aedes Aegypti கடிப்பதன் மூலம் மட்டும்தான் டெங்கி பரவுகிறது என்ற கருத்து தற்போது பொய்யாகி உள்ளது. உடலுறவின் மூலமும் டெங்கி பரவுகிறது என்பதை, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

`கியூபா நாட்டிலிருந்து திரும்பிய, டெங்கி வைரஸால் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் மூலம், மேட்ரிட் நகரத்தைச் சேர்ந்த 41 வயதான ஓர் ஆண், டெங்கி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது' என அந்நாட்டின் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`செப்டம்பர் மாதத்தில், மேட்ரிட் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டெங்கி இருப்பது உறுதியானது. இது மருத்துவர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஏனென்றால் உடல் வெப்பநிலையில் ஏற்றம், உடல்வலி போன்ற ஃப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய டெங்கி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், டெங்கி பரவும் எந்த ஒரு நாட்டுக்கும் இதுவரை சென்றதில்லை என்பது, மருத்துவர்களை யோசிக்க வைத்தது.

எப்படி இவருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முற்பட்டபோது, பத்து நாள்களுக்கு முன்பாக, இவரின் ஆண் பார்ட்னர், குறைந்த அளவு டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகளோடு இருந்தது தெரியவந்தது. அவர் கியூபா நாட்டுக்குச் சென்று திரும்பியவர்.

எனவே, ஒருவேளை அவர் மூலமாக இவருக்குப் பரவியிருக்கலாம் என, இவர்கள் இருவருக்கும் விந்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கியூபாவில் உள்ள அதே வகையான டெங்கி வைரஸின் பாதிப்பு இருவருக்கும் இருந்தது கண்டறியப்பட்டது.

Doctor

ஸ்டாக்ஹோமில் செயல்படும் `ஈரோப்பியன் சென்டர் ஃபார் டிசீஸ் ப்ரிவென்ஷன் அண்டு கன்ட்ரோல்' அமைப்பு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள நோய்கள் மற்றும் ஆரோக்கியம்  குறித்த தகவல்களைக் கண்காணிக்கும் நிறுவனமான AFP க்கு அனுப்பியுள்ள மெயிலில், `உடலுறவு மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு ஆண்களுக்கு டெங்கி பரவியுள்ளது என்பதை அறிவிக்கும் முதல் கேஸ் இது' என்று கூறியுள்ளது!

 

வாரத்துக்கு ஐந்து நாட்கள் பணி என்பது ஐடி நிறுவனங்களின் வழக்கமாகும். ஆனால், ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிக்க வாரத்துக்கு 4 நாட்கள் பணியாற்றினால் போதும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது பணிக்கும் பெர்சனல் வாழ்க்கைக்கும் நல்லது என்பதை உணர்ந்து இதைச் செயல்படுத்துவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மைக்ரோசாப்ட் தனது நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு குழுவைச் சேர்ந்த 2,300 பணியாளர்களுக்கு மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அறிவித்தது. அத்தனை விடுமுறைகளும் ஊதியத்துடனே வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியின் தரம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் ஜப்பான் மைக்ரோசாஃப்ட் உறுதிபடுத்தியுள்ளது.

விடுமுறை, பிடித்த நேரம் வேலை செய்யலாம் போன்ற சலுகைகள் பணியாளர்கள் நேரம் விரயம் செய்வதையும் தடுத்துள்ளதாம். நேர விரயம் 25.4 சதவீதம் குறைந்துள்ளதாம். கூடுதலாக மின் கட்டணம், பேப்பர் வேஸ்டேஜ் போன்ற பல நன்மைகளும் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளதாம்!

ஆண்களைப் பாலியல் செயல்பாடுகள் இல்லாமல் சகித்துக்கொண்டு, முப்பது நாள்கள் காம விரதம் இருப்பதை ஊக்குவிக்கும் NoNutNovember ஹாஸ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தச் சவாலால் ஏற்படும் கஷ்டத்தைப் பற்றி பலர் கேலி செய்தாலும், பலர் இந்தப் பிரம்மாண்ட சவாலில் பங்கேற்கத் தயாராக இருந்துவருகின்றனர்.

