loader

All News

பத்துகேவ்ஸ் நவம்பர்- 21

கார்த்திகை முதல் நாளன்று சபரிமலை ஐயப்பன் சுவாமியை வேண்டி பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதத்தில் இருந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.

கேரளாவில் உள்ள சபரிமலை திருக்கோயிலில் இந்த நேர்த்திக்கடன் பூஜை விசேஷமாக இருக்கும். தற்போது அதே போல் மலேசியாவிலும் பத்துமலை ஐயப்பன் தேவஸ்தானம்  அத்தகைய நேர்த்திக்கடனுக்கு புகழ்பெற்ற ஒரு திருத்தலமாக விளங்குகின்றது.

கேரளாவிற்குச் சென்று தங்கள் நேர்த்திகடன் செலுத்த முடியாதவர்கள், பத்துமலை ஐயப்பன்  திருக்கோயிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றலாம் என்கிறார், பத்துமலை ஐயப்பன் சுவாமி தேவஸ்தான தலைவர் யுவராஜா.

அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திகடனுக்காக வேண்டி மாலை அணிந்துகொண்டதாக அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து, இங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு ஐயப்பன் தரிசனம் பெறவிருப்பதாக யுவராஜா தெரிவித்தார்.

சபரிமலையில் மிகவும் பிரசித்திபெற்ற பூஜையான  ‘1008 கலச பூஜை’, பத்துமலை ஐயப்பன் சன்னதியிலும்  டிசம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சபரிமலை மேல்சாந்தி தலைமையில் நடைபெறவிருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த பூஜையில் ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு  ஐயனின் ஆசி பெற அழைக்கப்படுகின்றனர்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு படி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதோடு, அவர்களுடன் ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, பேரின்பம் மலேசியாவின் ஆலோசகர்  தாமோதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்!

யூபிஎஸ்ஆர்  தேர்வு முடிவுகள் மூலம்  நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை மீண்டும் உயர்ந்துள்ளது தெரிகிறது.

நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 8A, 7A, 6A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த யூபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம்  68.9%ஆக இருந்தது. இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 78.51%ஆக அதிகரித்துள்ளது. மலாய், சீனப்பள்ளிகளை ஒப்பிடுகையில் தமிழ்ப்பள்ளிகளின் அடைவு நிலையே சிறப்பாக உள்ளது. இது தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திற்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.

முடிவுகளின் முழு விவரத்தை விரைவில் ‘தமிழ் லென்ஸ்’ வழங்கும் – மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

 

நமது  ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் எடுக்கப் பயன்படும் செயலிகளில் மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும், பயனாளர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இதில், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 எக்ஸ்.எல் மற்றும் பிக்சல் 3  ஸ்மார்ட்போன் செயலிகளும் விதிவிலக்கல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகைப்படச் செயலிகளின் இந்தக் குளறுபடி குறித்து எரிஸ் யாலன் என்கிற கூகுள் பாதுகாப்பு ஆய்வாளர் பாதுகாப்பு குறைபாடு குறித்து கூகுள் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 4-ஆம் தேதி யாலன் அளித்த புகாரை ஆகஸ்ட் 11-ஆம் தேதி கூகுள் நிறுவனம் ஏற்றுக்கொண்டதோடு பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்துள்ளது.

இதில் அதிகமாக சாம்சங் மொபைல்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிலும் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தங்கள் குழுவின் சந்தேகத்தை உறுதி செய்துள்ளதாகவும். இந்தப் பிரச்னை கூகுள் பிக்சல் போன்களில் மட்டுமல்லாமல், மற்ற  ஆண்ட்ராய்டு செயலிகளிலும் உள்ளதையும் கூகுள் உறுதி செய்துள்ளதாக யாலன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூகுள்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸை சரி செய்வதற்குத் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது, கூடிய விரைவில் இது சரி செய்யப்படும். ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவோர் கூகுளால் பரிசோதனை செய்யப்பட்ட செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் படி கூகுள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

 

பினாங்கு மலேசியத்  திராவிடர் கழகத்தின் சார்பில், அதன் திட்டப் பரிந்துரைகள் பினாங்கு  மாநில முதல்வர் சௌ கொன் யோவ்விடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

கொம்தார் 28 வது மாடியில் நடத்தப்பட்ட இதற்கான  சந்திப்புக் கூட்டத்தில், பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் இராமசாமியும் கலந்துகொண்டு, பெரியாரின் கழகப் பணிகள் குறித்து முதல்வருக்கு விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து மதிக தலைவர் ச.த.அண்ணாமலை ஆவணக் கோப்பு அடங்கிய  மதிக-வின் பரிந்துரையை முதல்வரிடம் வழங்கினார். 

