loader

All News

 

தென்னிந்தியத் திரையுலகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் நாகசைதன்யா, சமந்தா பிரிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு எதிர்பாராத விதத்தில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் அவரது மாமனார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டி வருகிறார். கடந்த அக்டோபர் மாதக் கடைசியில் டில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். அப்போது கூட சமூக வலைதளத்தில் அவர்கள் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து “அவர்கள் என்னவர்கள், இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி” என ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.

அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனுஷ் ஹிந்தியில் நடித்த 'அத்ராங்கி ரே' பட டிரைலர் வெளியீட்டின் போது படக்குழுவினரைப் பாராட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இவர்களது பிரிவு பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த், தனுஷ் இருவரது ரசிகர்களும் ஒரு படி மேலே போய் ஒருவரை, மற்றொருவர் தாக்கும் பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்கான பாடல் தொடர்பாக வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்று இருந்தனர். அந்தப் பணி முடிந்து சென்னை திரும்பிய நிலையில், வடிவேலுவுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் வடிவேலு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் வடிவேலு உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், "அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. வடிவேலுவுக்கு முதல்நிலை அறிகுறி, S Drop அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்" என அவர் கூறியுள்ளார்!

ஒமிக்ரான் எனும் புதியவகை கொரோனா உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது.

அவ்வகையில் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 23 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த மாதம் 24-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது!

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் கொடுத்த லீலாவதி காலமானார்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் அண்ணன் மகளும், எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்தவருமான எம்.ஜி.சி. லீலாவதி இன்று சென்னையில் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த லீலாவதி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி. தனது சித்தப்பா, எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கேரளத்தில் வசித்து வந்த லீலாவதி, செய்தித்தாள்கள் வழியாக இதனை அறிந்திருக்கிறார்.

உடனடியாக, தனது கணவரின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்த லீலாவதி, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, எம்ஜிஆருக்குத் தனது சிறுநீரகத்தைத் தானமளித்தார்.

ஆனால், லீலாவதிதான் தனக்கு சிறுநீரகத்தை தானமளித்தார் என்பதை முதலில் எம்ஜிஆருக்கு யாரும் சொல்லவில்லை. அவர் உணர்ச்சிவயப்படுவார் என்பதால், அவருக்கு தெரியப்படுத்தாமல் இருந்தார்கள்.

எம்ஜிஆர் பூரண குணமடைந்து, திரும்பிய பிறகு, ஒரு நாள் நாளிதழ்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்து கொண்டு நெகிழ்ந்தார்!

 

 

சென்னை, நவம்பர் 23: நடிகர் சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பா.ம.க. தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும், வன்னியர் தலைவர் ஒருவரையும்  தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஜெய் பீம் படத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய்பீம் பட விவகாரத்தில் மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன் என்று அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் கோர்ட்டில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை வெளியிட்ட ஓடிடி தளம் மீதும் வழக்கு தொடரபட்டது.

அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு சிதம்பரம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில், சிகாகோ நகரத்திற்கு காதி துணி அறிமுக விஷயமாக சென்று வந்தார் கமல். இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கமல், தற்போது போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகாகோ சென்று வந்ததும் கடந்த சனி, ஞாயிறு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடத்தி முடித்தார். அதாவது இந்த இரண்டு நாள் எபிசோடுகளின் படப்பிடிப்பு சனிக்கிழமை அன்றே முடிந்துவிடுவது வழக்கம். அதன்பின்னரே தனக்கு கொரோனா பாதிப்பு என கமலுக்கு தெரிய வந்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மருத்துவமனையில் சிகிச்சை ஒரு வாரம், தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு வாரம் என இரண்டு வாரங்கள் கமல் ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்பதால் வரும் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலால் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் வரும் வாரம் மாற்று ஏற்பாடாக ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

காரணம் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு வாரங்கள் அவர் படப்பிடிப்புக்காகச் செல்லவேண்டி இருந்தது.

அந்தசமயத்தில் அவருக்கு பதிலாக அவரது மருமகள் சமந்தா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின் மீண்டும் நாகார்ஜுனா வந்து பொறுப்பேற்று கொண்டார், அதே பாணியை பின்பற்றி இங்கே கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது!

விளம்பரம்:


 

புதுடெல்லி, நவம்பர் 19: வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என இந்திய பிரதமர் மோடி கூறினார்.

இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து  3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார் .

வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை.

வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்.  குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்றார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தைததையடுத்து டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்!


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக  சென்னையில் பெரும்பாலும்  கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாl, இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்த ஸ்டாலின், இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என தெரிவித்துள்ளார்!

 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், நேற்று மாலை வழக்கமான பரிசோதனைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனை சென்றிருப்பதாகவும், லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். 

மருத்துவ பரிசோதனை முடிந்து ஒருநாள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது!

 

விளம்பரம்:

 

 

 

டெல்லி, அக்டோபர் 25: திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

 டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார்.

 தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

விளம்பரம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பற்றி அவதூறு கிளப்பியது முதல், ஜோதிகா, சூரியா, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களைத் தரக்குறைவாகப் பேசியது வரை ஏராளமான சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வந்த மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சமீபத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தாக்கி பேசியதற்காகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு, செப்டம்பர் 22 புதன்கிழமை அன்று சென்னை கிழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது!

சென்னை, ஆகஸ்ட் 21: சேரன் பாண்டியன் திரைப்படத்தில் தங்கையாக நடித்து மனம் கவர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை, சித்ரா மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' 'ஊர்காவலன்' 'என் தங்கச்சி படிச்சவ' 'வெள்ளையத்தேவன்' உள்பட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

 

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 28 ஆயிரத்து 204 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,19,98,158 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 373 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,682 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,511 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,11,80,968 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,88,508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சுமார் 51 கோடியே 45 லட்சம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானவர் சினேகன். சில காலம் வாய்ப்புகள் வராதநிலையில் பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். கட்டிபிடி வைத்தியர் என்ற பட்டப்பெயர் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பெற்று வைரலானார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தன் உறவினர் பெண்ணை திருமணம் செய்யபோவதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் பரவியது. இந்நிலையில் சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை 8 வருடமாக காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ஜூலை 29ல் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக சினேகன் கன்னிகா ரவி எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சென்னை, ஜூலை 25: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மோசமான கார் விபத்தில் 'பிக் பாஸ்' புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருடன் பயணம் செய்த அவரது தோழி வந்தி ரெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வந்தி ரெட்டி பவானி அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறவர். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத்.

காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அஜாக்கிரதையாக காரை ஓட்டி வந்ததாக யாஷிகா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது உயிர்த் தோழி மரணமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.