வழக்கமாக NoShaveNovember எனும் ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகும் நிலையில், இந்தாண்டு இதற்கு மாற்றாக NoNutNovember எனும் ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது.

NoShaveNovember எனும் ஹாஸ்டேக் சவாலை ஏற்கும் இணையவாசிகள், நவம்பர் மாதம் முழுவதும் தங்கள் தாடியை எடுக்காமல், தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிருவதுண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு இதற்கு மாற்றாய் NoNutNovember எனும் டேக் பிரபலமாகியுள்ளது.

NoNutNovember என்று அழைக்கப்படும், இந்தச் சவால் ஆண்களைப் பாலியல் செயல்பாடுகள் இன்றி முப்பது நாட்கள் சகித்துக்கொள்ள ஊக்குவிக்கிறது!

 

தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் நுாலை இந்திய பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு இன்று முதல் 4-ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக மோடி செல்கிறார். இதனையடுத்து தலைநகர் பாங்காக்கில் நடக்கும் ஆசியான் - இந்தியா கிழக்கு ஆசியா ஆர்.சிஇ.பி. எனப்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி ஆகிய அமைப்புகளின் மாநாடுகளில் மோடி பங்கேற்கிறார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு இன்று செல்லும் மோடி தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை வெளியிடுகிறார். அத்துடன் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டையொட்டி நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார்.
தாய்லாந்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

விண்வெளித்துறையில் இந்தியாவைச் சமாளிக்க பிற நாடுகளின் செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை இயக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிராகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சந்திராயன் 1 , சந்திராயன் 2 , என நிலவை ஆராயும் திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தி உலக நாடுகளை பிரமிக்கவைத்துள்ளது இந்தியா.

தன் கடின உழைப்பின் மூலம் சர்வதேச நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கவைத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. இதனால் விண்வெளித்துறையில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது, பல நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும் நிலை உருவாகியுள்ளது. விண்வெளித் துறையில் ஆற்றும் சாதனைகளுக்காக இந்தியாவைப் பல நாடுகள் பாராட்டி வரும் நிலையில் அது சீனாவுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நிலவு ஆராய்ச்சி, சோதனை என்று ஒரு பக்கம் இயங்கிவந்தாலும், மற்றொரு புறம், விண்வெளி ஆராய்ச்சி துறையை இந்தியா வர்த்தக ரீதியிலும் கையாண்டு லாபம் ஈட்டிவருகிறது. இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் பல நாடுகளுக்கு சொந்தமான சுமார் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது  இஸ்ரோ, இதனால் விண்வெளி வணிகச் சந்தையில் இந்தியா தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது. இதனிடையே இந்தியாவின் விண்வெளி வர்த்தகப் போட்டியைச் சமாளிக்கும் நோக்கில், தற்போது சீனாவும் இதில் களமிறங்கியுள்ளது.

அதற்காகப் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் வகையில் ஒரு புது ரக ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மிக அதிக எடையைத் தாங்கி செல்லும் வகையில் அந்த ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராக்கெட் திட திரவ எரிபொருளை கொண்டு இயங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுவருகிறது. இதற்காக ஆகும் செலவை அந்நாட்டு மக்களிடம் வரியாக வசூலிக்க சீனா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது!

(நன்றி: ஆசியா நெட் நியூஸ்)

 

சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 23-1-2015 அன்று இறந்தபின்னர் அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்-தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜெத்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்க அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்-ஐ நோக்கி அவரது நண்பர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கொலையாளியைச் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் காயமடைந்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன!

 

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அலமோகோர்டோ நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

அவருடன் காரில் மேலும் 3 சிறுமிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே குடிபோதையில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், வேதனையான மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் 12-13 வயதுக்கு இடைப்பட்டவர்கள்தான்.

தோழிகளான இவர்கள் 4 பேரும் காரில் குடிபோதையில் அதிவேகத்தில் பயணித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சிறுமிகள் பயணித்த காரை அவர்கள் விரட்டிச் சென்றுள்ளனர்.

போலீசார் சேஸ் செய்வதை அறிந்ததும், காரை ஓட்டிய சிறுமி இன்னும் வேகமாகச் சென்றுள்ளார். இதனால் அந்த கார் போலீசாரின் 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இறுதியாக வேக வரம்பு தொடர்பான பலகை ஒன்றில் மோதி கார் நின்றது.