மேலும் மதிக மாநிலக் கழகத்தின் 2020 திட்டங்கள் குறித்து சௌ கொன் யோவ்விடம் விவரிக்கப்பட்டது. மதிக மாநிலக் கட்டடம் மூன்றாவது மாடியில் இருப்பதால், புதிய இடத்தை அடையாளங்காணுமாறு துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ஆலோசனையை முன் வைத்தார்.

1946-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கழகம், தற்போது பினாங்கு மாநிலத்தில் 13 கிளைகள் கொண்டு செயல்படுகிறது. நாடு தழுவிய நிலையில்  5,000 உறுப்பினர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

மலேசியத்  திராவிடர் கழகம் பினாங்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் குணாளன்,  செயலாளர் மருதமுத்து, பொருளாளர் முனியாண்டி, இளைஞர் பிரிவுத் தலைவர் விக்னேஷ் பாபு, மகளிர் அணித் தலைவி யோகேஸ்வரி மற்றும் செயலவை உறுப்பினர்கள்  கொம்தாரில் அமைந்திருக்கும் முதல்வர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்டனர்.

இக்கழகத்தின் வருடாந்திர திட்டங்கள் குறிப்பாக  ஆறு மெகா திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு நிதியுதவியும் கோரப்பட்டது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் சௌ கொன் யோவ் கூறினார்.

மாநில அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் இச்சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் துணைத் தலைவர் குணாளன் தெரிவித்தார்!

 

கோலாலம்பூர் நவம்பர்-20

நிதி அமைச்சு  தேசிய வர்த்தக சம்மேளனம் (என்.சி.சி.ஐ.எம்), மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம் ஏற்பாட்டில், எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதி  தலைநகர் மெட்ரேட் மண்டபத்தில், மாலை 5 மணி முதல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

நிதி அமைச்சர் லிம் குவான் எங் தலைமையில்,  என்.சி.சி.ஐ.எம் தலைவர் டான் ஸ்ரீ தெர் மற்றும் மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன்  ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை அழைப்பதாக  மைக்கியின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார். 

அரசாங்க வர்த்தக அமைப்பின் அதிகாரிகள்,  மாநில வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின்  உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இந்தத் தீபாவளி நிகழ்வு, வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைய உள்ளது.  

ஆகையால், புதிய வர்த்தகர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ள மைக்கி அழைப்பதாக  டாக்டர் குமாரராஜா தெரிவித்தார்.

பல்வேறு சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தீபாவளி உபசரிப்பில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு

 013-453 1761 என்ற எண்ணில் அழைக்கலாம்!

கோலாலம்பூர் நவம்பர்- 19

டத்தோ ஸ்ரீ ஹீசாமுடீன் தலைமையில் தேசிய முன்னணியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவர்  அஸ்மின் அலியை அவரது இல்லத்தில் ரகசியமாகச் சந்தித்ததைத் தொடர்ந்து, பல விதமான முணு முணுப்புகள்  அரசியல் வட்டாரம் தொடங்கி, டீக்கடை வரை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 1 எம்டிபி வழக்கில் சிக்கித் தனது வழக்கு விசாரணைக்காக ஜாலான் டூத்தா உயர் நீதிமன்றத்திற்கு வருகையளித்த முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்பிடம் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து கேட்டபோது, "ஓ அப்படியா எனக்கு அழைப்பு வரவில்லை... அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்" எனப் பதில் அளித்துள்ளார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னையைக் கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள். பக்காத்தான் உள்விவகாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் மூக்கை நுழைக்கவேண்டாம் என அவர் கருத்து தெரிவித்தார்.
நம் கட்சியை வலுப்படுத்த வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது. முதலில் சொந்த வீட்டுப் பிரச்னையைப் பாரப்போம், பிறகு அடுத்த வீட்டுப் பிரச்னைக்குப் போகலாம். நான் என் சொந்த வீட்டுப் பிரச்னையில் இருக்கிறேன்.  தேசிய முன்னணி என்கிற எனது வீட்டை வலுப்படுத்தும் வேலை நிறைய உள்ளது. அதோடு மக்களைச் சந்திக்க வேண்டிய நிகழ்ச்சிகள் நிறைய உள்ளது. நான் அதில் பிஸியாக உள்ளேன். ஆகையால், அவர்கள் என்னை அழைக்காத வரை எனக்கு மகிழ்ச்சி என டத்தோஸ்ரீ நஜீப் நக்கலாகக் கூறினார்!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் நவம்பர் - 19