அதுவரை காருக்குள் இருப்பது சிறுமிகள்தான் என்பது போலீசாருக்குத் தெரியாது. காரில் இருந்த சிறுமிகள் குடிபோதையில் வெளியே வருவதைம் கண்டதும் போலீசாரே அதிர்ச்சியடைந்து விட்டனர். இதனையடுத்து காவல்துறை உரிய நடவடிக்கையை மேற்கொண்டனர்!

 

 

இலங்கை, கொழும்பு, வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று  காலை ஏற்பட்ட இந்த தீயைக் கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தீவிபத்துச் சம்பவம் காரணமாக கொழும்பு - 2 மற்றும் கட்டுநாயக்க பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தீயை அணைக்கும்  முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன!

ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பழி தீர்க்கும் விதமாக பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் பல லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து சுட்டுக் கொன்றன. இதன் பின்னர் அல்கொய்தா இயக்கத்திற்கு பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமை பொறுப்பை ஏற்றார்.

இதனால், அவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.  இந்நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியானது.  

இது பற்றி இதுவரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளிவராத நிலையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் ஓசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் 3-ஆவது மனைவிக்குப் பிறந்த ஹம்ஸா பின்லேடன், அவரது 20 குழந்தைகளில் 15 ஆவதாகப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

இதுவரை இல்லாத அளவுக்குப் பற்றிய எரியத் தொடங்கியிருக்கிறது ‘உலகின் நுரையீரல்’ என்று வர்ணிக்கப்படும் ‘அமேசான்’ காடுகள்.அமேசான் மழைக்காடுகள், கோடைக்காலத்தில்கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக்கூடியதல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்கக் காடுகளைக் கொண்டது. அங்குக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் மனிதர்களே என்கிறார்கள் சூழலியலாளர்கள்.  இதில் பெரும்பாலான விபத்துகளுக்கு மனிதர்கள் பற்ற வைத்ததால் உருவான காட்டுத்தீதான் காரணம்.

பிரேசில் நாட்டின் ஆராய்ச்சி மையம் (INPE)  இதுவரை உருவான காட்டுத்தீயின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 80 சதவிகிதம் அதிகம் என்கிறது. இதனால், உலகிலேயே அமேசான் காட்டிற்கு மட்டுமே சொந்தமான பல தனித்துவமிக்கச் சூழலியல் பகுதிகள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.

``அமேசான் காட்டுத்தீக்கு முழுக்க முழுக்க வறட்சியான காலநிலை, வறண்ட காற்று, அதீத வெப்பம் போன்றவையே காரணம்" என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். வானியல் ஆய்வாளர் ஹேலி பிரிங்க், ``இதற்குத் தட்பவெப்பநிலையோ காலநிலையோ, மின்னலோ எதுவும் காரணமில்லை. இது மனிதர்களால் உண்டான காட்டுத்தீ தான்" என்று சுற்றுச்சூழல் அமைச்சரின் கூற்றை மறுத்துள்ளார்.

ஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்குச் சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். அது நடந்த சில நாள்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதையும் அது மனிதர்களால் ஏற்பட்டதுதான் என்று சூழலியல் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுவதையும் எதேச்சையாக நடந்ததென்று கடந்து போக முடியாதென்று சூழலியல் ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

 

இன்னொருபுறம், பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோதான் காரணமென்று பிரேசிலைச் சேர்ந்த சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொல்சானாரோ அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அமேசான் காட்டைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியதைப் போலவே பண்ணையாளர்கள், விவசாயிகள், இயற்கை வள நிறுவனங்களைக் காடுகளைப் பயன்படுத்திக்கொள்ள விடப்போவதாகவும் அதற்காகவே மழைக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுத்தி அதன் பெரும் பகுதியை அழிக்கத் திட்டமிட்டு இதைச் செய்துள்ளதாகவும் அவர்மீது பிரேசிலைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

``கடந்த மூன்று வாரங்களாக அமேசான் மழைக்காடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகிவிட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும் பெருவிவசாயிகளும்தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றிச் செய்வதற்குத் தகுந்தவகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறிக் காட்டுத்தீ வளர்ந்துவிட்டது. அவர்கள் பற்றவைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை" என்று பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணி.

எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு பெருவிவசாயிகளை, ஆக்கிரமிப்பாளர்களை, நிறுவனங்களை அமேசானை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு உருவாகியிருக்கும் அரசும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் உலகின் நுரையீரலை விற்பனைப் பொருளாக்கி அதன்மூலம் லாபம் பார்க்கமுடியும். அப்போதுதான் அந்த நிலத்தைப் பண்ணையாளர்களுக்குக் கூறுபோட்டு விற்றுத் தீர்க்கமுடியும். அப்போதுதான் நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் திருட வழி செய்துகொடுக்க முடியும். மழைக்காடுகளைத் திருடும் மாஃபியா கும்பலிடம் அமேசானைச் சிக்கவைத்துச் சீரழிக்க முடியும்.

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும். ஆனால், அமேசான் அழிந்தால் அது உலக அழிவையே விரைவுபடுத்திவிடும். ஏனென்றால், அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல; அதுதான் உலகின் நுரையீரல். அதிகபட்ச பிராண வாயுவை வாரிக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளல். இன்று பிரேசில், ஈக்வடார் போன்ற அரசுகள் செய்துள்ள செயல் நமக்குப் பாதுகாவலனாக இருந்த காட்டைச் சீரழிக்கிறது. அதிலிருந்தே நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள்.

அமேசான் காடு உலகின் பிராண வாயு உற்பத்தியில் 20 சதவிகிதம் பங்கு வகிக்கின்றது. `பூமியின் நுரையீரல்' என்ற பெயரும் அதற்கு உண்டு. அதன் தொடர்ச்சியான அழிவு, பிராண வாயு உற்பத்திக்குப் பதிலாக அதிகமான கரிம வாயுவை வெளியேற்ற வைக்கிறது. அது மீட்டுருவாக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்தால், பயன்களைவிட அபாயங்கள் அதிகமாக இருக்கும்.

"நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஓர் ஆயுதம்தான் அமேசான். இப்போது அமேசானைக் காப்பாற்றுவதால் நாம் அதை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை, அதன்மூலம் நமக்கு நிகழவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம்!"

(நன்றி : விகடன்)

 

இஸ்ரேல் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் அந்நாட்டில் உள்ள எகியம் பகுதியில் இயங்கி வரும் மால்கா ப்ரீவரீஸ் என்ற நிறுவனம், அதன் மது பாட்டில்களில் 5 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை இடம்பெறச்செய்தது. இதில் காந்தியின் புகைப்படமும் ஒன்று.

இது இந்தியர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் துணைக்கூடியரசு தலைவர் வரை சென்ற நிலையில், இதனை தயாரித்த நிறுவனம் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாகவே நாங்கள் அவரது புகைப்படத்தை எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்தினோம். மேலும் எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்திய 5 தலைவர்களில் காந்தி மட்டுமே இஸ்ரேலைச் சாராதவர். நாங்கள் காந்தியை மிகவும் மதிக்கிறோம். இருப்பினும் இந்திய மக்களை வருத்தப்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது. மேலும் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது!

  

யூ.எஸ்.ஐ.பி.சி. எனப்படும் அமெரிக்க- இந்திய வர்த்தக சபை கூட்டமைப்பு 'குளோபல் லீடர்ஷிப்' என்கிற விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. வர்த்தகத்தில் சிறப்பாகப் பங்காற்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா பெரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 2019- ஆம் ஆண்டிற்கான விருதுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் அமெரிக்க பங்குச்சந்தையின் நாஸ்டாக் அமைப்பின் தலைவரான அடேனா ஃப்ரைடா மேனும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

  

உலக அளவில் டிரெண்டிங்கில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம். 'Pray for Nesamani'

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய் சூர்யா வடிவேலு, ரமேஷ்கண்ணா ஆகியோர் நடித்து 2000-ஆம் ஆண்டில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில், கட்டுமான குத்தகையாளராக வடிவேல், 'நேசமணி' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். எப்பொழுது பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும் படம் இது.