தற்போது  வெளியீடு கண்டுள்ள மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு', வெளியீடு கண்ட ஜந்தே நாட்களில் மூன்று லட்சம் வெள்ளி வசூலைக் குவித்துள்ளது. இது இப்படத்திற்கு நல்லதொரு  துவக்கமாக அமைந்துள்ளது.

ஷாலினி, ஷைலா நாயர் இருவருக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இயக்குனர் சதீஸ் நடராஜன் தனது முதல் படத்திலேயே சிறந்த மலேசிய இயக்குநர் தரவரிசைக்குத் தேர்வு பெற்றுவிட்டார்.  பாடகியாக, மென்மையான நாயகியாக அனைவரும் அறிந்த டத்தின் ஷைலா நாயர், இப்போது மாஸ் ஹிரோயினாக மலேசிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஜந்தே நாட்களில் 3 லட்சம்  வசூல் செய்ததன் மூலம், இவ்வாண்டின் சிறந்த வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற  பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியத் தமிழ்த் திரை உலகின் வசூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தை  இப்படம் முறியடிக்குமா?  பொறுத்திருந்து பார்ப்போம்!

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தோல்வியச் சந்திக்கும் என தாம் எதிர்பார்த்ததாகவும்,  ஆனால், இந்த அளவிற்கு தோற்கடிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய் மக்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த மகாதீர், 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இது குறித்து கூட்டணிக் கட்சியினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்களர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்!

 

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், இந்த கூட்டணிக்கு அஜித் விஜய் ஆதரவு தர முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய் கூட்டணி என்று ஒரு பொய்யான வதந்தி மட்டுமே பரவி வந்தது. ஆனால் இந்த வதந்தி தற்போது உண்மையாகி விடும் அதிசயம் நடைபெறப்போகிறது

நேற்று 'கமல்ஹாசன் 60' நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சந்திரசேகர் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

இதனையடுத்து இன்று காலை ரஜினி, கமல் இணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் அடுத்த கட்டமாக எஸ்ஏ சந்திரசேகர் இரு தரப்பையும் இணைக்கும் வகையில் ஒரு முக்கிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் இந்த கூட்டணி உருவானால் விஜய் கண்டிப்பாக ஆதரவு தருவார் என்றும் அதற்கு நான் உறுதி என்றும் எஸ்.ஏசந்திரசேகர் வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் அதுமட்டுமின்றி அஜித்திடமும் பேசி இந்த கூட்டணிக்கு ஆதரவு வாங்கி தர முயற்சி செய்யவிருப்பதாகவும் எஸ்.ஏசந்திரசேகர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சிகள் கிடையாதா? என்று அனைத்து மக்களும் ஏங்கிவரும் நிலையில் தற்போது ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினால் அந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது!

 

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் இலங்கை மக்கள் முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும்  ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத்  துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்து. இதனையடுத்து 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  

இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், அதிகளவில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர்.  இதனால் வெற்றி வேட்பாளரை அறிவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

52.25 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார்.  சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கை அதிபராகக் கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

சென்னை, நவ.16- 

சென்னையில்  நடைபெற்ற மூன்றாம் அனைத்துலக தமிழ்த் தொழிலதிபர்கள்  மாநாட்டில் மலேசியர்கள் ஐவருக்குச் சாதனை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஒரு தனி மனிதனாக மருத்துவக் கல்லூரியை நிறுவியதோடு, உலக நாடுகளிலும் மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்தியுள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் தோற்றுநர்  டான்ஸ்ரீ டத்தோ பாலனுக்கு, 'தமிழ் உலக கல்வித் தந்தை 'எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வழி தவறிச் செல்லும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக இருந்து வரும் 'மைஸ்கில்ஸ்' கல்லூரியை நிறுவிய இயக்குநர் வழக்கறிஞர் பசுபதிக்கு 'நம்பிக்கை சுடர்ஒளி' எனும் விருது வழங்கப்பட்டது.