இந்தப் படத்தில் வடிவேலுவின் அண்ணன் மகனாக ரமேஷ்கண்ணா நடித்திருப்பார்

இப்படத்தின் ஒரு காட்சியில் ரமேஷ்கண்ணா வடிவேலுவின் தலையில் சுத்தியலைப் போட்டுவிடுவார். இதனால் தலை சுற்றி கீழே விழுவார் வடிவேல்.

இந்தச் சுத்தியல்தான் நேசமணியை உலக அளவில் அடையாளம் காட்டியிருக்கிறது.

'Civil Engineering Learners' என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றைப் போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என வெளிநாட்டுக்காரர் கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்தச் சுத்தியல்தான் பதம் பார்த்தது என விளையாட்டாய் பதிவிட, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.

இதைத் தொடர்ந்து 'Pray for Nesamani' உலக டிரண்டில் இடம்பிடித்தது.

விளைவு, மீம்ஸ் படைப்பாளிகளின் கற்பனையில், விதவிதமாக நேசமணியாகிய வடிவேலு உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

உச்சகட்டமாக . 'Pray for Nesamani' என்ற டிசட்டையும் ஒரே நாளில் தயார் செய்து பரபரப்பு கூட்டியிருக்கிறார்கள் சில இளைஞர்கள்.

மோடி பிரதமராகப் பதவியேற்கும் செய்தியை விடவும், நேசமணி அதிக ட்ரெண்டிங்கில் இருப்பதால், பிஜேபி கட்சியினரும் நேசமணிக்கு எதிரான தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

எப்போதோ வெளியான நகைச்சுவை காட்சிகூட எந்தக் காலத்திலும் முக்கியத்துவம் பெறும் என்பதற்கு நேசமணி ஒரு சாட்சி!

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கிப் பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

 

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில், ஏமன் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர்புரிந்துவருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களின் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம்கள் என்பதாலும், செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் பெற்றிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளிக்கிறது. ஆயுதங்கள், பயிற்சிகள் அளிக்கிறது.

 

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடிக்கும் நிலையில், கடந்த மே 14-ஆம் தேதி, சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை, தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் பைப் லைன்மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான வெள்ளி  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

 

இந்நிலையில், நேற்று (மே 20-ஆம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, சவுதி அரேபிய நகரமான டைப் மீது பறந்த ஏவுகணை ஒன்றை, சவுதி ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்துத் தகர்த்து எறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கித்தான் ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் ஓர் ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர். ஜெட்டா நகர்மீது அந்த ஏவுகணை பறந்தபோது, சவுதி விமானப்படையால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இந்நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் ராணுவம்தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'இந்த ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்!

அமெரிக்காவில், கடந்த வாரம் 'மிஸ் அமெரிக்கா' 'மிஸ் டீன்  யு.எஸ்.ஏ', 'மிஸ் யு.எஸ்,ஏ' ஆகிய அழகிப் போட்டிகள் நடந்தன. இதில், செஸ்லி க்ரைஸ்ட் என்ற 28 வயது பெண்,  'மிஸ் யு.எஸ்.ஏ' பட்டத்தையும்,  காலே காரிஸ் என்ற 18 வயது பெண்  'மிஸ் டீன் யு.எஸ்.ஏ' என்ற பட்டத்தையும், நியா ஃபிராங்க்ளின் என்ற 25 வயது பெண்  'மிஸ் யு.எஸ்.ஏ' பட்டத்தையும் வென்றுள்ளனர். இவர்கள் மூவருமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எனப்படும் கறுப்பினப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் மே மாதம், அமெரிக்காவில் மூன்று பட்டங்களுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்படும்.
அந்த வகையில், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, மூன்று அழகிப் பட்டங்களையும் கறுப்பர் இனப் பெண்கள் தட்டிச்சென்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா போன்று நிறப் பாகுபாடு உள்ள நாட்டில், கறுப்பர் இனப் பெண்கள் நாட்டின் அழகிகளாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிகழ்வு உலக நாடுகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1984-ஆம் ஆண்டு நடந்த மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில், வெனிஸா வில்லியம்ஸ் என்ற கறுப்பினப் பெண் வாகை சூடி, அமெரிக்க வரலாற்றில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

இலங்கையில் குண்டுவெடித்த தினத்தன்று ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கையில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பல்வேறு மக்கள் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நிறைய பேருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இதனால் இலங்கை தேசிய ரத்த வங்கி சார்பில் ரத்தம் தேவை என அறிவிப்பு செய்யப்பட்டது. வலைதளங்கள் வாயிலாகவும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் இந்த அறிவிப்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே நூற்றுக்கணக்கான மக்கள் இலங்கை தேசிய ரத்த வங்கியில் குவியத் தொடங்கினர். அப்போதும் தொடர்ந்து குண்டுகள் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருந்தது. இதனால் அரசு சார்பில் ``மக்கள் ஓர் இடத்தில் அதிகமாகக் கூட வேண்டாம்; பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதைக் கண்டுகொள்ளாத மக்கள் ரத்த வங்கியில் குவியத் தொடங்கினர். ஒருகட்டத்தில் அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திணறியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என அங்கு காத்திருந்து தானம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகப் பரவ, இந்தத் துயரத்திலும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய இலங்கை மக்களைப் பலரும் பாராட்டினர். ``இதுதான் இலங்கை மக்களின் நிஜ முகம். இந்த மனிதம் இருக்கும் வரை இலங்கை என்றும் வீழாது" எனப் பலரும் மக்களைப் பாராட்டி வருகின்றனர்!

கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருப்பதை உறுதி செய்யும், வகையிலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும், நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து கடந்த ஈஸ்டர் தினமான, ஞாயிற்றுக்கிழமை, அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 310 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தற்கொலைப்படையினர் 7 பேரும், இலங்கையிலுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது சன்னி பிரிவை சேர்ந்த அமைப்பு, என்று, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களால் நடத்தப்படும், அல் குர்பா மீடியா என்ற சமூக வலைத்தள பக்கத்தில், இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் காரணம் என்பதை போன்ற தகவல்கள் உள்ளன. தாக்குதலில் ஈடுபட்டோர் தொடர்பான படங்கள், அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பதைப் போன்ற படங்கள் அதில் உள்ளன!

இதன் மூலம், இலங்கையில் முதல் முறையாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் எப்படி, மூளைச் சலவை செய்தார்கள், எப்படி இவ்வளவு வெடிகுண்டுகளைத் திரட்டினர் என்பது போன்ற விசாரணையில் தற்போது இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்!

டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் (வயது 46). இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உண்டு. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தார்.  டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் இவர்.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர்.  
ஆன்ட்ரஸனுக்கு ஸ்காட்லாந்து நாட்டின் 1 சதவிகித நிலம் சொந்தமானது. இந்த நாட்டில் ஆன்ட்ரஸனுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்டசர்ஸனுக்கும் சொந்தமாக 200,000 ஏக்கர் நிலம் உள்ளது. பிரிட்டனில் அதிகளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன.
பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்ஸனுக்குச் சொந்தமான `பெஸ்ட் செல்லர்' நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஆஸோஸ், ஸாலான்டோ நிறுவனங்களிலும் ஆன்ட்ரஸனுக்கு குறிப்பிடத்தக்க ஷேர்கள் உள்ளன. `இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்' என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்!

இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்திருக்கிறது. 500 பேர் வரை காயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல், இலங்கையை நிலைகுலையச் செய்திருக்கிறது. தாக்குதலில் பெரும்பாலானாவை தற்கொலைப்படைத் தாக்குதலே என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு சர்வதேச நாடுகள் பலவும் தங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன.
மேலும், பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில், அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 6 மணியுடன் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை போலீஸார் 24 பேரை இதுவரை கைதுசெய்திருக்கிறார்கள். அவர்கள், குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள், 3 மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்களில், கொழும்பு நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த வெளிநாட்டினர் 11 பேர் இறந்ததாக, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. அதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேரும், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த ஒருவரும், துருக்கியைச் சேர்ந்த இருவரும், மேலும் இருவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 9 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கொழும்பு பண்டாரநாயக்கே விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டைக் கண்டுபிடித்த இலங்கை போலீஸார், அதை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்திருக்கிறார்கள். தாக்குதல் நடைபெற்றபோது, வெளிநாட்டில் இருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, நாடு திரும்பியிருக்கிறார்
தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இதுவரை 24 பேரைக் கைதுசெய்துள்ள இலங்கைக் காவல் துறை, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்துகிறது. இலங்கை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலானாய்வுக் குழுவை இலங்கை அமைக்க இருக்கிறது.
இலங்கைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவரின் விளக்குகள் நேற்று நள்ளிரவில் அணைக்கப்பட்டன!