மலேசியாவில் ஏற்றுமதி, இறக்குமதி துறையில்  முன்னோடி வர்த்தகராக இருந்து வரும் டத்தோஸ்ரீ ஆண்டிக்கு :முன்னோடி வர்த்தகர்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஒரு முன்னோடி பெண் வர்த்தகரான பவானி விஸ்வநாதனுக்கு 'பெண் சுடரொளி' எனும் விருது வழங்கப்பட்டது.

மலேசியாவில் தமிழ்த் துறையில் மிகவும் பிரபலமான பாண்டிதுரைக்கு 'தமிழ் உலக படைப்பாற்றல் மேதை' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

'எழுமின் தி ரைஸ்' எனும் அமைப்பு நடத்திய இந்த  மாநாடு, நவம்பர் 14 தொடங்கி 16 வரை சென்னை, நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் 35 நாடுகளைச் சேர்ந்த 1500 பேராளர்கள் பங்கேற்பில் மிகச் சிறப்பாக நடந்தேறியது!

 

 

தஞ்சோங் பியாய் நவம்பர் - 16 

 

நாட்டில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தேசிய முன்னணி 25466 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. 

ஆளும் கட்சியான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 10380 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் தேசிய முன்னணியிடம் தனது தொகுதியைப் பறி கொடுத்துள்ளது.

15086 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி  வேட்பாளர் வீ ஜெக் செங் வெற்றிபெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 25466.

 

அவரைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்  கர்மாய்னீ சார்டினி 10,380 வாக்குகளும், கெராக்கான் வேட்பாளர்  வெண்டி சுப்ரமணியம் 1707 வாக்குகளும், பெர்ஜாசா வேட்பாளர் பட்ரூள் ஹீசாம் 850 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்களான அங் சுவான் லோக் 380 வாக்குகள், ஃபாரிடா அர்யானி 32 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதில் 565 வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆகும்.

 

மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள தேசிய முன்னணி, சீன வாக்காளர்களின் வாக்குகளை இம்முறை தன் வசப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து  கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய ம.சி.ச மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்பது தெரிகிறது!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலவரப்படி தேசிய முன்னனி  வேட்பாளர் வீ ஜெக் செங் 276 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பக்காத்தான் வேட்பாளர் 164  வாக்குகள் பெற்று நெருங்கி வருகிறார். கெராக்கான் வேட்பாளர்  வெண்டி சுப்ரமணியம் 3 வாக்குகளும், பெர்ஜாசா வேட்பாளர் 12 வாக்குகளளும் பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர் அங் சுவான் லொக் 1 வாக்கு பெற்றுள்ள நிலையில், மற்றொரு சுயேட்சை வேட்பாளர்  ஃபாரிடா எந்த வாக்கையும் இதுவரை பெறவில்லை.

உடனக்குடன் செய்திகளுக்கு 'தமிழ் லென்ஸ்:  அகப்பக்கத்தை வலம் வருங்கள்!

www.tamillens.com
tamillensmedia fb page

தமிழ்நாடு, தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் ‘பிகில்’ படத்திற்கு பேனர் வைப்பதைத் தவிர்த்து 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்புள்ள விவசாயக் கடன்களை அடைத்துள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் தங்களின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 

'பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 

 

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதற்குப் பதிலாக, தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ‘பிகில்’ படத்திற்கு பேனர் வைப்பதைத் தவிர்த்து 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்புள்ள விவசாயக் கடன்களை அடைத்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி விஜய் ரசிகர்கள் மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மானிட்டர்களை அமைத்துக் கொடுத்தனர். 

 

தென்காசியில் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரண்டு இரத்த அழுத்த பரிசோதனைக் கருவிகளை விஜய் ரசிகர்கள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது!