ஏலியன்கள் குறித்து ஏராளமான விஷயங்களும், கற்பனைக்கு எட்டாத கருத்துகளும் உலாவிக் கொண்டிருக்கின்றன.   இந்நிலையில், பூமியில் கார்பன் உடலோடு ஏலியன்கள் இருக்கின்றன. இதனால் ஏலியன்களை அவ்வளவு சீக்கிரம் பூமியில் அடையாளம் காண மனிதர்களால் முடிவதில்லை என,  நாசா விஞ்ஞானி ஒருவர் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில ஏலியன்கள் பூமிக்கு இனச் சேர்க்கைக்காக வந்து செல்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

ஏலியன்கள் யார்?

ஏலியன்கள் என்பது மனித உருவத்தை விட பெரியதாகவும், அல்லது சிறியதாகவும், இந்து சமய புராணங்களில் குறிப்பிட்ட கடவுள்தான் ஏலியன்கள் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். இதிகாசம், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் குறித்து நாசாவும் ஆராய்ந்து வருகிறது.

ஏலியன்கள் மனிதர்களுடன் இணைந்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்த போது  ஏலியன்கள் இணைந்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். இதுவரை பல்வேறு தேசங்களிலும் ஏலியன்கள் போன்று மனித - ஏலியன் குழந்தைகளும் பிறந்து வருகின்றன. அவர்கள் உறவினர்களைப் பார்க்க வருகின்றனர். மனித-ஏலியனுக்குப் பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு வருவதாகவும்,  நலம் விசாரித்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனராம். எது உண்மை என்பது அடுத்தடுத்த ஆய்வுகளில்தான் வெளிப்படும்!

இலங்கையில் காலை முதல் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 207 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 450 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் 27 பேர் வெளிநாட்டினர் என்றும் மேலும் 5 பேரைக் காணவில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாட இலங்கையின் கொழும்பு நகர தேவாலயங்களில் கூடியிருந்தவர்களுக்கு இன்று அதிர்ச்சியே பரிசாகக் கிடைத்திருக்கிறது. கொழும்பு நகரின் 3 தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்கள் என 6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. கொச்சிக்காடே, செயிண்ட் செபாஸ்டியன் மற்றும் பாட்டிகோலா தேவாலாயங்களில் திருப்பலிக்காக மக்கள் கூடியிருந்த வேளையில் இந்த வெடிகுண்டுகள் வெடித்தன. 

அதேபோல், வெளிநாட்டினர் நடமாட்டம் மிகுந்த ஷங்கரி லா, சின்னாமன் க்ராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. அடுத்த சில மணி நேரங்களில் கொழும்புவின் புறநகர்ப்பகுதிகளான ஒருகோடவாட்டா மற்றும் டெஹிவாலா ஆகிய பகுதிகளிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இவற்றில் இரண்டு தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். சின்னாமன் கிராண்ட் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கூறுகையில், மக்கள் அதிகம் கூடியிருந்த ஹோட்டலின் ரெஸ்டாரெண்ட் பகுதியில் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்த ஒருவர், அதை வெடிக்கச் செய்ததாக அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல், உலக நாடுகளின் தலைவர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்தக் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்திருக்கிறது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது!

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகள் - சில விலங்குகள் - இரண்டு மனிதர்களின் உடல்கள் எகிப்திலுள்ள சஹோகேவில், பூமிக்கடியில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் கிடைத்துள்ளது.

இரண்டு மனித மம்மிகளின் உடலைச் சுற்றி எலிகள் உள்பட மற்ற விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் அங்குக் கண்டெடுக்கப்பட்டன. இவை புதைக்கப்பட்டுள்ள அறையிலுள்ள சுவர் முழுவதும் இறுதிச் சடங்குகள் குறித்த ஓவியங்கள் உள்ளன.

சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான கல்லறையான இது, முற்காலத்தில் எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக விளங்கியதாகத் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்!