 

கோலாலம்பூர் நவம்பர்- 16

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை பதவி விலகச் சொல்லி ஒரு தரப்பினர் அண்மையில் அழுத்தம் கொடுத்தனர். அவர்கள் தியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் பதவி விலகும் படி தங்களது கருத்துகளை முன் வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து நான் பாதியில் விட்டுச் செல்லமாட்டேன் என பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

"மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனது மக்கள் சேவை எப்போதும் தொடரும். அடுத்த பொதுத்தேர்தலில் பத்து தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேனா, இல்லையா என்பதைப் பிறகு பார்ப்போம். ஆனால் இப்போது எனக்கு கடமை இருக்கு. பாதியில் செல்லமாட்டேன் எனப்  பிரபாகரன் பதில் அடி கொடுத்தார்.

நேற்று இரவு ஜாலான் ஈப்போ பாப்பா ரீச் உணவகத்தில்  ஒரு சந்திப்பிற்குச் சென்ற பிரபாகரன், தனது வாகன ஓட்டுனரை இல்லம் திரும்பச்சொல்விட்டு சந்திப்பில் ஈடுபட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வாகனத்தில் ஒரே முட்டைகள் வீசப்பட்டிருந்தன.  

யாரோ பொறுப்பற்ற சிலர் இதைச் செய்துள்ளனர் என்பதை உணர்ந்த பிரபாகரன்  பாதுகாப்பு கருதி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பு வந்த பிறகு, பத்து நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிலர் மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் யார்?  அடுத்தக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யவிருக்கிறார் பிரபாகரன்?

கோலாலம்பூர் நவம்பர்- 16

மூத்தப் பத்திரிகையாளரும், மக்கள் ஓசையின் முன்னாள் நிருபருமான தாரா எழிலழகன்  நேற்று இரவு 9.45 மணியளவில் காலமானார்.  சில ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட தாரா, பத்திரிகைத் துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.
உடல் நலம் சுகம் இல்லாமல் இருந்த அவரின் மருத்துவச் செலவிற்கு அவ்வப்போது  தமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் நிதி திரட்டி,  மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் வாயிலாக உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று  உடல் நலக் குறைவால் அவர் காலமானார்.
அன்னாரின்  குடும்பத்திற்கு மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்  ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாக, அதன் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார். மேலும், அன்னாரின் இறுதிச் சடங்கிற்கு சங்கம்  1000 வெள்ளி  வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே  இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக் கிழமை DG-23 Block D, jalan PJs 1/52, Petaling Jaya Utama 46000 PJ என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு : 014-3678310 அல்லது 0146279459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்!

தஞ்சோங் பியாய் நவம்பர்- 16

பரபரப்பாக நடந்துவரும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடபெற்று வரும் வேளையில், இன்று காலை 5 மணிக்கே தன் கணவர் சல்லே டாலானுடன்  வாக்களிக்கச் சென்ற 100 வயது நிரம்பிய மூதாட்டி ஜெனாப் ஜாமான், இது வரை நடந்த 14 பொதுத் தேர்தலிலும் தவறாமல் வாக்களித்ததாகவும்,  இந்த இடைத்தேர்தலோடு 15 வது முறையாக வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது  என்பதை மக்கள் உணர்ந்து தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார். 

100 வயது நிரம்பிய நான்  இன்னும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளேன். காரணம் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. ஆகையால் இவ்வட்டார மக்கள் இன்று அவர்களது கடமையைச் சரியாகச் செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்!

புதுடில்லி : டில்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதனால் சுத்தமான காற்று கிடைக்காதா? என ஏங்கித் தவிப்போருக்கு என்றே, ஆக்சிஜன் பார் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் டில்லியில். 

தெற்கு டில்லியின் சாக்கெட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஸிஜன் பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள், லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூகலிப்டஸ், லாவண்டர் உள்ளிட்ட 7 நறுமணங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதனோடு சேர்த்து ஆக்சிஜனை சுவாசிக்கலாம்.

பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த பார்!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

சென்னை, நவ.15-

மலேசிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை உலக அளவில் விரிவு படுத்துவதற்கு ஐ.டி எனும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றி வருவதாக குளோசப் நிறுவன இயக்குநர் ஜீவன் முத்துப்பிள்ளை கூறினார்.

உலக நாடுகள் தகவல் தொழில்நுட்ப முறையில் பயணித்து கொண்டிருக்கிறது. எல்லாம் கணினிமயமாகி விட்டது. நாம் உலகத் தொடர்பை உள்ளங்கைக்கு கொண்டு வந்து விட்டோம். அந்த வகையில் நாம் நமது வர்த்தகத்தை உலகளவில் மேற்கொள்வதற்கு தகவல் தொழில்நுட்ப முறை முக்கியப் பங்காற்றி வருவதாக சென்னையில் தி ரைஸ் மாநாட்டில் கலந்து கொண்ட போது மலேசிய செய்தியாளர்களிடம் ஜீவன் அவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் ஒருவரின் வர்த்தகத்தை உலக அரங்கிற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறோம். அந்த வகையில் மலேசியாவில் பல நிறுவனங்களின் வர்த்தகத்தை உலக அரங்கில் பிரபலப்படுத்தியுள்ளதாக ஜீவன் சொன்னார்.

எங்கள் குளோசப் நிறுவனம் அரசாங்கத்திற்கும் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து வருகிறது. நான் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். அதேநேரத்தில் மலேசிய வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை தகவல் தொழில்நுட்பம் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்ல ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எழுமின் தி ரைஸ் அமைப்பு குறித்த தகவல்களை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பணியையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் உலகத் தமிழர்களை வர்த்தகம் வழி ஒன்றிணைக்கும் ஒரு தளமாக தி ரைஸ் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் உலகத் தமிழ் வர்த்தகர்களுக்கு ஒரு பாலமாக இருந்து வருகிறது என்று ஜீவன் முத்துப்பிள்ளை பாராட்டினார்!

சென்னை நவ.15- 

உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரு வர்த்தக உறவை எழுமின் தி ரைஸ் மாநாடு அமைத்துள்ளதாக கிரீன் விஷன் ரிசோர்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ வி.எஸ். மோகன் கூறியுள்ளார்.

இந்த மூன்று நாள் மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தத்தம் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை மலேசிய வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பாக சீனா, இந்தியா, மியான்மார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன்வழி பல வர்த்தக வாய்ப்புகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக டத்தோ வி.எஸ். மோகன் தெரிவித்தார்.

உலக நாடுகளில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்பட்டுள்ள வேளையில், எழுமின் தி ரைஸ் மாநாடு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை வர்த்தகம் வழி ஒன்றிணைக்கும் ஒரு மாநாடு இதுவாகும்.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகத் தமிழர்கள் கலந்து கொண்டு உலக நாடுகளின் வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கு வழி தேடிக் கொண்டுள்ளதாக  டத்தோ வி.எஸ்.மோகன் குறிப்பிட்டுள்ளார்!

கோலாலம்பூர் நவம்பர் - 15

64 திரை அரங்கில் நேற்று  முதல் திரையிடப்பட்டுள்ள ‘புலனாய்வு’ திரைப்படம் முதல் நாளே மக்களைக் கவரத் தொடங்கிவிட்டது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கதையில் தொய்வு இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதோடு ஒவ்வொரு காட்சியும் அடுத்தக் கட்ட நகர்வின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் கருத்து அமைந்திருக்கிறது. அந்த வகையில் படத்தின் இயக்குனர்களான சதீஸ் நடராஜன், ஷாலினி பாலசுந்திரத்திற்குப் பாராட்டுகள். இனி வரும் காலங்களில் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரை ‘பைரவி’ என்று  அழைக்கப்படுவார் போல. அந்த அளவிற்கு பைரவி கதாப்பாத்திரம் இப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளது. இசை படத்திற்கு உயிரோட்டம்.அதோடு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறந்த தரம் எனவும்  பேசப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அடுத்த மூன்று நாட்கள் இப்படத்தின் வெற்றி நகர்வைத் தீர்மானிக்கும். அந்த வகையில் அடுத்த முன்று நாட்கள்  64 திரை அரங்குகளில் இந்தப் பைரவியின் ஆட்டம்  இத்திரைப்படத்தின் வசூலைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் வெற்றிப்படமாக  அமையும் என ரசிகர்கள்  கருத்துக்களைக் கூறியுள்ளனர். மலேசியத் திரைப்படம் இப்படிப்பட்ட தரத்தில் வெளிவரவேண்டும் எனவும் மக்களின் கருத்து உள்ளது.

‘வெடிகுண்டு பசங்க’ வசூலை முறியடிக்குமா? ‘புலனாய்வு’ திரைப்படத்தின் வசூல்  பொறுத்திருந்து  பார்ப்போம்!